சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பொறுப்பேற்ற பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கருத்தரங்கமே அரசியல்ரீதியாகச் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியார் பல்கலையில், கடந்த 2008-ம் ஆண்டில், "முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம்' தொடங்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், இந்த மையத்தைத் தொடங்கு வதற்காக கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாயை தொகுப்பு நிதியாக (கார்பஸ் ஃபண்ட்) வழங்கினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் தமிழ்ப்பணி, அரசியல், பொதுவாழ்வு குறித்து ஆய்வுகள் நடத்தவும், அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் பிஹெச்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் இந்த தொகுப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியை பயன்படுத்திக் கொள்வதென்று அப்போது பல்கலையுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
2011-2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் எந்த ஓர் ஆய்வும் நடத்தப் படாமல் கலைஞர் ஆய்வு மையம் முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள தி.மு.க., கலைஞர் ஆய்வு மையத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. அதையடுத்து, இப்பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன், முதன்முதலில் கலைஞர் ஆய்வு மையத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி ஒரு கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். 'வேத சக்தி வர்மக்கலையும் பண்பாட்டுப் பின்புல மும்' என்ற தலைப்பில் கருத்தரங்கிற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருந்த நிலையில், திடீ ரென்று நிகழ்ச்சியை ரத்து செய்தது பல்கலைக்கழ கம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாண வர்கள், சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பல்கலை யின் திடீர் முடிவு சலசலப்பை ஏற்படுத்தியது.
''கலைஞர் ஆய்வு மையத்தில் அடுத்தடுத்து என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம்? எதிர்காலத் திட்டங்கள், அதற்கான செலவுகள் குறித்து அன்று துணைவேந்தருடன் ஆலோசனை நடத்தி வந்தோம். எங்களுக்கே நிகழ்ச்சி ஏன் ரத்து செய்யப் பட்டது என்ற முழு விவரம் தெரியவில்லை,'' என்கிறார் கலைஞர் ஆய்வு மையத்தின் ஒருங் கிணைப்பாளரான தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மைதிலி.
இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ''பெரியார் பல்கலைக் கழகமா? ஆர்.எஸ்.எஸ். பல்கலைக்கழகமா? ஆர்.எஸ்.எஸ். கருத்துக் களை அறிவியல் அல்லது தற்காப்புக்கலை என்ற பெயரில் திணிப்பதுதான் நோக்கமாக தெரிகிறது'' என்று ஆவேசமாகக் குறிப் பிட்டிருந்தார். தி.வி.க. நிர்வாகி கொளத்தூர் மணி, ''பெரியார் பல்கலையில் மதவெறிப் போக்குடன் நடந்துகொள்ளும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆகஸ்டு 23-ம் தேதி பல்கலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா விடம் கேட்டபோது, ''அப்பா (வீரபாண்டி ஆறுமுகம்) அமைச்சராக இருந்தபோது, கலைஞர் பெயரில் ஆய்வு நடத்த கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஆய்வு மையம் தொடங்கப்பட் டது. கடந்த பத்து ஆண்டுகளாக கலைஞர் பற்றி எந்த ஆய்வும் பண்ணல. தமிழ் மொழியில் அக்கறை உள்ள ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் பெயரளவுக்கு ஒருவரை நியமித்திருக்கிறார்கள்'' என்றார். துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மாளிகையே முழு அதிகாரம் செலுத்தி உள்ளது.
இதுபற்றி பெரியார் பல்கலை பேரா சிரியர்கள் தரப்பில் பேசினோம். பெரியார் பல்கலைக் கழகத்திற்குள் மெல்ல மெல்ல காவிக் கலாச்சாரத்தை மத்திய அரசு, ஆளுநர் மூலம் புகுத்தி வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசு இதற்கு பக்கபலமாக இருந்தது. அதற்கேற்ப ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட துணை வேந்தர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். வேதத்திற்கும் கலைஞர் ஆய்வு மையத்திற்கும் என்ன சம்பந்தம்?'' என்கிறார்கள்.
இதுபற்றி பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டோம். ''வேதசக்தி வர்மக்கலையும் பண்பாட்டுப் பின்புலமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய் திருந்தோம். இதைப்பற்றிப் பேச அழைக்கப்பட்டி ருந்த பேராசிரியர் சண்முகம், இந்த தலைப்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளார். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கோவையில் நடந்த செம்மொழித் தமிழ் மாநாட்டில்கூட இதுகுறித்து அவர் கட்டுரை வெளியிட்டுள்ளார். வேதசக்தி என்பது பலரும் நினைப்பது போல் வேதம் பற்றியது அல்ல; அது வேதியியல் மாற்றங்கள் பற்றி யது. சிலர் தவறாக புரிந்து கொண்டு அரசியலாக்கியதால், அந்த நிகழ்ச்சியை கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் நோக்கத்தில் அரசியல் ஏதுமில்லை,'' என்றார்.
நீண்ட காலமாகவே கொங்கு மண்டலத்தில் அரசியல் தளத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது பா.ஜ.க. அடுத்தடுத்து பா.ஜ.க. பின்புலத்துடன் துணைவேந்தர்கள் நியமிக்கப் பட்டதும், அதற்கேற்ப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதும்தான் பெரியார் பல்கலையை அண்மைக்காலமாக சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. "பல்கலைக்கழக நிர்வாகம், சார்பற்று செயல்பட வேண்டும்' என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.