பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படும் என்று கடந்த 21-ம் தேதி மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். "நாங்க கலால் வரியைக் குறைச்சுட்டோம்... அதேபோல மாநில அரசுகளும் அவர்களின் வரியைக் குறைக்கணும்" என்று நிதியமைச்சர் கேட்டுக்கொண்டதுதான் நாடு முழுமைக்கும் விவாதப்பொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து ட்வீட் செய்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "செஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன்? பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். உடனே இதற்கு ரியாக்ட் செய்த நிர்மலா சீதாராமன், "தற்போது முற்றிலுமாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரியில்தான் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது" என்று பதிலுரைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட ப.சிதம்பரம், "மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் வரியிலிருந்து குறைந்த பங்களிப்பையே பெறுகின்றன. அவற்றின் வருமானம் பெட்ரோல், டீசல் வாட் வரியை நம்பியே உள்ளது. ஆகையால் மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியும், கூடுதல் மானியங்களும் அளிக்காத வரையில் மாநிலங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியுமா என்று தெரியவில்லை" என மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

dd

Advertisment

சிதம்பரம் குறிப்பிட்டுள்ளதைப்போல், பெட்ரோல், டீசல் கலால் வரியில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் பங்கு மிகமிகக் குறைவாகும். 2014ஆம் ஆண்டில் 9.48 ரூபாயாக இருந்த பெட்ரோல்மீதான கலால் வரி தற்போது 32.98 ரூபாயாக (348%) உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி, 2014ஆம் ஆண்டில் 3.56 ரூபாயிலிருந்து 31.83 ரூபாயாக (894%) உயர்த்தப்பட்டது. அதே வேளை, 2014ஆம் ஆண்டில், லிட்டருக்கு 9.48 ரூபாய் என வசூலிக்கப்பட்ட கலால் வரியில், 6.35 ரூபாயை மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளும் வரியாக வைத்திருந்தது. தற்போது லிட்டருக்கு 32.98 ரூபாயாக வசூலிக்கப்படும் கலால் வரியில், வெறும் 2.98 ரூபாயை மட்டுமே மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளும் வரியாக வைத்திருக்கிறார்கள். இப்படி மாநிலங்களுக்கான வரிப்பங்கீட்டை மிகவும் குறைத்து மாநிலங்களை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி 95.40 ரூபாயாக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் விலையை, தொடர்ச்சியாக ஏற்றி, 111 ரூபாயாக உயர்த்தியவர்கள், தற்போது அதிரடியாகக் குறைப்பதுபோல் 103 ரூபாய்க்குக் குறைத்திருக் கிறார்கள். ஆக மொத்தம், விலைக்குறைப்பு என்பதே போலித்தனமாக இருக்கிறது. இதைத்தான் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதையே, தமிழக நிதியமைச் சர் பழனிவேல் தியாகராஜன், "பெட் ரோல், டீசல் மீதான மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு, தற் போது பகுதியளவு குறைக்கப்பட்டிருந்தா லும், 2014ஆம் ஆண்டு விகிதங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் அவற்றின் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இல்லை" என்று தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பெட்ரோல் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரை யில், கடந்த 8 ஆண்டு காலத்தில் பெரிதும் ஏற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 98.97 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது, 97.7 அமெரிக்க டாலராக இருக்கிறது. ஆகக் கடந்த 8 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில் பெரிதும் மாற்றமில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விலைகளைப் பார்த்தோமானால், 2014ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 73.47 ரூபாயாக இருந்தது. தற்போது 110 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.

ff

Advertisment

கடந்த 8 ஆண்டுகளில் பல தருணங்களில் கச்சா எண்ணெய் விலை இறங்கியது. ஆனால் அப்போ தெல்லாம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அப்படியே வைத்திருந்து அதிகப்படியான லாபம் பார்த்தது. அது மட்டுமின்றி, எண்ணெய் விலையைப் பெரிதும் குறைக்காமல் ஏறுமுகத்தி லேயே மத்திய அரசு வைத்திருந்தது. எண்ணெய் நிறுவனங்களும் சரி, மத்திய அரசும் சரி, பெட்ரோல், டீசல் விற்பனை யில் கடந்த 8 ஆண்டுகளில் 26 லட்சம் கோடி என கொழுத்த லாபத்தைச் சம்பாதித்திருப்பதும், மாநில அரசுகளுக்கு லாபத்தைக் குறைத்து வஞ்சித்திருப்பதும் வெட்டவெளிச்சமாகிறது. இவர்கள்தான் மாநில அரசுகள் விலையைக் குறைக்க வேண்டுமென்று அரசியல் செய்கிறார்கள்.

