ஞாயிற்றுக்கிழமை நடிகர் சென்றாயன் வெளியேற்றத்துக்கு முன்னாலேயே, பிக்பாஸ் சீஸன் 2-வில் சத்தமில்லாமல் அந்த வெளியேற்றம் நிகழ்ந்துவிட்டது. வெளியேறியது குணசேகரன் எனும் ஏ.சி. மெக்கானிக்கின் உயிர்.
ஒருபக்கம் பிக்பாஸ் சீஸன் 2-க்கு போதிய வரவேற்பில்லாத கவலை. இன்னொரு பக்கம் விஜய் டி.வி. மற்றும் எண்டமால் நிறுவனத்தின் முக்கிய ஸ்பான்சரான விவோ மொபைல் இந்த சீஸனுடன் பிரதான ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகிக்கொள்ளுமோ என்ற கவலை.…இதற்கு நடுவில்தான் பிக்பாஸ் அரங்குக்கு அருகிலேயே குணசேகரன் என்ற தொழிலாளியின் மரணம் நடந்திருக்கிறது.
80 நாட்களைக் கடந்து 100-வது நாளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சிக்காக, ஒருவேளைக்கு 200 பேர் என்ற வீதத்தில் மூன்று ஷிப்டுக்கு 600 தொழிலாளிகள் வேலை செய்துவருகிறார்கள். சுமார் 200 கோடி ரூபாய் வரை ஸ்பான்சர்கள்மூலம் டர்ன்ஓவர் ஆகும் இந்த ஷோவில் வேலைசெய்யும் தொழிலாளிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலே நிலவுகிறது.
கடந்த செப். 7 இரவு. அடுத்தநாள் கமல் வருகையையொட்டி ஷூட்டிங்குக்காக தயாராகிக் கொண்டிருக்க, அடுத்த கட்டடத்தில் உணவருந்த வந்திருந்த குணசேகரன் எனும் ஏசி மெக்கானிக், கைகழுவும்போது தவறி விழுந்து இறந்ததாகச் சொல்லப்பட்டது.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயசங்கரைத் தொடர்புகொண்டோம். ""நைட் சாப்பிடுவதற்காக பிக்பாஸ் செட் பக்கத்துல இருக்கிற ரூமுக்கு போறப்போ தவறிவிழுந்ததா சொல்றாங்க...''’விரிவாகப் பேசாமலே போனை துண்டித்தார்.
விஜய் டி.வி. மக்கள் தொடர்பு அலுவலர் லஷ்மியிடம் பேசினோம். ""சார், அவர் விஜய் டி.வி.யும் இல்ல எண்டமால் நிறுவன ஸ்டாப்புமில்ல. ஈ.வி.பி. பிலிம் சிட்டி ஏ.சி. மெக்கானிக்குங்க''’என்று முடித்தார். ஈ.வி.பி. பிலிம் சிட்டியின் தொடர்பு அலுவலர் செரிஃபாவைக் கேட்டபோது, ""சார் நாங்க உங்களுக்கோ, பிறருக்கோ பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லாம் போலீஸ்ல சொல்லியாச்சி. அங்கபோயி பேசிக்கோங்க...''’என்று அலட்சியமாக எடுத்தெறிந்து பேசினார். நடந்தது என்ன என்பதை மொத்தமாக மூடி மறைக்கிறது நிர்வாகத் தரப்பு.
குணசேகரனின் குடும்பத்துக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட போகவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டி.ஆர்.பி. ரேட்டிங்கில் காட்டும் அக்கறையில் கொஞ்சத்தை, நிகழ்ச்சியின் வெற்றிக்காக உழைக்கும் கீழ்மட்டத் தொழிலாளிகளிடமும் காண்பிக்கலாமே பாஸ்!
-அரவிந்த்