ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் 5-ஆம் ஆண்டு விழா கடந்த 18-ந் தேதி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடந்தது. இதில் பாவலர் அறிவுமதிக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
இந்த விழாவில், உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன், நம் நக்கீரன் ஆசிரியர், காங்கிரஸின் மூத்த தலைவர் பீட்டர்.அல்போன்ஸ், கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிடோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். ஆடுதுறை பன்னீர்செல்வம் தலைமையில் பாட்டுப் பட்டிமன்றமும் நடந்தது.
இந்த விழாவிற்கு கல்வியாளரும் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையின் தலைவருமான வே.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இன உணர்வுக் கவிதைகளாலும் இலக்கியத்தரம் வாய்ந்த திரைப்படப் பாடல்களாலும் உலகத் தமிழர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட பாவலர் அறிவுமதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை யும், 1 லட்ச ரூபாய்க்கான பண முடிப்பையும் வழங்கிய நம் ஆசிரியர், தன் உரையில்...
""கல்வியும், மருத்துவமும் இலவசமாகக் கிடைக்கிற தேசமே வளர்ந்த தேசமாகக் கருதப்படும் என்று அன்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ் குறிப் பிட்டார். இதை கல்வி நிறுவனத்தை நடத்தும் அய்யா சந்திரசேகர் அவர்கள் வழிமொழிந்து பேசி யிருக்கிறார் என்பது பெரிய விஷயம். இங்கு நம் மால் பாராட்டப்படும் அண்ணன் அறிவுமதி ஒரு கவிதை எழுதினார். அதில், "இரண்டு அடி கொடுத் தால்தான் திருந்துவாய், இந்தா வாங்கிக்கொள் திருவள்ளுவனிடம்' என்று குறளின் உயர்வைப் பற்றி எழுதினார். "கஷ்டப்படு கிறவர்களுக்கு உதவாமல், நோய் வாய்ப்பட்டவர் களுக்கு உதவிக்கரம் நீட் டாமல் இருப்பவர்கள் செத்தவர்களுக்குச் சமம்' என்று என்னிடம் அறிவு மதி சொன்னார். அதைத்தான் திருக்குறள் வழி மொழிகிறது.
அறிவுமதி, ஒரு சிறந்த இலக்கியவாதியாக இருந்தபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தனக்கு பின்னால் வரும் இளைஞர் களை முன்னிலைப்படுத்துகிறார் அடுத்தவர் வாய்ப் பைத் தட்டிப் பறிப்பவர்களுக்கு நடுவில், இவர் தனக் குக் கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளை மற்றவர் களுக்கு பெற்றுத் தருகிறார். அப்படிப்பட்ட சிறந்த மனம் கொண்ட பாவலருக்கு இந்த விருதை வழங்கு வது மிகவும் பொருத்தமானது''’என்றார் உற்சாகமாய்.
பாவலர் அறிவுமதியோ, ""நான் என் நண்பர் கள் கட்டாயப்படுத்தி அழைத்ததால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். எனக்குக் கிடைப்பதை பிறருக்குக் கொடுக்கும் பழக்கத்தை, எங்கள் கிரா மத்து மனிதர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண் டேன். இந்த விருதுத் தொகையை நான் அமைத்து வரும் நூலகத்துக்குச் செலவிடுவேன்'' என்றார் அழுத்தமாக.
30 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பறிவற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த ஊத்தங்கரை இன்று கல்வி வளர்ச்சியில் முன்மாதிரியாகத் திகழ முக்கிய காரணகர்த்தாவாக இருப்பவர் வித்தியா மந்திர் கல்விக் குழுமத்தின் நிறுவனர் வே.சந்திரசேகர். அவரது முன்னெடுப்பில் இயங்கும் முத்தமிழ்ப் பேரவை, தமிழைத் தழைக்கச் செய்யும் பெருந்தொண்டில் ஈடுபட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
-து.ராஜா