முக்கால் நூற்றாண்டுக்கு முன், 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி, சேலத்தில் பெரியாரின் தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடந்தது. நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் நடத் திய அந்த மாநாட்டில், திராவிடர் கழகம் உதயமானது. அதற்கான தீர்மானத்தை பேரறிஞர் அண்ணாவை வைத்து முன் மொழியச் செய்தார் பெரியார். அதற்காகவே, அந்தத் தீர்மானம் "அண்ணாதுரை தீர்மானம்' என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.

dk

75 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதே ஆகஸ்ட் 27-ல் அதே சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு நடை பெற்றது. சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த, அன்னை மணியம்மையார் அரங்கத்தில் மாநாடு தொடங்கியது.

97 வயதிலும் தளராமல் இயக்கப் பணியாற்றும் பொத்த னூர் சண்முகம், மாநாட்டைத் திறந்துவைத்தார். திராவிடர் கழகத்தின் மாணவரணிச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், திராவிடர் கழக கொடியை ஏற்றிவைத்தார். தலைமுறைகள் தாண்டியும் கொள்கை ஈர்ப்போடு தி.க. செயல்படுவதற்கான அடையாளமாக இந்த நிகழ்வு இருந்தது. மாநாட்டில் கறுப்பு உடையணிந்து, குடும்பம் குடும்ப மாக, கைக்குழந்தைகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டி ருந்தனர்.

Advertisment

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக சமூகநீதி, மனித உரிமை, பகுத்தறிவு சிந்தனைகள், இடஒதுக்கீடு, தனியார்த் துறையில் வேலைவாய்ப்பு, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. குறிப்பாக, அதில் இடம்பெற்றிருந்த, ’’"சினிமாவை மூலதனமாக்கி, அதன் கவர்ச்சி யுடன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண் டும்'’என்கிற 22-வது தீர்மானம் கவனம் ஈர்த்தது. தி.க. தலைவர் கி.வீரமணி தொகுத்திருந்த திராவிடர் கழக வரலாறு இரண்டு பாகங்களை பேராசிரியர் சுப.வீ. வெளியிட்டு கருத்துரை வழங்கினார்.

காலை நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா சிரியர் ஜவாஹிருல்லா வாழ்த் துரை வழங்கினர். தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் அதைப் பொருட் படுத்தாமல் திராவிடர் கழக கொடியைப் பிடித்துக்கொண்டு மேடையேறினார். 1944-ல் நடைபெற்ற முதல் மாநாட்டில், 11 வயது சிறுவனாக குதிரைமீது அமர்ந்து பிரச்சாரம்செய்த வீரமணி, இன்று மாநாட்டின் பவளவிழா மேடையில் தலைவராக அமர்ந்திருப்பதை பலரும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர்.

dk

Advertisment

மாலை, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கிய கறுஞ்சட்டைப் பேரணி, கோட்டை மைதானத்தில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடந்தது. கட்டுப்பாடான வரிசையில், கருத்துச் சுதந்திரத்துக்கான கண்ணியமான முழக்கங்களோடு ஊர்வலமாக சென்றார்கள் கறுஞ்சட்டைத் தோழர்கள். திராவிடர் கழக கொடியை உருவாக்கியபோது, கறுப்பின் நடுவில் சிவப்பு வட்டம் வரைய தன் ரத்தத்துளிகளை கலைஞர் சிந்தினார். ""இரண்டு கழகங்களுக்கும் ஒரே கொள்கைதான். இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி'' என்றார் தி.மு.க.வை தொடங்கிய அண்ணா. அவற் றின் பிரதிபிம்பமாக தி.க. உறுப்பினர்களோடு, தி.மு.க. தொண்டர்களும் பெருமளவு கலந்துகொண்டதால், மிகப்பெரிய கோட்டை மைதானத்தின் பந்தலையும் தாண்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறை வால் வரமுடியாத சூழலில், கட்சி சார்பில் துரைசாமி கலந்து கொண்டு பேசினார். சிறுபான் மையினர் நலனில் பெரியார் காட்டிய அக்கறையை விளக்கிப் பேசினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன். திராவிடம் என்ற பெயர் எதற்காக வைக்கப்பட்டது. அது இன்றைக்கும் எந்தளவுக்கு எல்லோருக்குமான அடையாளமாக இருக்கிறது என்பதன் ஆழத்தை விளக்கினார் வி.சி.க. தலைவர் முனைவர் திருமாவளவன்.

தி.க. தலைவர் வீரமணி இன்றைக்கிருக்கும் அச்சுறுத்தல்களை எடுத்துச்சொல்லி, ""நாங்கள் தொடங்குகிறோம்… நீங்கள் முடிக்கவேண்டும்''’என்று ஸ்டாலினை நோக்கி குறிப் பிட்டார். சேலம் தாரமங்கலத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு வந்திருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னுடைய நிறைவுரையில், “காஷ்மீரில் தொடங்கி, தமிழ்நாடு வரை பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து பேசிவிட்டு, “தி.க. தலைவரை நோக்கி, "நீங்கள் தொடங்கியதை நாங்கள் முடிப்பது மட்டுமல்ல… உங்களுடன் இணைந்து, பிணைந்து, நீங்கள் விடுக்கும் கட்டளைகளை ஏற்றுநடக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'’என்றது உணர்வுப்பூர்வ நிகழ்வாக இருந்தது. இரவு 10 மணி கடந்தும் கூட்டம் குறைய வில்லை.

மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்த தி.க. தொண்டர்கள், தூங்கியிருந்த குழந்தைகளை தோளில் போட்டுக்கொண்டு, பெட்டிகளை தலையில் சுமந்தபடி கிளம்பினர்.

காலை நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியபோது, “""எங்கள் கட்சிக்கு வந்தால், பஞ்சாயத்துத் தலைவர் பதவியாவது கிடைக்க வாய்ப்புண்டு. தி.க.வில் அதுவும் கிடையாது. உள் ளாட்சித் தேர்தலில்கூட நிற்க முடியாது. எந்தப் பதவியையும் அடையமுடியாது. ஒரு பைசா வருமானமும் கிடையாது. அப்படியிருந்தும் குடும்பம் குடும்பமாக தோழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால், அங்குதான் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியார் இன்னும் தேவைப் படுவதை ஆசிரியர் வீரமணி, தன் பணிகள் மூலம் நிரூபிக்கிறார்'' என்றார். பவளவிழா மாநாடு அதை உறுதி செய்தது.

-கீரன், ச.ப.மதிவாணன்