ஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த திங்கள் கிழமை குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட மாணவி, திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப் பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

st

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியினர், பிழைப்பிற்காக ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்து பேராவூரணி அருகிலுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் குடிசை அமைத்துத் தங்கியுள்ளனர். இவர்களது குழந்தைகள் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் 13 வயதான மகள் கவிபாலா 7ஆம் வகுப்பு படித்துவந்தார்.

பிப்ரவரி 10ஆம் தேதி திங்கள்கிழமை, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் என்பதால், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, இங்கு பயிலும் 389 மாணவ, மாணவிகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கியுள்ளனர். மாணவ, மாணவிகள் அந்த மாத்திரையை சாப் பிட்டுள்ளனர். இந்த நிலையில், மாணவி கவிபாலாவும் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு, சக மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் திடீரென, பேசிக்கொண்டிருந்த நிலையிலேயே மயங்கிச் சரிய, அருகில் நின்ற மாணவிகள் அவளைப் பிடித்து அமர வைத்தனர். உடனடியாக கவிபாலாவின் மூக்கில் ரத்தம் வெளியேறிக் கசிய, பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளாள்.

Advertisment

உடனே அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவியை ஒரு காரில் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். கவிபாலாவை பரிசோதித்த மருத்துவர், அவள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, மாணவி கவிபாலாவின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவி சகாய மேரி, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தியா ஆகி யோருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

மாணவி கவிபாலா திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் கிராமங்களுக்குள் பரவிய நிலையில், கிராமமே சோகத்தில் மூழ்கியது. கவிபாலாவின் உயிரிழப்புக்கு, குடற்புழு நீக்க மாத்திரை தான் காரணமெனக்கூறி கொந்தளித்த கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

st

Advertisment

மாணவி உயிரிழந்த சேதியறிந்து வந்த பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகளையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

பள்ளியிலேயே உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், குடிசையில் வசிக்கும் மாணவி குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டாவும், குடியிருக்க அரசு வீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நிறைவேற்றுவதாக சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.5 லட் சம், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு வழங்கப் படுமென்று தமிழக முதல்வர் அறிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று மாணவியின் உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை செய்தனர். குடற்புழு நீக்க மாத்திரை தான் மாணவி இறப்பிற்கு காரணமா என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்றனர். இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர், கவிபாலாவின் பெற்றோரிடம், தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண நிதியை வழங்கியதுடன், அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும் வழக்கினர். விரைவில், கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கப்படும் என்றனர்.

மாணவி கவிபாலா உயிரிழந்ததற்கு மறுநாளான பிப்ரவரி 11ஆம் தேதி தான் அவருக்கு பிறந்த நாளாம். அன்றைய தினம் தான் கவிபாலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மயானத்தில் அவளுக்காக பிறந்தநாள் கேக் வாங்கி வைக்கப் பட்டிருந்தது, காண்போர் மனதைக் கலங்கடித்தது. இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடவேண்டிய வள், இப்படி உயிரற்ற சடலமாக மண்ணுக்குள் போகிறாளே என்று உறவினர்கள் கதறியழுதது அனைவரையும் கலங்க வைத்தது.