திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆர்.கே.பேட்டை அடுத்துள்ள இராஜா நகரம் என்ற கிராமத்தில் வசித்துவரும் ஆதி திராவிடர் மக்களுக்கு குடியிருப்புக்காக 1998ஆம் ஆண்டு 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு நபருக்கு மூன்று சென்ட் வீதம், 56 பேருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் 24 வருடங்கள் கடந்தும் இதுநாள் வரை அந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டா இடத்தில் வீடு கட்ட முடியால் தவித்துவருகின்றனர்.
1998ஆம் ஆண்டு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட பட்டா இடத்தில் அப்பகுதி மக்கள் வீடு கட்டிக் குடியேற முயன்றபோது, எங்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் நீங்களும் குடியேறுவதா என்று அப்பகுதி ஆதிக்க ஜாதியினர், ஜாதிரீதியாக அவர்களைத் தடுத்துள்ளனர். அன்றிலிருந்து கடந்த 24 ஆண்டு களாக, மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ., தாசில்தார், மாவட்டக் கண்காணிப்பாளர், அரசியல்வாதிகள் என அத்தனை அரசு அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாகப் புகார்களைக் கொடுத்தும் வழிபிறக்காததால் நொந்துபோன மக்கள், 2018ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்திடம் புகாரளித்தனர். அதன்படி, விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையம், அந்த மக்களுடைய இலவச வீட்டு மனையை அளந்து கொடுக்கவேண்டும் எனவும், இவ்வளவு காலம் அலைக் கழித்ததற்கு நஷ்ட ஈடாக தலா 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும் அரசுக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் மே மாதம் முதல் வாரத்தில் ஆர்.டிஓ. சத்யா தலைமையில், அந்த இடம் அளக்கப் பட்டு உரியவர் களுக்குக் கொடுக்கப் பட்டது. இதனை எதிர்த்து ஆதிக்க ஜாதியினர் போராட் டத்தில் இறங்கினர். இவர்களின் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கடந்த ஜூன் 24ஆம் தேதி இரவில் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு, இரவோடிரவாக அளவைக்கற்களைப் பிடுங்கி எறிந்துவிட்டனர். இதுகுறித்து பட்டியலின மக்கள் ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், அதில் ஈடுபட்ட மூவரை காவல்துறை கைதுசெய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிக்க ஜாதியினர், ஆர்.கே.பேட்டை -பள்ளிப்பட்டு சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு போராட்டத்தில் இறங்கினர். இவர்களைத் தடுக்கவந்த போலீஸ் மற்றும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைச் சிறைப் பிடித்துத் தாக்கியுள்ளனர்.
இதில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கைது செய்வதற்காக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வன்முறையாளர்களைக் கைது செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கண்டித்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ., தாசில்தார், ஆர்.ஐ. உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக போராட் டத்தில் இறங்கினர். எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கொடுப்பது முடிந்தபாடில்லை. விவகாரம் குறித்து வீட்டுக்காகப் போராடும் மக்களிடம் விசாரித்தபோது, "அந்த குறிப்பிட்ட இடத்துக்குப் பதிலாக மாற்று இடத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். நாங்கள் இப் பிரச்சனைக்காக கடந்த இரு தேர்தல்களையே புறக்கணித் திருக்கிறோம். அப்படியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களுக்கு அனுப்பிவிட்டோம். எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் பயந்தே வாழவேண்டியுள்ளது'' என்றார்கள்.
இதுகுறித்து தலித் மக்கள் முன்னணி தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், "சுதந்திரம் பெற்று 75 ஆண்டு காலம் கடந்தபின்னும், சுதந்திர இந்தியாவில் குடியிருக்க ஒரு வீட்டுக்காக மனு போட்டு வீட்டுமனைப் பட்டா கேட்கும் அவல நிலைதான் பட்டியலினத்தவர்களுக்கு இருக்கிறது. இன்னமும் சாதீய மனோபாவத்தால் குடியிருக்க வீட்டினைக் கட்டவிடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை இருக்கும் ஊரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி பேசிய அன்புமணி, இப்பிரச்சனை குறித்தும் ஒரு வார்த்தை பேசியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் அவர் இதுகுறித்து பேசவில்லையே. இப் பிரச்சனையில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பிஜான் வர்கீஸிடம் கேட்டபோது, "இது நீண்ட நெடுங்கால மாக இருந்துவருகிற பிரச்சனை. இதில் பிரச்சனை செய்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதேபோல், அம்மக்களுக் கான இடத்தை கூடியவிரைவில் வழங்கி, வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்'' என்று நம்பிக்கை தெரி வித்தார்.
கிராமப்புறங்களில் சமூக நீதியும். ஜனநாயகமும் மலர்வதற்கு இன்னமும் சிக்கல் நீடிப்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. விரைவில் உரியவர் களுக்கான நீதி கிடைக்கட்டும்.