ஈரோடு மாவட்டம் பெருந் துறையிலுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் சில தொழில் நிறுவனங்கள், விஷக்கழிவுகளை நீர் நிலைகளில் கலந்து கொலை பாதகச் செயல்களை செய்கின்றன. பெருந்துறை சிப்காட் தொழிற் பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, சாயச் சலவை ஆலைகள், கெமிக்கல் நிறுவனங்கள், இரும்பு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நிலத்தையும், அங்கு வாழும் மக்களையும், கால்நடைகளையும் முடமாக்கி வருகிறது.
கடந்த மார்ச் 22ஆம் தேதி மிகக்கொடூரமான ஒரு சம்பவம் இங்கு நிகழ்ந்துள்ளது. சித்தோடு அருகேயுள்ள நசியனூர் கிராமம் ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஓடை உள்ளது. குளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம் எனப் பல கிராமங்களைக் கடந்து ஈரோடு அருகேயுள்ள கனிராவுத்தர்குளத்தில் அது கலக்கிறது. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம், ஆயிரக்கணக்கான விவசாயிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்த கசிவு நீர் ஓடை. இதில்தான் 22ஆம் தேதி நள்ளிரவு மிகவும் அபாயகரமான ரசாயன நச்சுக்கழிவுகளை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவந்து கலந்துள்ளார்கள்.
நள்ளிரவில் யாரும் பார்க்க மாட்டார்களென்ற எண்ணத்தில் இப்படிச் செய்திருக்கிறார்கள். விளைவு? விடிந்தபின் அந்த ஓடை நீர் முழுக்க மஞ்சள் நிறமாக மாற, மீன்களெல்லாம் செத்துமிதந்திருக்கின்றன. அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் அதிகாரிகளும் இணைந்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் ஆய்வுசெய்திருக்கிறார்கள். அதில், பெருந்துறை சிப்காட் தொழில் நிறுவனத் தில் இயங்குகிற ஆர்.கே. ஸ்டீல்ஸ் என்ற நிறுவனத்தின் விஷக்கழிவுகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிறுவனம் துருப்பிடித்த இரும்புத் தகடுகளிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்காக அதிக சக்திகளைக்கொண்ட அமிலத்தை பயன்படுத்துகிறது. இந்தக் கழிவுகளை சுமார் 25,000 லிட்டர் அளவுக்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீரில் கொட்டியுள்ளார்கள். ஓடையில் கலந்த விஷக்கழிவு நீர் இரவு முழுக்க பயணித்து ஈரோடு கனி ராவுத்தர் குளத்தில் இறுதியாகக் கலந்துள்ளது. 'தொழில் செய்கிறோம், மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கிறோம்' என்கிற பெயரில் மண்ணையும் மனிதர்களையும் மலடாக்குகிறார்கள் இந்த குற்றவாளிகள்.
"இந்த தொழிற்சாலை ஏற்கெனவே இரண்டு முறை இதேபோல் ரசாயனக் கழிவுகளை நீர் நிலை யில் கலந்து மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட்ட தால் அந்த தொழிற்சாலை தடை செய்யப்பட்டு, மீண்டும் அனுமதி பெற்று இயங்குகிறது. இப்போது ஒரு துளியும் மனிதாபிமானமில்லாமல் இந்த கொடுமையை செய்துள்ளது. மக்கள் கொதித் தெழுந்ததன் காரணமாக தற்காலிகமாக அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளார்கள். இதுபோன்ற நாசகார செயல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மிகக்கடுமையான குற்ற நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
பெருந்துறை சிப்காட்டில் இயங்குகிற அனைத்து தொழிற்சாலைகளின் கழிவு நீரையும் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இதற்கென தி.மு.க. அரசு பதவியேற்றதும் 40 கோடி மதிப்பில் 20 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பொது சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க சென்ற 20.11.2022ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அடுத்த நாளே பெருந்துறை சிப்காட்டுக்கு நேரில் வந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. அந்த அரசாணையை வெளியிட்டு 7 அல்லது 8 மாதங்களுக்குள் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால் 16 மாதங்கள் கடந்துதான் ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது. இப்போது இரண்டு வருடம் கடந்துவிட்டது. இன்னும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி எந்த வகையிலும் துரிதப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அரசு கவனத்தில் கொண்டு மிக விரைவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 3ஆம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை பெருந் துறையில் வைத்துள்ளோம்'' என்றார் சிப்காட் தொழில் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில், "தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். யாரும் எதிர்பார்க்காத இரவு நேரத்தில் இதுபோன்ற படுபாதகச் செயலை சில நிறுவனங்கள் செய்வது சட்டப்படி மாபெரும் குற்றம். அவர்கள் மீது தகுந்த நட வடிக்கை எடுக்கிறோம்'' என்றனர். ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில் சாயச்சலவை ஆலைகள், தோல் தொழிற்சாலைகள், விஷக்கழிவு ஆலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவுகள் என ஏராளமான நச்சுக் கழிவுகள் கீழ்பவானி, காளிங்கராயன் மற்றும் பல்வேறு துணை வாய்க்கால்களில் கலந்து விவசாய நிலத்தையும், கால்நடைகளையும், மனிதர்களையும் பெருமளவு பாதிக்கின்றன. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகிறது.
சட்டத்துக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். அதை கவனிக்க வேண்டியது அரசின் கடமை. காற்றும், நீரும் விஷமாகாமல் தடுக்க அரசு இனிமேலாவது செயல்பட வேண்டும். மேலும் துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலினின் வாக்குறுதி யும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது''’ என்கிறார்கள் ஈரோடு மாவட்ட மக்களும் விவ சாயிகளும்.