சந்தன வீரப்பனை பிடிக்கச் சென்ற அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்காகவும், கோவை குண்டுவெடிப்பில் கைதான அப்பாவி இஸ்லாமியர்களுக்காக, இன்னொரு சாதி பெண்ணை காதலித்ததற்காக கொடூரமாகக் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதற்காகவும் சட்டப் போராட்டங்கள் நடத்தி, நீதியை நிலைநாட்டியவர் மக்கள் உரிமைப் போராளி வழக்கறிஞர் தோழர்.ப.பா.மோகன்.
டிசம்பர் 18ஆம் தேதி, “மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் (ஐ.த.ஈ.ட.ந.) 15ஆம் ஆண்டு துவக்கம், ஐ.நா.சபை அறிவித்துள்ள "மாண்பு, சுதந்திரம், நீதி'யை உறுதிப்படுத்த உறுதி ஏற்பு தினம், வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ‘மக்கள் விருது’ வழங்குதல் -ஆகிய முப்பெரும் விழா, புதுச்சேரி ஹோட்டல் அசோக்கில் விமரிசையாக நடைபெற்றது.
ஐ.த.ஈ.ட.ந. பொதுச்செயலாளர் இரா.முருகானந்தம் தலைமையுரையில், "பள்ளிக்குச் செல்லும் ஏழை மாணவிகளின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மாஃபியா கும்பலையும், அதற்கு துணைபோன 9 காவல்துறை அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்பியவர் ப.பா.மோகன்'' என்றும், "புதுச்சேரியில் அரிசிக் கடத்தலைத் தடுத்து நிறுத்தப் போராடியவர்'' என்றும் வழக்கறிஞர் ப.பா.மோகனை பாராட்டினார்.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி ஜெயச்சந்திரன் (ஓய்வு), மக்கள் விருதினை ப.பா.மோகனுக்கு வழங்கி, அவரைப் பாராட்டிப் பேசினார். அப்போது, “"ப.பா.மோகனை இந்த இயக்கம் பாராட்டுவது மிகப் பொருத்தமானது. மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பின் அடிப்படையிலான உரிமை. கருவில் இருக்கும் குழந்தைக்கும் உரிமை இருக்கிறது. குழந்தையை அழிப்பதற்கோ, அந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கோ கூட முடியாது. ஒரு உயர்சாதி பெண்ணை காதலித்தான், பழகினான் என்ற காரணத்திற்காக கோகுல்ராஜ் என்ற இளைஞனை அடித்து, உதைத்து, சித்திரவதைப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்யவைத்து, தலையை வெட்டிக் கொலை செய்து தண்டவாளத்தில் போட்ட சம்பவத்தில், சமூக அமைப்புகள் மக்கள் மன்றத்தின் மூலமாகவும், ப.பா.மோகன் போன்றவர்கள் நீதிமன்றத்தின் வாயிலாகவும் போராடுகிறார்கள்''’என குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்ட கூலி வேலைக்குச் சென்றவர்களைக் கொன்று குவித்த வழக்கில், தமிழக, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆசீர் தோழர், ப.ப.மோகனை, "ஆஸ்திரிய நாட்டு உயர் இனப் பறவையான வானம்பாடி, வான் மேகங்களில் நுழைந்து பாட்டுப் பாடி... அதன் இனிய, ஓங்கி ஒலித்த குரலால் மேகங்களைக் கலக்கி, மேகங்கள் மனம் கரைந்து மழையாகப் பொழிய வைத்து, வளம் பெருக வைத்தது. தனது நீதிக்குரலால் ஏழை-எளிய மக்களின் துயர்போக்க ஒரு ரூபாய்கூட வழக்கறிஞர் கட்டணம் வாங்காமல், அவர்கள் வாழ்வில் துன்பம் நீங்கி இன்ப மழை பொழிய வைக்க, நீதிக்காக ஓடி, ஓடி அலைந்து வழக்காடிய ‘நீதிக்கான வானம்பாடிதான் வழக்கறிஞர் ப.பா.மோகன்''’ என்றார்.
மக்கள் விருது’ கேடயத்தைப் பெற்று ஏற்புரையாற்றிய வழக்கறிஞர் ப.பா.மோகன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம நீதி, சமூக நீதி கேட்டு 15 ஆண்டு காலமாகப் போராடி வருகின்ற மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் களைப் பாராட்டினார். மேலும், “"1993 ஜெனிவா உடன்படிக்கைக்குப் பின், உலகிலேயே மனித உரிமை நீதிமன்றத்தை ஏற்படுத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவின் அரசியல் சாசனம் மிக அற்புதமானது. ஆனால் துரதிஷ்டவசமாக குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது. ஆனால், ஜெயச்சந்திரன் போன்ற ஒரு சில நீதி நாயகர்கள் மனித உரிமை ஆணையங்களில் தலைவர்களாக இருக்கின்ற காலங்களில், கேட்பாரற்று, புறக் கணிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கிற சுவர்கள், வேலிகளை உடைக்கலாம், ஆனால் நாம் உடைக்க வேண்டியது நம்மை சுற்றி இருக்கிற சாதிய மனோபாவத்தைத்தான். சாதி என்கிற மன நோயை உடைப்பதற்கான பண்பை உருவாக்குகின்ற கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. சாதி என்கிற கட்டமைப்பை உடைப்பதற்கு ரத்தக் கலப்பு ஏற்பட வேண்டும். அதற்கு அகமண முறை தகர்க்கப்பட்டு, கலப்பு மணம் நிகழ்தல் வேண்டும்''’என்றார்.
வழக்கறிஞர் ப.பா. மோகனுக்கு விருதுடன் வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயில், ஸ்ரீமதியின் தாயார் செல்விக்கு 25 ஆயிரமும், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்துக்கு 25 ஆயிர மும் வழங்கினார். பொரு ளாளர், ரா.மருதநாயகம் மிகச்சிறப்பாக அனை வரும் வியக்கும் வண்ணம் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புதுகை பூபாளம் கலைக்குழுவினர், சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
-சுந்தரபாண்டியன்
-சுந்தர் சிவலிங்கம்