திருச்சி பொன்மலை காவல் உதவி ஆணையர் தமிழ்மாறன் தலைமை யிலான தனிப்படை போலீஸார், அங்குள்ள 14 காவல்நிலையங்களிலும் கடந்த மார்ச் மாதம் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது, அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் 46 ஆயிரம் ரூபாய், தில்லை நகர் காவல்நிலையத்தில் 24 ஆயிரம் ரூபாய் என காவல்நிலையங்களுக்கு வந்திருந்த ஏறத்தாழ 100 கவர்களை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, கைநீட்டி மொய் வாங்கிய சிறப்பு காவல் ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், எழுத்தர்கள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் என பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் பின்னணியில், "திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கிய கே.என்.நேருதான், தபால் ஓட்டைப் போடுவதற்காக, காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், அவர்கள் பதவிக்கு தகுந்தாற்போல் கவரில் வைத்து பணம் கொடுத்தார்' என்ற செய்தியை ஒரு டீம் குபுகுபுவெனப் பரப்பியது. ஆனால், இந்தப் பண விவகாரத்தில் கே.என்.நேருவின் பெயரை முடிச்சுப் போட்டுப் பரப்பியது, நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் ராமச்சந்திரன்தான் என்கிறார்கள் காக்கிகள்.
அவர்களிடம் இதுகுறித்து நாம் விசாரித்தபோது... "இந்த பண விநியோக சர்ச்சையில், கே.என் நேருவின் பெயரை கட்டாயமாகச் சேர்க்கும்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு காவலரிடம் திருச்சி நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் சொன்னதோடு, அதைக் கைப்பட எழுதிக் கொடுக்கும்படியும் வற்புறுத்தினார். இதுகுறித்து அவர் பேசிய ஆடியோவைப் பதிவுசெய்த பாதிக்கப்பட்ட காவலர்கள், அந்தப் பதிவை, அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து, அவரிடம் அதைப் போட்டுக் காட்டிவிட்டார்கள். அவரும் உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டார். நேருவுக்கு எதிராகக் களமிறங்கிய உதவி ஆணையர் ராமச்சந்தி ரன், இந்த விவகாரத்தைத் திசை திருப்புவதற்காகவே, பழியை திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த லோகநாதன் மீது போடுவதற்காக, அவரைத் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பினார். ஆனால் ஆடியோ குரலே, அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது''’என்கிறார்கள் புன்னகையோடு.
இந்த வில்லங்க விவகாரம், திருச்சியையே பரபரப்பில் மூழ்கடித்து வருகிறது.