தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடி சட்டமன்றத் தொகுதி பேராவூரணி. முழுமையாக தென்னை விவசாயத்தையும், கடல் தொழிலையும் நம்பியுள்ள மக்கள் வசிக்கும் தொகுதி. மொய் விருந்து என்னும் கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய தொகுதி இது.
கல்லணை கடைமடை பாசனப் பகுதியான இங்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்பதால் நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்திற்கு மாறிய விவசாயிகள் அதிகம். கஜா புயலால் மொத்த தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகளும், தென்னை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த சிறு முதலாளிகள், தொழிலாளர்கள் என அனைவருமே இடிந்துபோயுள்ளனர். சிறு முதலாளிகள் மூடிய தென்னைநார் தொழிற்சாலைகளை இன்னும் திறக்கமுடியவில்லை. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். இதையெல்லாம் மாற்றக்கூடிய, அல்லது இவை சார்பான நம்பிக்கையைத் தரக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளைத் தரக்கூடிய கட்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தி.மு.க.வைச் சேர்ந்த அசோக்குமார் வெற்றிபெற்றார். தேர்தலுக்கு சில வாரங்கள்வரை தடுமாற்றமாக இருந்த நிலையில் மாஜி குழ.செல்லையாவின் மகன் வழக்கறிஞர் அருள்நம்பி அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்துசேர்ந்தது பலமானது.
தேர்தல் வாக்குறுதியாக பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயில் புதிய தேருக்கு தேர்வீதி அமைத்து, தேரை ஓட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னவர், 5 ஆண்டுகள் முடியப்போகிறது இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. தேர் மூடியே கிடக்கிறது என்ற மனக்குமுறல் தொகுதி மக்களிடம் பலமாகக் கேட்கிறது. அதேபோல பேராவூரணி பேரூராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து நீதிமன்றம் வரை சென்று நடவடிக்கையில் உள்ளது. ஆனால் எம்.எல்.ஏ. முறைகேடு செய்தவர் களைக் காப்பாற்றிவருகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. தொகுதியிலுள்ள ஏராள மான கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. ஒரு வருடத்தில் உடைக்கப்படும் என்பது தெரிந்தே ஏனாதிகரம்பை பெருமாள் கோயில் கல்லணைக் கால்வாய் பாலத்திற்கு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கி, வீணடித்துவிட்டார் என்ற குமுறல்களும் தொகுதிக்குள் கேட்கிறது.
இந்த நிலையிலும் பேராவூரணி தொகுதி மீண்டும் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. அசோக் குமாருக்குதான் என கட்சித் தலைமை சைகை காட்டிவிட்டது. பேராவூரணி நகர சாலை விரிவாக்கம், தொகுதி முழுவதும் சாலைகள், குடிநீர் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். அடிப்படை வசதிகள் ஓரளவு மக்களுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் இவரை மக்கள் ஏற்பார்கள். நீலகண்ட விநாயகர் கோயில் தேர் வீதிக்காக நில உரிமையாளர்களிடம் பேசி வருகிறார். விரைவில் அதற்கும் தீர்வுகாண்பார். தொகுதி முழுவதும் நல்லது, கெட்டதுகளுக்கு அனைத்து வீடுகளுக்கும் ஜாதி பார்க்காமல் சென்றுவருகிறார். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார். தேர்தல் செலவுக்காக 2 மாதம் முன்பே மொய் விருந்து நடத்தி பணத்தையும் தயாராக வைத்திருக்கிறார். மீண்டும் அசோக்குமார்தான் வேட்பாளர்'' என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதேநேரத்தில், கடந்த தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு மாறிவந்து தேர்தல் பணிகளைச் செய்த வழக்கறிஞர் அருள்நம்பிக்கு கடந்த மாதம்தான் சேது பாவாசத்திரம் மேற்கு ஒ.செ. பதவியை கட்சி கொடுத்திருக்கிறது. இப்போதுதான் கட்சியின் கடைக்கண் பார்வை பட்டுள்ளது. அதனால் தனக்கு சீட்டு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அதேபோல சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த முத்துமாணிக்கம் உள்பட பலரும் சீட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் மாஜி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகனும் ஒ.செ.வுமான இளங்கோ கடந்த சில வருடங்களாகவே தனக்குத்தான் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று தொகுதி முழுவதும் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் விடாமல் சென்றுவருவது, துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்று தன்னை மக்களிடம் அறிமுகம் செய்துகொண்டு சீட்டுக்காக காத்திருக்கிறார். அதேபோல மாஜி எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் கடந்தமுறை தோற்றதால், இந்த முறையும் நமக்கே சீட்டு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலிருக்கிறார். மேலும், ஒ.செ. துரைமாணிக்கம், ஒன்றிய சேர்மன் சசிகலாவின் கணவர் ரவிசங்கர் எனக்கோ அல்லது என் மனைவிக்கோ சீட்டு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். சீட்டுக்காக போட்டி போடும் இவர்கள், கடந்த 2 மாதம் முன்பு வந்த எடப்பாடிக்கு பட்டுக்கோட்டையிலிருந்து போட்டி போட்டு பதாகை வைத்து பலத்தைக் காட்டியிருக் கிறார்கள்.
அதேபோல அ.தி.மு.க கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வில் ஒன்றியக் கவுன்சிலராக இருந்த மாநில பொறுப்பாளர் பெரியநாயகியும், மாநில விவசாய அணி பண்ணவயல் இளங்கோவும் சீட்டுக்காக மல்லுக்கட்ட, இடையில் பேராவூரணி தொகுதிக்கு வந்து கருப்பு முருகானந்தம் போட்டியிடலாம் என்றும் கூறுகின்றனர் பா.ஜ.க.வினர்.
தே.மு.தி.க.வில் முன்னாள் வேட்பாளர் பழனிவேல் மீண்டும் வேட்பாளராக்கப்படலாம் என்கின்றனர். நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆலங்குடி தொகுதி யைச் சேர்ந்த பொறியாளர் ராஜாராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிமனை திறந்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/perauarani-2025-12-08-16-44-15.jpg)