மிழக ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு. தனது அந்தக் கனவு நிறைவேறாமல் மறைந்தார் பெரியார். அவருடைய கனவை நிறைவேற்ற 1971-லேயே சட்டமியற்றிய கலைஞர், அது சட்ட சர்ச்சைகளை சந்தித்ததால்... 2006-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் இதற்கான வலுவான சட்டத்தை நிறைவேற்றியதுடன், தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகராக தகுதியும் பயிற்சியும் பெறும்வகையில் சைவ மற்றும் வைணவ பயிற்சி மையங்களை உருவாக்கினார்.

Advertisment

archagar

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாதந்தோறும் 500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவைச் சேரந்த 206 பேர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றனர். அவர்களுக்கு கலைஞர் நியமன ஆணைகளையும் வழங்கினார்.

Advertisment

ஆனால், அதை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவை உச்ச நீதிமன்றம் சென்றன. ஆனால், இடைக்காலத் தடைவிதித்த நீதிமன்றம், பின்னர், வழக்கை விசாரித்து, 16-12-2015-ல் “ஆகம விதிகளின் அடிப்படையில் தகுதிபெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும்’’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த 2017-ல் அர்ச்சகர்களைத் தேர்வுசெய்ய இந்து அறநிலையத்துறை தேர்வு அறிவித்தது. அதில் தேர்ச்சிபெற்ற மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி மதுரை அழகர் கோயிலுக்கு கட்டுப்பட்ட ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இவர்தான் தமிழகத்தின் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் அர்ச்சகர்.

Advertisment

நக்கீரனுக்காக அவரைச் சந்தித்தபோது... ""எம்.ஏ. தமிழ் படித்த நான், 2006-ல் கலைஞர் அய்யா ஆட்சியில் தொடங்கப்பட்ட முதல் பயிற்சி வகுப்பில் தேறினேன். உச்சநீதிமன்றத் தடையால் பணியில் சேரமுடியவில்லை. 2017-ல் இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வில் தேர்ச்சிபெற்றதால் பணி நியமனம் கிடைத்தது. என் கனவை நனவாக்கிய கலைஞர் அய்யாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதுபோல உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல அர்ச்சகர் பயிற்சி எடுத்த அனைவரையும் பணியில் அமர்த்த வேண்டும்'' என்றார் மாரிச்சாமி உருக்கமுடன்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க சட்டமியற்றிய கலைஞரின் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. சமூகநீதி அர்ச்சகர் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார்.