Skip to main content

பீட்டா சேட்டை! ஜல்லிக்கட்டை முடக்க சதி!

ளைஞர்களின் பெரும்போராட்டத்தால் மீட்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கும் சதிகள் டெல்லியில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கான அரசாணையை எடப்பாடி அரசு வெளியிட்டு ஏற்பாடுகள் நடக்கும் நிலையில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டுள்ளது.

peta


ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளரான ஜல்லிக்கட்டு ராஜேஸிடம் நாம் பேசியபோது, ""ஜல்லிக்கட்டுக்கு எதிராக இயங்கும் பீட்டா அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2017-ல் ஓ.பி.எஸ். தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றிய சிறப்பு சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது என ஒரு வருடத்துக்கு முன்பு மீண்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். கொலிஜியம் ஃபார்மாகாததால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கும் நோக்கத்தில், அரசியலமைப்பு அமர்வில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு நீதிமன்றத்தை அணுகியுள்ளது பீட்டா. 9-ந்தேதி பதிவாளரை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்பு அமர்வில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், ’ விசாரணை முடியும் வரை ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது ’ என சொல்வதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு உத்தரவு வந்துவிட்டால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கான நகர்வில் பீட்டா உள்ள நிலையில், தமிழக அரசு இது குறித்து கவலைப்படுவதும் இல்லை; ஃபாலோ பண்னுவதும் இல்லை. மீண்டும் தடை வராதபடி வழக்கறிஞர்கள் மூலம் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.
peta
சிறப்பு சட்டம் நிறைவேற்றிய தமிழக அரசு, காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வைத்திருக்க வேண்டும். அதைதவிர்த்து வெறும் எக்ஸெம்ப்ஷன் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கண் துடைப்பிற்கு ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்களே தவிர, நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் சிறப்பு சட்டம் அமையவில்லை.

சட்டம் பாஸ் பண்ணியிருந்தாலும், அரசியலமைப்பு அமர்வுக்கு போன பல வழக்குகளில் நமக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. அதனால்தான், ஜல்லிக்கட்டுவை பாதுகாக்க ஒரு கமிட்டி அமையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்தபடி இருக்கிறோம். வழக்கில் அக்கறை செலுத்தச் சொல்கிறோம். ஆனா, அரசுக்கு இதில் துளியும் ஈடுபாடு இருப்பதாகவே தெரியவில்லை. பீட்டாவால் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்து சூழ்ந்திருக்கிறதுங்கிறது உண்மை'' என்கிறார் அழுத்தமாக.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டப்போராட்டங்களை நடத்தி வருபவர் இலங்கை மாகாண அமைச்சரான தமிழகத் தமிழர் செந்தில்தொண்டமான். இவர் வளர்த்துவரும் 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. மெரினா டிராபி நடத்தி, இந்திய அரசை நினைவு ஸ்டாம்ப் வெளியிட வைத்த அவர் நம்மிடம், ""தமிழர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டு ரீதியாகவும் இரண்டற கலந்துவிட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக பொய்யான-அபத்தமான குற்றச்சாட்டை வைத்து தடை வாங்க துடிக்கிறது பீட்டா. தமிழக விவசாயிகள், காளைகளை சொந்த பிள்ளைகளாகத்தான் வளர்க்கின்றனர். எனது காளைகளுக்கு கேரவேன் பாதுகாப்பு கொடுத்து வருகிறேன். நாங்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டுகளிலும், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளிலும் இடம் பெற்றிருக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஆனா, கேரள கறிகடைகளுக்கு காளைகளை அனுப்புகிறார்கள் என பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறது பீட்டா. உண்மையில் விலங்குகளுக்காக பரிந்துபேசும் பீட்டாவிடம், ஜல்லிக்கட்டு காளைகளை பாதுகாக்க எந்தக் கொள்கைத் திட்டமும் இல்லை. அதன் சதியை தமிழக இளைஞர்கள் உடைத்தெறிவார்கள்''’என்கின்றார் உணர்வுபூர்வமாக.

இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விழாக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில் அதனையும் பயன்படுத்த பீட்டா முயற்சிக்கலாம் என்ற அச்சமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் உள்ளது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த சிலரோ மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், விலங்குகள் பாதுகாப்பு நல ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை நடத்தியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு எதிராக சத்தமில்லாமல் டெல்லியில் நகரும் சதிகளை எடப்பாடி அரசு எப்படி முறியடிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆர்வலர்களும்.

-இரா.இளையசெல்வன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்