இந்தியாவின் மதநல்லிணக்கத்தைக் கேள்விக் குறியாக்குகிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019. மதப்பிரிவினையை வலியுறுத்தும் இந்தச் சட்டத் திருத்தத்தை வடகிழக்கு மாநிலங்கள், போராட்டங்களை முன்னெடுத்து எதிர்த்தன. காஷ்மீர் பாணியில் அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற மத்திய அரசு, எதிர்பார்த்த வெற்றி யைப் பெறவில்லை.
இந்த நிலையில்தான், இந்தியத் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள் தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள். அவர்கள் மீதும், வன்முறையைக் கட்டவிழ்த்து கொடூரத் தாக்குதலை முன்னெடுத்தது காவல்துறை. பல்கலைக்கழகமே வன்முறைக்காடாக காட்சி யளித்தது. மாணவர்கள் தீவிரவாதிகளைப் போல நடத்தப்பட்டார்கள். மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த காவல்துறை, பாலியல் ரீதியில் அத்து மீறியதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைத் தந்தன. ஒரு மாணவர் கண்பார்வையை இழந்து விட்டார். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ரத்தக் காயங்களுடன் காவல்நிலை யங்களில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அலிகார் பல்கலைக் கழகத்தில் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். ஒரு மாணவரின் கையே துண்டானது. விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலை நிர்வாகிகள் ஒருபுறம் நிர்பந்திக்க, இணைய சேவையும் முடங்கியது. இத்தனை அச்சுறுத்தல் களும் மாணவர்களை தடுத்து நிறுத்திவிடும் என அரசு எண்ணிய வேளையில்தான், தலைநகரில் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கும், அரசமைப்புக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர்.
போபாலின் மக்கன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழகம், புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மைசூரு பல்கலைக்கழகம், கோட்டயம், கொச்சி, காசர்கோடு, மலப்புரம் பல்கலைக்கழகங்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் என இந்தியா முழுவதும் இருக்கும் மிகமுக்கியமான பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. கடந்த 15-ந் தேதி சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிய இரண்டையும் திரும்பப் பெறக்கோரியும், இந்திய அரசியலமைப்பை மதிக்காத போக்கைக் கைவிடுமாறும் மத்திய அரசைக் கண்டித்து 17-ந் தேதி காலை போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இணைந்துகொள்ள டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் இருந்து பதாகைகளுடன் பேரணியாக வந்த 70 மாணவர்களை, காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர்.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்காக சென்ற இரண்டு மாணவர் களை, அங்கிருந்து கைதுசெய்து கூட்டிச்சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், போராட்டத்தைக் கைவிடுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தியது காவல்துறை. இருந்தபோதும், கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் போராட்டத்தைத் தொடர முடிவுசெய்த மாணவர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். நேரம் செல்லச்செல்ல போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே 23-ந் தேதிவரை பல்கலைக்கழகத் துக்கு விடுமுறை வழங்குவதாக அறிவித்ததோடு, விடுதிகளையும் விட்டு வெளியேறுமாறு மாணவர்களை வலியுறுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம்.
ஒருகட்டத்தில் 20 மாணவர்களே எஞ்சியிருந்த நிலை யில், இரவு அங்கேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந் தனர். 18-ந் தேதி காலையும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க. மாணவரணியைச் சேர்ந்த மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக நடந்துசென்றனர். ஒருவேளை இந்தப் பேரணி யுடன், தலைமைச் செயலகத்துக்கு அருகில் இருக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களும் இணைந்து விடுவார்களோ என்று எண்ணி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் களை ஆரம்பத்திலேயே கைதுசெய்து கூட்டிச்சென்றனர். சென்னை பல்கலைக்கழக மாணவர்களை கலைந்து செல்லுமாறு நிர்வாகம் வலியுறுத்தியபடியே இருந்துள்ளது. இறுதியாக இரவு 11 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைதுசெய்து, வெளியேற்றி விடுவித்துச் சென்றனர் காவல்துறையினர்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மாணவர்கள், டிசம்பர் 17-ந் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மாண வர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட தால் பரபரப்பு கூடியது. நூற்றுக்கணக் கான போலீசார் குவிக்கப்பட்டு, பேச்சு வார்த்தை நடத்திய பிறகே மாணவர்கள் கலைந்துசென்றனர். "சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறா விட்டால், குடியரசுத் தலைவர் வருகையின்போது மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்து வோம்' என மாணவர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.
திருச்சியில் ஜமால் முகமது, ஜோசப் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உறையூரில் அனைத்திந் திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த மாணவர் கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். கோவை யில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாண வர்கள், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள்மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கவர்னரை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதி களிலும் மாணவ அமைப்பினர் ரயில் நிலையங் களை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கடலூரில் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள், வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி மாணவர் கள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். சென்னை புதுக்கல்லூரி, எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி என பல கல்லூரி மாணவர்களும் போர்க்குரல் எழுப்பினர்.
மாணவர்கள் போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரி யப்பனிடம் பேசியபோது, ""அரசியல் கட்சிகளையும் மாணவர்களின் போராட்டம் களத்திற்கு இழுத் துள்ளது. இதைக் கண்டு அஞ்சும் அரசுகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கி வருகின்றன. இந்தப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும். கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைப் போலவே, தமிழக அரசும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். 23-ந் தேதி அனைத்துக்கட்சிகள் பேரணி நடத்தும் நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் துரிதமாக முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் இன்னும் தீவிரமடையும்'' என்று வலியுறுத்துகிறார்.
நவம்பர் 16-ஆம் தேதி சி.பி.எம். முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகள் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பின. 17-ஆம் தேதி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், "இது குடியுரிமை சட்டமா, குழி பறிக்கும் சட்டமா?'' என கேள்வி எழுப்பினார்.
நாடே கொந்தளித்து போராட்டங்கள் வெடித்துவரும் சூழலிலும், என்ன நடந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதேசமயம், “குடி யுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியது. அடுத்ததாக தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் கணக்கெடுப்பை நாடு முழுவதும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, பல ஆயிரம் கோடிகளை அதற்காக செலவிடப் போவதாக சொல்கிறது. "இந்த நாட்டில் சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் செழித்தோங்க வாழ்கிறோம். எங்கள் மாணவப்பருவம் அதை மிகஅழகாக வளர்த்தெடுக் கிறது. இந்தநிலையில், பிரிவினை சட்ட திட்டங் களைக் கொண்டுவந்து, நாட்டைப் பிளவுபடுத்தும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேற விடமாட் டோம்' என முழங்குகிறார்கள் மாணவர்கள்.
-ச.ப.மதிவாணன்