ஓட்டுக்கு நோட்டு என்பது இன்றைய அரசியல் கட்சிகளின் தாரகமந்திரமாகவே மாறிவிட்டது. அதனால் ஜனநாயகம், படாதபாடு பட்டுவருகிறது. இந்த நிலையில் இதோ மறுபடியும் தேர்தல், நம் வீட்டு வாசலை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கூடவே அரசியல் கட்சிகள், பரபரப்பாகப் பிரிக்கும் கரன்சிக் கட்டுகளின் ’சரசர’சத்தமும் நம் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த ‘ஓட்டுக்கு நோட்டு’ எனும் விபரீதப் போக்கை மக்கள் உணர்ந்திருக்கிறார்களா? அது குறித்து வாக்காளர்களாகிய அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய, ’ஒரு பானைச் சோறாக’ திண்டுக்கல் மாவட்டத்தில் களம் இறங்கினோம். அப்போது...
கூலித்தொழிலாளியான செட்டியபட்டி பொன்னுத்தாயி, ""உள்ளாட்சித் தேர்தலின்போதே கவுன்சிலர்களும் மற்றவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்னூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய்வரை கொடுத்தாங்க. அப்படியிருக்கும்போது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில், அரசியல் கட்சியினர் ஆயிரம் ரூபாய் கொடுப் பாங்கன்னு எதிர்பார்ப்பில் இருக்கிறோம். நாங்களாகப் போய் ஓட்டுக்கு பணம் கொடுங் கன்னு கேட்பதில்லை. அரசியல்வாதிகள்தான், வீடு தேடி வந்து பணத்தைக் கொடுக்கறாங்க. அப்படி வீடுதேடி வந்த பணத்தை எப்படிங்க வாங்காம இருக்க முடியும்''’என்கிறார் அப்பாவியாக.
பெட்டிக்கடைக்காரரான நல்லாம்பட்டி முத்துராஜோ, ""பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தி.மு.க.தான் முதன்முதலில் திருமங்கலத்தில் தொடங்குச்சு. அதைத் தொடர்ந்துதான் ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதனால், வரக்கூடிய தேர்தலிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் என எல்லோரும் பணம் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கிட்டு, நமக்கு எந்தக் கட்சிக்கு ஓட்டு போடணும்னு தோணுதோ, அதற்குப் போட்ற வேண்டியதுதான்''’என்றார் கூலாக.
வாழக்காபட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான சரசுவோ, ""தேர்தல் வந்தாலே கட்சிக்காரங்க வீடுவீடாக வந்து எத்தனை ஓட்டுன்னு கணக்கு எடுத்திட்டுப் போயிடறாங்க. அதுக்கு அப்புறம், அவங்களே வந்து ஓட்டுக்கு இவ்வளவுன்னு கணக்குப் போட்டுப் பணம் கொடுக்கறாங்க. அதை நாங்க மறுக்கவும் முடியல, அதனால கொடுக்கிற பணத்தை வாங்கிகிட்டு வீட்ல இருக்குற ஓட்டுகளைப் பிரித்து, ஆளுக்கு ரெண்டுன்னு போட்ருவோம்''’என்கிறார், தனக்குத் தெரிந்த நியாயப்படி.
ஜம்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியான பழனிச்சாமி நம்மிடம், “ ""இதுவரை 17 தடவை ஓட்டுப் போட்டி ருக்கிறேன். ஆனால் ஓட்டுக்குப் பணம் வாங் கியது இல்லை. தேர்தல் சமயத்தில் யாராவது வீட்டுக்கு வந்து பணம் கொடுத்தாலும் "வேண்டாம்யா'ன்னு சொல்லிவிடுவேன். என் குடும்பத்து உறுப்பினர்களும் வாங்கமாட்டாங்க. பணம் வாங்கிவிட்டால் உதவி என்று போனால் எதுவும் செய்யமாட்டார்கள். ஓட்டுப்போடப் போகும் போது, காசு கொடுக்குறவங்க, பார்வையாலேயே மிரட்டி ஓட்டுபோடச் சொல்லுவாங்க. அப்படி மானத்தை விற்று அந்தப் பணத்தை வாங்க என் மனசாட்சி ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை''’’ என்று தன்மானத்தோடு நிமிர்ந்து சொன்னார். அவருக்கு மகிழ்வோடு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
""இந்த ஆட்சியில் விலைவாசியெல்லாம் தாறுமாறாக ஏறிப்போயிடுச்சு. தினசரி குடும்பத்த நடத்துறதே பெரும்பாடா இருக்கு. அப்படி இருக்கும்போது தேர்தல் நேரத்தில் அரசியல் வாதிகள் வீடு தேடி வந்து பணம் கொடுக் கிறாங்க. அதைவச்சு இரண்டு மூணு நாளைக்கு பொழப்ப ஓட்டிக்க வேண்டி யதுதான். அதோடு குழந்தைகளுக் கும் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு அப்போதைக்கு நல்ல வங்க யாருன்னு மனசுல தோணுதோ, அவங்களுக்கு ஓட்டுப் போட வேண்டியதுதான்''’-இது டி.கல்லுப்பட்டி குடும்பத்தலைவியான ஈஸ்வரியின் கருத்து.
