மெரினா தொடர்பான அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்ப்பு வந்தபிறகு, அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, வேணுகோபால் தொடங்கி பலரும் எடப்பாடியை தொடர்பு கொண்டு, "இந்த விசயத்தில் சீரியஸ் காட்டியிருக்க வேண்டாம்' என்றனர். அவர்களிடம் சீரியஸாக சில விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.
""கலைஞரும் எம்.ஜி.ஆரும் ஒரே இயக்கத்தில் வளர்ந்தவர்கள், நண்பர்கள். அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். அப்படியிருக்கும்போது, கலைஞருக்கு இடமில்லை என சொல்லி தீராப்பழியை சுமக்க விரும்புவேனா? அதனால்தான், உணர்வுப்பூர்வமாகவே ’ "எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை' என ஏற்கனவே துரைமுருகனிடம் தெளிவுபடுத்திவிட்டேன். இதன் மூலம் அம்மா நினைவிடத்துக்கு தி.மு.க .தரப்பு எதிர்ப்பு காட்டாது என்பதும் நமக்கு சாதகமாகும். அத்துடன், அண்ணா நினைவிடம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன். 6-ந்தேதி எனக்கு கொடுக்கப்பட்ட சில அழுத்தங்களால் எதிர்நிலை எடுக்க வேண்டியிருந்தது'' என பகிர்ந்துகொண்டார்’எடப்பாடி.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""கலைஞருக்கு இடம் ஒதுக்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டுமென்பதால், அது குறித்து தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் ஆலோசித்தார் எடப்பாடி. முதல்வரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த கிரிஜா, "தி.மு.க.வின் நினைவிட கோரிக்கையில் முடிவெடுக்கும் முன் எங்களை தொடர்புகொள்ளுங்கள் என டெல்லியிலிருந்து உத்தரவு' என்றிருக்கிறார். டெல்லியைத் தொடர்பு கொண்டபோது, "வழக்குகளை காரணமாகச் சொல்லி தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்' என டெல்லியிலிருந்து தகவல் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான், கலைஞரின் உடல்நலத்துக்கு 24 மணி நேரம் கெடு வைத்தது மருத்துவமனை. கெடு நேரம் நெருங்க நெருங்க, எடப்பாடியை தி.மு.க. தரப்பின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு, துரைமுருகன் பேசினார். அதன்பின் 7-ந் தேதி மதியம் ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் சந்தித்தனர். எல்லோரிடமும், தலைமைச்செயலாளர் மூலம் டெல்லி தரும் நெருக்கடிகளையும் சட்ட சிக்கல்களையும் விவரித்திருக்கிறார் எடப்பாடி. அதனை ஏற்க மறுத்து, அழகிரியும் ஸ்டாலினும் பேசியபோது, "நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் வாபஸ் ஆனால் பிரச்சனையே இல்லை' என விளக்கமளித்திருக்கிறார்.
கலைஞர் மரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் நிலைப்பாட்டை அண்ணா சதுக்க வாசலில் போட்டுடைத்தார் துரைமுருகன். தலைமைச் செயலாளரிடம் தன் நெருக்கடியையும் வருத்தத்தையும் எடப்பாடி வெளிப்படுத்த, அதன்பின் மெரினாவில் இடம் இல்லை என கிரிஜாவே அறிக்கை வெளியிட்டார். அ.தி.மு.க அரசு மீது தி.மு.க.வினரின் கோபம் மொத்தமாக திரும்பியது.
கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வரும் அமைச்சர்களும் வந்தபோதுகூட ஸ்டாலின் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருக்க நினைத்தார். ஆனால், எ.வ.வேலுவும் பொன்முடியும் வற்புறுத்தி அழைத்து வந்தனர். எடப்பாடியும் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தியபோது உடன் வந்திருந்த தலைமைச்செயலாளர் கிரிஜாவிடம், "காலம் இப்படியே இருக்காது... பார்த்துக்கோங்க' என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். குற்ற உணர்வுகளுடனேயே ராஜாஜி ஹாலிலிருந்து வெளியேறிய எடப்பாடி, நீதிமன்றத் தீர்ப்பில், கலைஞருக்கு மெரினா ஒதுக்கப்பட்டதும் நிம்மதியடைந்து, தன் சகாக்களிடம் மகிழ்ச்சிப் புன்னகையை வெளிப்படுத்தினார்'' என்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்
________________________
இடம் ஒதுக்கியும் இருளில் மெரினா!
கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்று இரவு முழுவதும் பொதுமக்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டே இருந்தனர். எங்கிருந்து வந்த உத்தரவோ, அண்ணா சமாதி அருகே இருந்த உயர் கோபுர மின்விளக்கை அணைத்துவிட்டனர். "இருட்டு எங்களுக்கு ஒரு பொருட்டல்ல' என்றவாறு மக்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதி அருகே இருந்த விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. ஸ்விட்ச் ஆஃப் செய்ததும் டெல்லிதானா, அங்கேதான் கண்ட்ரோல் இருக்கா என இறுதி வணக்கம் செலுத்த வந்தோர் குமுறினர்.
-அரவிந்த்