பா.ம.க.வைக் கைப்பற்றுவதில் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நீடித்துவரும் மோதல், சேலத்தில் இரு தரப்பு ஆதரவாளர் களிடையே  கல்வீச்சு, மண்டை உடைப்பு வரை வன்முறை வெறியாட்டமாக உருவெடுத்துள்ளது. 

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வடுகத்தம்பட்டியைச்  சேர்ந்தவர் சத்யராஜ். பா.ம.க. ஒ.செ.வான இவருடைய தந்தை நவ. 3-ஆம் தேதி இறந்துவிட, துக்கம் விசாரிப்பதற்காக சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருள், கட்சி நிர்வாகிகளுடன் நவ. 5-ஆம் தேதி வடுகத்தம்பட்டிக்குச் சென்றிருந்தார். 

Advertisment

அஞ்சலி செலுத்தியபிறகு எம்.எல்.ஏ. அருள், ஆதரவாளர்களுடன் சேலம் நோக்கிக் கிளம்பிச்சென்றார். வடுகத்தம்பட்டி தரைப்பாலம் அருகே சென்றபோது, அங்கு தயார் நிலையில் இருந்த அன்புமணி ஆதரவாளர்கள் அருளின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் கைகலப்பாக மாறி கல்வீச்சு, உருட்டுக்கட்டை, இரும்பு ராடுகளால் தாக்கிக்கொண்டனர். 

வாழப்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று, அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மோதலால் அந்த இடமே பெரும் களேபரமாக காட்சியளித்தது. 

Advertisment

இதுதொடர்பாக சம்பவ இடத்திலிருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்தோம். 

"துக்க வீட்டிற்கு அருள் தரப்பினர் அஞ்சலி செலுத்தவந்தபோது, அவர்கள் வந்த கார்களை வடுகத்தம்பட்டியைச் சேர்ந்த அன்புமணி ஆதரவாளர் ராஜேஷுக்குச் சொந்தமான பாக்குக் களத்தில் நிறுத்தினர். இதைப்பார்த்த ராஜேஷ், இங்கெல்லாம் காரை நிறுத்தக்கூடாது என்றுகூறி அருள் தரப்புக்குச் சொந்தமான ஒரு காரின் கண்ணாடிமீது "படார்' என்று கையால் ஓங்கித் தட்டினார். 

இதைப்பார்த்த அருளின் ஆதரவாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, திடீரென்று மோதலாக உருவெடுத்தது. அங்கேயே இருதரப்பும் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆனால் சிலர், அருள் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் ஊருக்குள் புகுந்து ராஜேஷையும், அன்புமணி ஆதரவாளர்களையும் தாக்கிவிட்ட தாக பா.ம.க. கிழக்கு மா.செ. ஜெயப்பிரகாஷுக்கு தகவல் சொல்லியுள்ளனர். 

ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ஜெயப்பிரகாஷ், தனது ஆட்களுடன் நான்கு கார்களில் சென்று, வடுகத்தம்பட்டி தரைப்பாலமருகே அருள் எம்.எல்.ஏ. வந்த காரை மடக்கிவிட்டார். அங்கேயும் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அங்கு வைத்து அருளை, ஜெயப்பிரகாஷ் தரப்பு வெட்டிக்கொல்ல  முயற்சி நடந்ததாகச் சொல்கிறார்கள்'' என்கிறார்கள் உள்ளூர் மக்கள். 

இது ஒருபுறமிருக்க, உளவுப்பிரிவு போலீசாரோ "டாக்டர் ராமதாஸின் தீவிர விசுவாசியான அருள் எம்.எல்.ஏ., நேரடியாகவே டாக்டர் அன்புமணியை தாக்கிப் பேசிவருகிறார். அவர் துக்க வீட்டிற்கு வரும்போது அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்தது. முன்னெச்சரிக்கையாக வாழப்பாடி டி.எஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்.ஐ.க்கள் உள்பட 20 போலீசார் வடுகத்தம்பட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனாலும், பாக்குக்களத்தில் காரை நிறுத்தியபோதான மோதலில் போலீசார் லேசாக தடியடி நடத்தியிருந்தால் கூட கல்வீச்சு வரை போயிருக்காது.  இந்த சம்பவமே அன்புமணி ஆட்களால் திட்டமிட்ட மோதல்தான் எனத் தெரிகிறது. 

pmk1

இவ்வளவு களேபரம் நடந்தபோதும், சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீசார் வரவழைக்கப்படவில்லை. அதனால்தான், வடுகத்தம்பட்டி தரைப்பாலம் அருகே இரண்டாவது முறையாகவும் மோதல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் எச்சரித்தும், லோக்கல் போலீசார் இந்த விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை'' என்கிறார்கள். 

அன்புமணி ஆதரவாளரான செந்தில்குமரன் அளித்த புகாரின்பேரில், அருள் உள்பட 9 பேர் மீதும், அருள் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஜெயப்பிரகாஷ், ராஜேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் மீதும் கொலைமுயற்சி, ஆயுதத்துடன் சட்டவிரோதமாக கூடுதல், குற்றத்திற்கு உடந்தை ஆகிய பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

முதல்கட்டமாக அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் நவ. 5-ஆம் தேதி கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைத் தனர். அருள் தரப்பில் காயமடைந் தவர்கள் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக எம்.எல்.ஏ. அருளிடம் கேட்டபோது, ''டாக்டர் அன்புமணி என்னைக் கொல்லும் நோக்கில் ரவுடிகளை அனுப்பி வைத்துள்ளார். பெரும்பான்மையான வாக்காளர்கள் டாக்டர் அய்யாவுக்கு தான் ஆதரவாக உள்ளனர். அதை அன்புமணியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் என்மீது தாக்குதல் நடத்துகிறார்'' என்றார். 

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பா.ம.க. செயல்தலைவர் ஸ்ரீகாந்தி, "எங்களுக்கு ராமதாஸ் நாகரிக அரசியலை கற்றுத் தந்தார். அன்புமணி அநாகரிக அரசியல் நடத்துகிறார். தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்'' என்றார். 

நவம்பர் 6, வியாழனன்று செய்தி யாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கியதும், கட்சியின் தலைவர் பொறுப்பைக் கொடுத்ததும் எனது தவறுகள். எம்.எல்.ஏ. அருள் மீது அன்புமணி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத்தகைய வன்முறை சார்ந்த விஷயங்களை அந்தக் கும்பல் கைவிட வேண்டும். இது ஆரோக்கியமான அரசியல் அல்ல'' என்றார்.