"இரும்புத் திரை கொண்ட நாடு' என ஒரு காலத்தில் அழைக்கப் பட்டது ரஷ்யா. இப்போதும் அங்கே மர்மங்களுக்கு பஞ்சமில்லை. எதிர்க்கட்சியை சேர்ந்த அலெக்ஸி நாவன்லியை ஜனவரி 17, 2021-ல் கைது செய்திருக்கிறது ரஷ்ய அரசு. ஏற்கனவே ரஷ்ய ஆட்சியாளர்களால் விஷம் வைக்கப்பட்டதாகக் கூறி ஜெர்மனியின் பெர்லினில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டவர்தான் இந்த அலெக்ஸி. மிக இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வந்த அலெக்ஸி தன்னை விஷம் வைத்துக் கொல்ல முயன்ற ரஷ்யாவுக்கு ஏன் திரும்ப வேண்டும்? விஷம் வைத்து சாகடிக்கப்பட இருந்த எதிர்க்கட்சி தலைவர் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பினால் ரஷ்யா ஏன் கைது செய்யவேண்டும்?

russia

அமெரிக்காவுடனான பனிப்போர் காலத்துக்குப் பின் ரஷ்யா மெல்ல மெல்ல தன் பழைய வீச்சை இழந்தது. 1991-ல் கலையத் தொடங்கிய சோவியத் யூனியன், புதினின் காலகட்டத் தில் முழுமையாக முடிவுக்கு வந்தது. அதேசமயம் விளாடிமிர் புதினின் ஆட்சியில் ரஷ்யாவில் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

இங்குதான் கவனத்துக்கு வருகிறார் அலெக்ஸி நாவன்லி. அடிப்படையில் அரசியல்வாதி, வழக்கறிஞர், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர். ஊடகங்களால் புதின் மிகவும் அஞ்சும் நபர் என விவரிக்கப்படுபவர் அலெக்ஸி. "ருஷ்யன் ஆப் தி ஃப்யூச்சர்' எனும் எதிர்க்கட்சியின் தலைவரும்கூட.

Advertisment

சமூக ஊடகங்களில் வலுவான தாக்கத்தைக் கொண்டவர். இவரை யு டியூப்பில் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். டுவிட்டரிலும் செல்வாக்கு மிக்கவர். ரஷ்யாவின் ஆளுங்கட்சியின் புரட்டையும் ஊழலை யும் வெகுவாக விமர்சித்து ஆளுங்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்திவந்தார். பார்த்தது ரஷ்ய அரசு, அதிகாரிகளை வைத்து பொய்யான குற்றச்சாட்டுகளில் இரண்டுமுறை கைது செய்தது. வழக்கறிஞராயிற்றே இதற்கெல்லாம் அசருவாரா அலெக்ஸி. குற்றச்சாட்டுகளை உடைத்து வெளியே வந்தார்.

2016-ல் ரஷ்ய அதிபர் பதவிக்குப் போட்டியிட முனைந்தார். தேர்தல் ஆணையமும், ரஷ்ய தலைமை நீதிமன்றமும் புதினின் உதவிக்கு வந்தது. அலெக்ஸி மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டார். சைபீரியாவுக்கு அருகிலுள்ள டோம்ஸ்க் என்ற நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது, மிகத் தீவிரமான உடல்நலக் குறைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

russia

Advertisment

மாஸ்கோவில் அவரது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற யூகத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் உடலில் விஷம் கலந்திருந்தது. "ரஷ்ய ஆளும்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவரது செயல்பாடுகளே, அவர் விஷம் வைக்கப்படுவதற்குக் காரணம்' என உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன. எனினும் அதை ரஷ்யா உறுதியாக மறுத்தது.

அவருக்கு வைக்கப்பட்ட விஷமான நோவிசோக்கின் பூர்விகம் ரஷ்யாவைச் சேர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவர், ஆளும்கட்சிக்கு இடைஞ்சல் என எதிர்ப்பவர்களை ரஷ்யா அணுகும்முறை அறிந்தவர்கள் புதின் அரசு மீதுதான் குற்றம்சாட்டுகின்றனர்.

கிட்டத்தட்ட கோமா நிலையில் கொஞ்ச நாட்கள் காணப்பட்ட அலெக்ஸி, பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். சாவுக்குப் பக்கத்தில் சென்றுவந்த நிலையிலும், மன உறுதியுடன் "2020 டிசம்பர்வாக்கில் மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்புவேன்' எனக் கூறினார்.

இதையடுத்து "ரஷ்யா வந்தால் பழைய வழக்குகளுக்காக கைது செய்யப்படுவார்' என ரஷ்ய காவல்துறை கூற ஆரம்பித்தது. "எதைப் பற்றியும் கவலையில்லை தான் ரஷ்யா வருவது உறுதி'யெனச் சொன்ன அலெக்ஸி, சொன்னதுபோல ரஷ்யாவுக்கு வந்துசேர்ந்தார்.

ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் வந்திறங்கவேண்டிய அலெக்ஸியை, 2014-ஆம் ஆண்டு பரோல் ஒன்றின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரது விமானத்தை ஷெரேமேட்டியோ விமான நிலையத்தில் இறங்கச்செய்து கைது செய்திருக்கிறார்கள். அங்கிருந்து மாஸ்கோவுக்கு கொண்டு சென்றுள்ளனர். தனக்காக வழக்கறிஞரை வைத்துக்கொள்ள 15 மணி நேரமாகப் போராடியும் அனுமதிக்கவில்லை. அலெக்ஸியை நீதிமன்றத்துக்கு அழைத்துப் போவதற்குப் பதில், நீதிபதியை அலெக்ஸி இருந்த காவல் நிலையத்துக்கே அழைத்துச்சென்று கைதுக்கான அனுமதி பெற்றிருக்கிறார்கள்.

"அவர் ஆஜராகவேண்டிய கால கட்டத்தில், விஷம் வைக்கப்பட்டதற்கான சிகிச்சையில் இருந்தார்' என உலகத்துக்கே தெரிந்தபோதும், அது தெரியாததுபோல காட்டிக்கொண்டிருக்கிறது ருஷ்யாவின் இன்டலிஜென்ஸ் ஏஜன்சிகளில் ஒன்றான ஆர்.எஃப்.பி.எஸ்.

நியாயமாக எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவன்லி யாரால், ஏன் விஷம் வைக்கப்பட்டார் என விசாரித்து அவர்களை கைது செய்வதில் முனைப்புக் காட்ட வேண்டிய ரஷ்ய அரசு, அதற்கு மாறாக எப்போது நாட்டுக்குள் வந்து இறங்குவார் எனக் காத்திருந்து அவரை கேலிக்குரிய பழைய வழக்கொன்றில்… அதுவும் கமுக்கமாக அவரது வழக்கறிஞர்களைக்கூட அனுமதிக் காமல் கைது செய்திருக்கிறது.

"வரும் செப்டம்பரில் ரஷ்ய பாராளுமன்றத்துக்கு தேர்தல். அலெக்ஸி சுதந்திரமாக இறங்கி பிரச்சாரம் செய்தால் தங்களுக்கு ஆபத்து என்ற ஆளும்கட்சித் தலைகளின் பயமே இதற்குப் பின்னால் இருக்கிறது' என்கிறார்கள் நடப்பதை யெல்லாம் வேடிக்கை பார்க்கும் ரஷ்ய அறிவுஜீவிகள்!