கொடைக்கானலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பாஸ் கரனைச் சந்தித்தபோது “""ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவை, தேர்தல் ஆணையம் ஏற்று நடத்துது. அங்கே வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்பதோடு நிறுத்திக்கணும். அதுபோல் இந்தியாவிலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை தேர்தல்ஆணையம் ஏற்று நடத்தினால்தான் ஜனநாயக முறைப்படி மக்களும் தங்கள் இஷ்டம்போல் வாக்களிப்பார்கள். அதன்மூலம் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்''’என்கிறார் அழுத்தமாக.
கலிங்கம்பட்டிக்கும் சென்றோம். அங்கு நாம் சந்தித்த விவசாயி திருப்பதியோ, ’’""ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சி வரை வீடுதேடி வந்து அந்தந்தப் பகுதியில் உள்ள பொறுப் பாளர்கள் மூலமா பணம் கொடுத்துட்டுப் போகிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கச் சொன்ன பணத்திலேயே பாதியை எடுத்துக்கிட்டு மீதியைத்தான் கொடுக்கிறார்கள்''’என்று ஒரு அதிரடி உண்மையைப் போட்டு உடைத்தார்.
திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநரான ஐயப்பன், ""எந்தவொரு அரசு அலுவல கத்துக்குப் போனாலும் ஒரு கையெழுத்துக்கு நூறு முதல் இருநூறு ரூபாய் கொடுக்காமல் அதிகாரிகள் கையெழுத்து போடுவதில்லை. அப்படி 5 வருடமாக அதிகாரிகளே தினசரி லஞ்சம் வாங்கி வருகிறார்கள். அப்படி யிருக்கும்போது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தலில், அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதை எப்படிங்க வாங்காமல் இருக்க முடியும்? அவங்க ஒண்ணும் உழைத்த பணத்தை கொடுக்கலையே..?''’என்று நீதிகேட்கிறார்.
சின்ன பள்ளப்பட்டியில் வேகாத வெய்யிலில் நடந்துபோய்க்கொண்டிருந்த முதியவர் பழனிச்சாமியை நிழலில் ஓரங்கட்டிப் பேச்சுக்கொடுத்தபோது... ""சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருகிறார்களே தவிர, கட்சியை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் வருவதில்லை. அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொடுக்கும் பணத்தை வாங்காமல் எப்படி இருக்க முடியும்? வியாபாரிகள்ட்ட வியாபாரியாத்தான் நடந்துக்கணும். ஆனால் இந்தத் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யார் கொடுத்தாலும் பணத்தை வாங்கிக்குவேன். ஆனால் நான் ஓட்டு போடுவதெல்லாம் மனசாட்சிப்படி ஆட்சி மாற்றத்துக்காகத்தான்''’என்று தன் ஒரு கை விரல்களைப் பிரித்துக் காட்டினார்.
முன்னிலைக்கோட்டையைச் சேர்ந்த குடும்பத்தலைவி சுமதி நம்மை ஏற இறங்கப்பார்த்துவிட்டு, ""பொதுமக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் சரிவர ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தேர்தல் வந்தால் போதும், பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம்ன்னு நினைக்கி றாங்க. நாங்களும் யாரு அதிகமா பணம் கொடுக்கி றார்களோ அவர்களுக்கு ஓட்டு போட வேண்டிய மனநிலைக்கு வந்துட் டோம். வேற வழி? நாங்க ஒருத்தர் திருந்தினால் மட்டும் போதுமா?''’ என்றார் கொஞ்சம் காட்டமாகவே.
என்.ஜி.ஓ.காலனியில் நாம் சந்தித்த சமூக ஆர்வலர் தமிழ்ச் செல்வன் நம்மிடம், ""முப்பது வருஷமா மக்களுக்கு இலவசங் களைக் கொடுத்தே பிச்சைக் காரர்களாக ஆக்கிவிட்டதால்தான், ஓட்டுக்கும் பணம் வாங்கும் நிலை வந்துச்சு. எல்லா கட்சிகளும் கொள்கைகளை மறந்து... சாதி, மதம், பணம்னு முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சிடுச்சி. அப்படி யிருக்கும்போது, பணம் கொடுப் பவர்களைப் பிடித்து வீடியோ எடுக்கச் சொல்லி, தேர்தல் கமிஷனிடம் சொல்றது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அரசியல்வாதிகள் பணம் கொடுக்காமல் விட்டாலே மக்களும் கைநீட்டமாட்டார்கள். ஜனநாயக முறைப்படியும் வாக்களிப்பார்கள். அந்த நிலை இனி வரும் காலங்களில் வருமா? என்பதற்கும் உத்தரவாதம் இல்லை''’என்கிறார் யோசனையாய்.
பெரும்பாலான மக்கள், ஒழுக்கமற்ற அரசியல்வாதிகள் கொடுக்கும் பணத்தை வாங்குவதில் தவறே இல்லை என்று நினைப்பதை நம்மால் உணரமுடிகிறது. சிலர், தேர்தல் அடிக்கடி வராதா? வருகிறவர்கள் எவ்வளவு கொடுப் பார்கள்? என்று கணக்குப் போடுவதையும் அறிய முடிந்தது. இப்படி மக்களை, பண நோய் பிடித்துக்கொண்டு ஆட்டு வதை அறிய நேர்ந்த போது, கவலையே நெஞ்சைச் சூழ்கிறது.
பண நாயகத்தை ஜனநாயகம் வெல்லுமா?