தனது தந்தை குயில்தாசனின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள, தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள என 11 காரணங்களைக் கூறி சிறைத்துறையிடம் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் 30 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் பேரறிவாளன்.
பேரறிவாளனுக்கு இரண்டு சகோதரிகள். அதில் மூத்த சகோதரி அன்புமணியை கிருஷ்ணகிரியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்ப்பற்றாளரான ராசா திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதியின் மகள் செவ்வைக்கு திருப்பத்தூர் அருகிலுள்ள ஏ.கே.மோட்டூரை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நவம்பர் 23-ந் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இணையர் அறிமுக விழாவும், 24-ந் தேதி காலையில் வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்துகொள்ள சிறைத்துறை அனுமதி வழங்கியிருந்தாலும் இரவு எங்கும் தங்கக்கூடாது என்கிற விதியிருப்பதால் 23-ந் தேதி மாலை 5:30 மணிக்கு கிருஷ்ணகிரி சென்ற பேரறிவாளன், அறிமுக விழாவில் கலந்துகொண்டு அங்கு வந்திருந்த உறவினர்களை சகோதரிகள் அறிமுகப்படுத்த, அவர்களிடம் நலம் விசாரித்தார். அதோடு அவர்களுடன் ஞாபகார்த்தமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
திருமணத்தில் பறை இசைக்க... தானும் பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "நாம் தமிழர் கட்சி' சீமான், இயக்குநர் அமீர், நடிகர் பொன்வண்ணன், சத்யராஜ் உட்பட பல உணர்வாளர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். அரசியல் மற்றும் அமைப்பு களின் தலைவர்களை சந்திக்கக்கூடாது என்கிற கண்டிஷன் போட்டிருந்தது சிறைத்துறை. அதையும் மீறி பேரறிவாளன், சீமான் போன்றவர்களின் தோளில் கைபோட்டு மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, அவர்களிடம் சிலபல வார்த்தைகள் பேசியது... பாதுகாப்புக்கு சென்றிருந்த டி.எஸ்.பி. தங்கவேல் குழுவை அதிர்ச்சியடைய வைத்தது. பேரறிவாளனின் நெருங்கிய உறவினரும், தமிழக அமைச்சருமான வீரமணி இரவு வந்து மணமக்களை வாழ்த்தினார். இரவு 9:30 மணிக்கு அங்கிருந்து ஜோலார்பேட் டைக்கு அழைத்து வரப்பட்டார் பேரறிவாளன்.
24-ந் தேதி காலை 8 மணியளவில் மீண்டும் மண்டபத்துக்குச் சென்றார் பேரறிவாளன். கொளத்தூர் மணி, திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி வந்திருந்தனர். இணை ஏற்பு நிகழ்வு முடிந்ததும் உறவினர்களிடம் மீண்டும் பேசிவிட்டு மதியம் 1 மணியளவில் அங்கிருந்து கிளம்பி மகிழ்ச்சியுடன் தனது வீட்டுக்கு வந்தார்.
இதேபோல் ராபர்ட் பயாசும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகன் கவிக்கோவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 30 நாட்கள் பரோலில் வந்தார்.
-து. ராஜா, அரவிந்த்