திருட்டுப் பட்டம் சுமத்தியதால், கோவை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி 4ஆவது மாடியி லிருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது தமிழகத்தையே அதிர வைத்திருக்கிறது
கோவை -பீளமேடு, நவஇந்தியா பகுதியிலுள்ள இந்துஸ்தான் மருத்துவ மனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வானதி என்பவரது மகள் அனுபிரியா, விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையின் நான்காவது மாடியில் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மதியம் அனைவரும் அவர்களது உடமைகளை அங்கேயே வைத்துவிட்டு உணவருந்தச் சென்று வந்தனர். இதில் நான்காமாண்டு படிக்கும் மாணவியின் பையிலிருந்த 1500 ரூபாய் திடீரென மாயமானது.
உடனே இதுகுறித்து பேராசிரியர் களிடம் கூறியுள்ளார். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, அனுபிரியா தனியாக அந்த அறையைவிட்டு வெளியே வந்ததாகத் தெரியவந்தது. எனவே அனுபிரியா அந்த பணத்தை எடுத்திருக்கக்கூடும் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டு, கல்லூரி முதல்வர் மணிமொழியிடம் தெரிவித்தனர்.
பின்னர் அனுபிரியாவிடமும் மேலும் சில மாணவர்களிடமும், மாலை 3.30 மணியளவில், ஐந்தாவது மாடியிலுள்ள கல்லூரி முதல்வரின் அறையில்வைத்து முதல்வரும், பேராசிரியரும் விசாரித்துள்ளனர். பின்னர், மற்ற மாணவர்களை அனுப்பிவிட்டு, அனுபிரியாவிடமும் இன்னொரு மாணவனிடமும் மாலை 6.30 மணிவரை விசா ரித்தனர். அவர்களிடம், தான் பணத்தை எடுக்கவில்லை யென்றும், தவறு செய்யவில்லையென்றும் அனுபிரியா மறுத்துள்ளார். விசாரணை முடிந்து வெளிவந்த அனுபிரியா, தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுப் பட்டத்தால் மிகுந்த மனஉளைச்சலோடு கீழிறங்கியவர், திடீரென்று நான்காவது தளத்திலிருந்து கீழே குதித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த அனுபிரியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அனுபிரியா தற்கொலை செய்த தகவல் சக மாணவ -மாணவிகளுக்கு காட்டுத் தீயெனப் பரவ, அங்கு பதட்டத்தோடு கூடியவர்கள், பேராசிரியர்களை வெளியே செல்லவிடாமல் முற்றுகை யிட்டனர். ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி மீது கல்வீச்சில் ஈடுபட... கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. பின்னர், அனுபிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பட்டது.
அனுபிரியா தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரது தாய்க்கு தெரி விக்கப்பட்டது. கணவரில்லாத நிலையில், தனது ஒரே மகளும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் வானதி, உறவினர்களோடு கோவைக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறியழுதார். இதுகுறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகாரளித்தார்.
மாணவி அனுபிரியாவின் இறப்புக்கு நியாயம் கேட்டு, விசாரணை நடத்திய பேராசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி, பிணவறையின் முன்பாக, உடலை வாங்க மறுத்து மாணவர்களும், உறவினர்களும் போராட்டம் நடத்திய நிலையில், கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று கல்லூரி நிர்வாகத்தினர் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அனுபிரியா வின் உடலை வாங்கிச் சென்றனர். விசா ரணை என்ற பெயரில் மனஉளைச்சலைக் கொடுத்ததால் இளந்தளிரொன்று வாழ்வை முடித்துக்கொண்டது பரிதாபம்!
_______________
இறுதிச் சுற்று!
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் நீடித்துவந்த புதிய தமிழகம் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வியாழக்கிழமை பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்க ஏன் உழைக்க வேண்டும். ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம்'' என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மீண்டும் இணைந்துள்ள நிலையில், "தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்' என்று அண்மையில் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதனால், கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாக பரவியது. ஆனால், இதனை மறுத்த எடப்பாடி பழனிச்சாமி, "பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான்... ஆட்சியில் கூட்டணி கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினாலும், அ.தி.மு.க. தனித்து ஆட்சியமைக்கும். கூட்டணி ஆட்சி கிடையாது'' என்று கூறிவருகிறார். எடப்பாடி இப்படி கூறி வருவதினால்தான், புதிய தமிழகம் மேற்கண்ட நிலைப் பாட்டை எடுத்துள்ளது.
-இளையர்