திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ளது பிரபலமான செவன் ஸ்டார் பிரியாணி ஹோட்டல். பழைய பேருந்து நிலையம் அருகிலேயே இந்த அசைவ உணவகம் இருப்பதால் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் சாப்பிட வருவர். கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு ஆரணி லஷ்மி நகரை சேர்ந்த தொழிலாளி ஆனந்த், தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினியுடன் செவன் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து பிரியாணி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளனர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே வயிற்றுவலி வந்து வாந்தியெடுத்து மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
இதேபோல் ஆரணி பையூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாஸ்கரன், அவரது மனைவி சந்தியா, 4 வயது குழந்தை பிரணவ், ஆரணியை சேர்ந்த ஜாகீர், அவரது மகள் 4 வயது பாத்திமா, யாகூப், சீனுவாசன், விஷ்ணு, திலகவதி, சரவணன், செங்கம் தாலுக்கா காராப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன், மோனிகா, கார்த்திகா, லோகேஷ் போன்றோரும் இந்த ஹோட்டலில் அதே நாளில் அதே நேரத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்களும் வயிற்றுவலி, வாந்தியெடுத்து, மயக்கமாக அவர்களும் மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளனர்.
செப்டம்பர் 10-ஆம் தேதி மதியம் ஆனந்த், பிரிய தர்ஷினி, சரண் ஆகியோரை அவசரமாக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். லோசினியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். இந்ததகவல் பரவி ஆரணி மற்றும் சுற்று வட்டார மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து புகார் வந்ததும், ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீஸார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினர். ஹோட்டல் உரிமையாளர் அம்ஜித்பாஷா, சமையலர் முனியான்டியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆரணி கோட்டாட்சியர் கவிதா அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளார்.
நம்மிடம் பேசிய சமூகஆர்வலர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி, ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் 9 வயது மகன் யுவராஜ், ஹரிராமன் மகன் கள் 11 வயது மகேஷ், 9 வயது தனஞ் செழியன் மூவரும் வீட்டின் அருகிலுள்ள பெருமாள் கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டிருக்காங்க. கொஞ்ச நேரத்தி லேயே குழந்தைகள் வாந்தியெடுக்க உடனடியாக அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து காட்டியபோது, புட் பாய்ஸன் என மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டாங்க.
அவர்கள் சாப்பிட்ட மிட்டாயில் தான் பிரச்சனையென தெரிந்து ஆரணி யில் மிட்டாய், சாக்லெட் ஏஜென்ஸி நடத்திவரும் பாண்டியனை அழைத்து போலீஸ் விசாரிச்சது. மாவட்ட உணவு பாதுகாப்பு நலப்பிரிவு அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து மிட்டாய்கள், பாக்கெட்கள் எடுத்துவந்து ஆய்வுக்கு அனுப்புனாங்க. 12 நாட்களாகியும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு தெரியல. இப்போது ஹோட்டலில் சாப்பிட்ட குழந்தை பலியாகியுள்ளது, 20-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் இருக்காங்க. உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாதாமாதம் லஞ்சம் செல்வதால் எதையும் கண்டுகொள் ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர். இவர்களின் அலட்சியமே ஒரு உயிர் பலியாக காரணமென குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் ராமகிருஷ்ணனிடம் நாம் கேட்டபோது, "ஹோட்டலில் சாப்பிட்ட வர்கள் புட் பாய்சனால் பாதிக்கப்பட் டார்கள் என சிகிச்சையளித்த மருத்துவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி முதற்கட்ட நடவடிக்கை எடுத்து ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவு பொருட்களில் சாம்பிள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்தபின்பு அதற்கு தகுந்ததுபோல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் அனைவரும் புதியதாக இடமாறுதலில் வந்துள்ளார்கள். அவர்கள் ஏரியாவில் சர்வைவல் ஆகவே சில மாதங்களாகும். அப்படி யிருக்க, பணம் வாங்கிக்கொண்டு அலட்சியமாக இருந்தார் கள் என்கிற குற்றச்சாட்டை மறுக்கிறேன். அதேநேரத்தில் அதை மனதில் கொண்டும் விசாரிக்கிறேன்'' என்றார்.
குஜராத், மகாராஷ்ட்டிரா, மேற்குவங்கம் மாநிலங்களிலிருந்து தரமற்ற மிட்டாய்கள், சாக்லேட்கள், லேஸ்கள், ஜூஸ்கள் என பாக்கெட் அயிட்டங்கள் அதிகமாக தமிழ் நாட்டுக்குள் விற்பனைக்கு வருகின்றன. தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை பரவியுள்ள வடஇந்திய வியாபாரிகள்தான் மொத்த ஏஜென்ட். இந்த தரமற்ற தின்பண்டங்கள், கிராமங்கள், பேருந்து நிலையங்கள், நகரங்கள், பெருநகரங்கள் என எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இதன் லைசென்ஸ்களை ஆய்வு செய்தால் ஒன்று போலியாக இருக்கிறது அல்லது வேறு நிறுவனங்களின் லைசென்ஸ் எண்களை பாக்கெட்களில் பிரிண்ட் செய்துள்ளார்கள். அதிலுள்ள முகவரி அமைந்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லி கடிதம் அனுப்பினால் பெரும் பாலும் அங்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்கிறார்கள்.
ஹோட்டல்களில், பொறித்த, தாளித்த விற்பனை யாகாத மாமிசத்தை அப்படியே ப்ரீஸரில் எடுத்துவைத்து மறுநாள், அதற்கடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர். கெட்டுப்போன மாமிசம், மாமிசத்தில் ருசிக்காக, வாசனைக்காக கலந்துள்ள ரசாயனப்பொடிகள் உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
விஷத்தை உணவாக விற்கிறார்கள், அது குழந்தை களின் உயிரை சாப்பிடுகிறது.