நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பா.ம.க.வின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழுவினை கோவையில் நடத்தியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமைகள் முயற்சி எடுத்து வரும் சூழலில், பா.ம.க.விற்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. தினகரனும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான அரசியல் கணக்குகளை அலசி ஆராய்ந்து வருகிறார்.

pmk

Advertisment

அதனால்தான் வழக்கமான ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் வெளிப்படும் பா.ம.க. பொதுக்குழுவில் இந்த முறை, கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் பேச வேண்டாம். கட்சியின் வளர்ச்சி பற்றி மட்டும் பேசவும். ஓரிரு நிமிடங்களில் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும்' என கட்டளையிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆதங்கங்கள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எதிரொலித்தன. காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு பா.ம.க.வுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் சிலரின் நடவடிக்கைகள் இருப்பதை சிலர் பேச முயற்சித்ததற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பொதுக்குழு துவங்கியதும் குருவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார் ராமதாஸ்!

டாக்டர் அன்புமணி பேசும்போது, ""தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், பா.ம.க. ஆட்சி அமைக்கும்'' என்பதாக சுட்டிக்காட்டிவிட்டு, "ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என பேசியபோது, கைதட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தன. அதேபோல, டாக்டர் ராமதாஸ் பேசும்போது, "பா.ம.க. கூட்டணி அமைக்காது' என கொஞ்சம் இடைவெளி விட, ஏகத்துக்கும் கைதட்டல்கள். ஆனால் ராமதாஸோ, "அமைக்காது என்று சொல்ல மாட்டேன்' என சொல்ல பொதுக்குழு அமைதியானது. இதனைத் தொடர்ந்து, ""அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக 2019-ஐ கொண்டாட வேண்டும். அன்புமணியின் சாதனைகளையும் தொலைநோக்கு திட்டங்களையும் ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு செல்ல வேண்டும். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். சரியான முடிவை எடுப்போம்'' என உற்சாகப்படுத்தினார் ராமதாஸ்.

pmk

Advertisment

"பா.ம.க. தலைமையில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவது என சமீபகாலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக, பொதுக்குழு அமைந்துள்ளதா' என பா.ம.க.வின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""பா.ம.க.வின் கொள்கை நிரந்தரமானது. எப்போதும் அது மாறாது. ஆனால், தேர்தல் காலங்களில் வெற்றி அவசியம். அந்த வெற்றிக்காக சில வியூகங்கள் தேவைப்படுவதால் அதற்கேற்ப யுக்திகளில் மாற்றம் வேண்டும். அதனால்தான், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

பா.ம.க.வின் உள்ளும் புறமும் அறிந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘""தேர்தலில் அங்கீகாரம் பெறவும் மாம்பழம் சின்னத்தை இழந்து விடாமல் இருக்கவும் குறைந்தபட்சம் 2 எம்.பி.க்களை பா.ம.க. பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின் அதிக உறுப்பினர்கள் டெல்லிக்கு போவது அவசியம். அதற்கு கூட்டணிங்கிற யுக்தியை பயன்படுத்த வேண்டும் என கருதுகிறார் அன்புமணி. மேலும், தனித்துப் போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகும். அதாவது பல முனை போட்டிகள் உருவாவதால் பிரியும் வாக்குகள் தி.மு.க.வுக்குத்தான் வெற்றியை தரும்ங்கிறதை எங்கள் தலைமைகள் உணர்ந்துள்ளன. தி.மு.க. தலைமையோ, "அ.தி.மு.க.வை பா.ஜ.க. தள்ளிக்கொண்டு போய்விடும், பா.ஜ.க.வுடன் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் மீண்டும் சேராது, அந்த கட்சிகள் சின்னச்சின்ன அமைப்புகளின் ஆதரவுடன் தனித்துத்தான் போட்டியிடும். இத்தகைய சூழல் உருவானால் வட தமிழகத்தில் தி.மு.க.தான் அதிக இடங்களைக் கைப்பற்றும்' என மனக் கணக்குப் போடுகிறது. இதனை உடைக்க வேண்டுமென்பதற்காகவே கூட்டணி என்கிற அஸ்திரத்தை எடுத்துள்ளார் அன்புமணி. இந்த முடிவு கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதுதான்.

""எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவரான சேலம் இளங்கோவன் சமீபத்தில் அன்புமணியை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த சந்திப்பு ஆரோக்கியமாக இருந்துள்ளது. அ.தி.மு.க.வுடன் பா.ம.க. இருந்தால் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திட முடியும் எனவும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் வன்னியர்கள் இருப்பதையும் கணக்கிட்டே பா.ம.க.வை இழுக்கிறார் எடப்பாடி. அதற்கேற்ப, மாம்பழமும் கனிந்து வருகிறது''’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது, ""அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணிக்கு அதிக வாய்ப்புண்டு. பொதுக்குழுவில் போடப்பட்டுள்ள தீர்மானங்களில் எந்த இடத்திலும் எடப்பாடி அரசை கடுமையாக கண்டிக்கவில்லை. அதே சமயம், எடப்பாடி அரசுக்கு சாதகமாக மத்திய அரசை விமர்சித்துள்ளது. பா.ம.க. வலிமையாக உள்ள மாவட்டங்களில் தினகரனை விட அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்கு சதவீதம் அதிகம் என்பதை பா.ம.க. கூட்டிக்கழித்து கணக்குப் போடுகிறது. அதனால், அ.தி.மு.க.வை நோக்கித்தான் பா.ம.க. நகரும்''’ என்கிறார்கள் அழுத்தமாக!

-இரா.இளையசெல்வன்