இந்த ஆண்டு இறுதியில் வரவுள்ள இரு மாநிலத் தேர்தல்களுக்காக இப்போதே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கத் தொடங்கிவிட்டதா என எண்ணெய் நிறுவன அலுவலர்கள் தரப்பில் விசாரித்தபோது, ரஷ்யாவி லிருந்து பெருமளவில் விலை மலிவான கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருப்பதுதான் இதற்கான காரணமென்று புதிய விவரங்களைத் தெரிவித்தார்கள். பெட்ரோல் ஏற்று மதியில், அரபு நாடுகளுக்கு அடுத்த நிலையில் பெரிய ஏற்றுமதி யாளராக ரஷ்யா உள்ளது. பெட்ரோல் இறக்குமதியைப் பொறுத்தவரையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 80% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியது. ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட முக்கியமான வளர்ந்த நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை அறிவித்தன. எனினும், பெட்ரோலிய இறக்குமதிக்கான தடையை உடனடியாகக் கொண்டுவரவில்லை. போர் தீவிரமாகத் தொடர்ந்ததும் அதன்மீதான தடையையும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இந்தியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள், இந்த போரில் நடுநிலை வகிக்கவே விரும்பின. அந்நிறுவனங்கள் கணக்குப் போட்டபடி, ரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, சந்தை விலையை விட ஒரு பேரலுக்கு 30 டாலர்வரை (இதற்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறப் படுகிறது) குறைத்து விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டது. அதைச் சாதகமாக்கிக் கொண்ட எண் ணெய் நிறுவனங்கள், ரஷ்யாவிட மிருந்து வழக்கத்துக்கு மாறாக மிக அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டன.

கடந்த 2021ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து மொத்தமே 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்தது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண் ணெய் இறக்குமதியில் 2% மட்டுமே. ஆனால், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே 40 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து 1 பேரல் கச்சா எண்ணெய்கூட இறக்குமதி செய்யவில்லை. பிப் ரவரி இறுதியில் போர் தொடங்கியதைச் சாதகமாகக் கருதிய இந்திய எண்ணெய் நிறுவனங்கள், கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே கச்சா எண்ணெயை விலை மலிவாக வாங்கிக்குவித் துள்ளன. இதன்காரணமாகத்தான் ரஷ்ய-உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதுபோல் இந்தியா காட்டிக்கொண் டுள்ளது. இப்படி விலை மலிவான கச்சா எண் ணெயை இறக்குமதி செய்தபோதும், அதற்கான பலனை நுகர்வோரான இந்திய மக்களுக்கு முழு மையாக வழங்காத மத்திய அரசுதான் தற்போது விலையை சர்ரென ஏற்றி விட்டு, விலைக்குறைப்பு செய்வதுபோல் நாடகமாடுகிறது. இதோடு, மாநில அரசுகளையும் வரிக்குறைப்பு செய்யும்படி அரசியல் செய்கிறது.

ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யப்படும் சூழலில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 70 ரூபாய் என்ற அளவுக்கு குறைக்கமுடியும் என் றும், அப்போதும் எண்ணெய் நிறுவனங்களால் லாபம் பார்க்க முடியுமென்றும் கூறப்படுகிறது. கடந்த கொரோனா காலகட்டத் தில், கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குச் சென்ற போதும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அதிலும் பெருத்த லாபம் பார்த்தது ஒன்றிய அரசு. எனவே, பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த உண்மையான விவரங்களை பொதுமக்கள் அறியும்படி வெளிப்படையாகத் தெரிவிக்குமா ஒன்றிய அரசு?