கட்டடம் முழுவதும் நீலநிறம் பூசப்பட்டு, அதன் பார்டர்களில் கருப்பு சிவப்பு என்ற தி.மு.க.வின் அடையாளத்தோடு, வீட்டின் முகப்பில் உதயசூரியன் சின்னத்தோடு, வி.கே.என். என்ற பெயர் பொறிக்கப்பட்ட கட்ட டங்களை தமிழ்நாட்டில் பல இடங்களில் காணலாம். தி.மு.க.காரர்கள் இலவசமாகத் தங்குவதற்காகவே அந்த கட்ட டங்கள் கட்டப்பட்டன என்று கூறுவார்கள். இன்றும் ய.கண்ணப்பன் என்ற அந்த பெயரைவிட வி.கே.என். என்ற பெயர்தான் பெரும்பாலான வர்களுக்கு தெரியும். இன்ஜி னியரிங் தொழிலில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் தி.மு.க. விற்காக பணத்தை தண்ணியாக செலவழித்த கட்சிப் பற்றாளர். அந்த கட்டடங்களால் தி.மு.க. வினர் நிறைய பலனடைந் துள்ளனர்.
அப்படியானவருக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ள சூழலில், ஆளும் தி.மு.க. அரசு தங்களுக்கு உதவ முன்வரவில்லையென்று ஆதங்கத்துடன் அவருடைய மகன் ராஜா முகநூல் பதிவொன்று எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வி.கே.என்.ராஜாவை நேரில் சந்தித்தோம். "நான் தான் வீட்டிற்கு மூத்தவன். அப்பாவுக்கு தெரிஞ்சது எல்லாம் இஞ்ஜினியரிங் தொழில் மட்டும்தான். அப்பா, டெல்லி, சென்னை, ராணிபேட்டை, திருச்சி, மதுரை, குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், காரைக்குடி என பத்து இடங்களில் வி.கே.என். என்ற நீலநிறக் கட்டடங்களைக் கட்டியுள்ளார். ஒவ்வொரு கட்டடமும் 6 அடுக்கு மாடிகளைக் கொண்டவை. 1970-ருந்து 1989 வரை கட்டப்பட்டு ஒவ்வொன்றாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. தொழிலாளர்களை நண்பர்கள் என்றுதான் அப்பா கூறுவார். அவர்கள் சுற்றுலா செல்லும்போது இந்த கட்டடங்களில் இலவசமாகத் தங்கிச்செல்லப் பயன்படுத்துவார்கள். மற்ற நேரங்களில், தமிழ்நாட்டிலுள்ள தி.மு.க.காரர்கள் வந்தால் இங்குதான் இலவசமாகத் தங்குவார்கள். கட்டடங்களின் அனைத் துப் பராமரிப்புச் செலவுகளையும் அப்பாவே செலுத்திவிடுவார். அப்பா காலத்துப் பழக்கத்தை நானும் தொடர்ந்துவந்தேன்.
என்னுடன் பிறந்தவர்கள் இருவர் உள்ளனர். அப்பா எனக்கு குற்றாலம், மதுரை, திருச்சி கட்டடங்களை சொத்தாகக் கொடுத் தார். தற்போது குற் றாலத்தில் இரண்டு வீடு உள்ளது. அது ஐம்பதாயிரம் சதுர அடிக்கு அதிகமாகவே இருக்கும். தற்போது லாட்ஜ், ஓட்டல் எனக்கூறி, அதற்கு வரி கட்டவில்லையென்று, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா அந்த வீட்டை இழுத்துப் பூட்டியுள்ளார். வரி செலுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
ஆனால் கடந்த பிப். 16ம் தேதி தேதியிட்ட அறிவிப்பை என்னுடைய வீட்டில் ஒட்டிவிட்டு, இரண்டு வீட்டையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
அந்த அறிவிப்பில் அவர்கள் குறிப்பிட்ட முகவரியிலோ, கண்ணப்பன் என்ற பெயரிலோ அந்த சொத்து இல்லை. அனைத்தும் என்னுடைய மகளின் பெயரில்தான் இருக்கும். நான் 2021 வரை முறையாக வரி செலுத்தியுள்ளேன். ஆனால் 1999 முதல் 2024வரை வரி செலுத்தவில்லையெனக்கூறி, 1 கோடியே 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர். சுஷ்மா போன்ற அதிகாரிகள் என்னைத் திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள். எனவே நான் நீதிமன்றத்தை நாடி, கட்டடத்தை திறக்கச்சொல்லி உத்தரவு வாங்கிய பின்னும் கட்டடத்தைத் திறக்க மறுக்கிறார்கள்.
அப்பா 2017ல் இறந்த பிறகு பெரும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டு, அதற்காக சிகிச்சையும் பெற்றுக்கொண்டேன். தற்போது அதிலிருந்து மீண்ட நிலையில், இதுபோன்ற சம்பவம் என்னை பாதிக்கிறது.
அப்பாவைப்போல் இலவசமாகத்தான் இக்கட்டடங்களை வழங்கிவருகிறேன். இதை வைத்து தொழில் செய்ய விரும்பவில்லை. இக்கட்டடத்துக்கு அதிகபட்சமாக மூவாயிரம் ரூபாய்வரை வரியாகச் செலுத்தியிருக்கிறேன். ஆனால் திடீரென சொத்துவரி 1 கோடி ரூபாய் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது? நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவு நகலையும் வாங்க மறுக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்டு பூட்டிய வீட்டைத் திறந்து விடுங்களென்று கெஞ்சினேன். அப்படியும் ஏற்கவில்லை. எங்க அப்பாவுக்கு தலைவர் கலைஞர் எப்போதும் ஆதரவாக இருந்தார். எனக்கு தளபதி ஆதரவாக இருந்து இப் பிரச்சனையிலிருந்து காப்பாற்று வார் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதுதொடர்பாக சம் பந்தப்பட்ட குற்றாலம் பேரூராட்சி இ.ஓ. சுஷ்மா விடம் பேசுகையில், "அவருக்கு 1 கோடி ரூபாய் வரி நிலுவைப் பாக்கி உள்ளது. அந்த நிலுவைத்தொகையை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டினால்கூட பரவாயில்லை. ஆனால் அவர் கட்ட முன் வரவில்லை. அவர் தரப்பில் நீதிமன்றத்திற்கு சென்று ஸ்டே ஆர்டர் வாங்கியதால் நாங்கள் கடந்த மாதம் மேல்முறையீடு செய்துள்ளோம். இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை'' என்றார்.
உண்மையான தி.மு.க. தொண்டனாகவும், ஆதரவாளராகவும், கட்சிக்காரர்களுக்காக வாழ்ந்தவருமான வி.கே.என்னின் வாரிசு, தற்போது சந்திக்கும் சிக்கலிலிருந்து மீள்வதற்கு, இப்பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி களுக்கு எடுத்துக்கூறி உதவ வேண்டுமென்று வி.கே.என்.னின் குடும்பத்தாரும், அபிமானிகளும் எதிர்பார்க்கிறார்கள்.