வெற்றிக் கனியைப் பறித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் 10 பேர், இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். இப்பட்டியலில் ஜெயக்குமார், பெஞ்சமின், எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், சரோஜா, வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, ராஜேந்திரபாலாஜி, மாபா பாண்டியராஜன், ராஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

ll

மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார், ஐந்து தடவை தன்னை எம்.எல்.ஏ.வாக்கி சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த ராயபுரம் தொகுதியில், 30,061 வாக்குகளே பெற்று 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். இதற்கு முந்தைய தேர்தல்களில் எதிரணியில் போட்டியிட்ட ‘காமாசோமா’ வேட்பாளர்களைப் போல் இல்லாமல், வலுவான வேட்பாளரான ‘ஐட்ரீம்’ மூர்த்தியை திமுக நிறுத்தியது, அவரது தோல்விக்கான காரணமாகிவிட்டது. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகின்பாக்கில் போராடியதுபோல், சென்னை ராயபுரத்தில்தான் இஸ்லாமியர்கள் திரண்டனர். இத்தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினர் மூர்த்தியை வலுவாக ஆதரித்தனர். அமைச்சருக்கு நெருக்கமான ஜெகன் என்பவர் சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்ட 8 படகுகளை காசிமேட்டில் ஓட்ட, மீனவர்கள் போராட்டம் வெடித்து, போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த விவகாரத்தில், அப்போது ஜெயக்குமார் தலை உருண்டது. தேர்தல் களத்திலும் அது அவரை உருட்டிவிட்டது.

கடலூர் தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன், 2011-ல் தனக்கு சீட் தரவில்லையென்ற கோபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி, ஆதரவாளர்களுடன் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தார். கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராகவும் ஆனார். ஜெயலலிதா இறந்த பிறகு, ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். கடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஐயப்பன் செல்வாக்கு பெற்றவராக இருப்பது, அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு உறுத்தலாக இருக்க, தி.மு.க. பக்கம் தாவ ஐயப்பன் முடிவெடுத்தார். அதற்கு இரண்டுநாள் முன்னதாக, அய்யப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மீண்டும் தி.மு.க.வில் இணைந்து, கடலூர் தொகுதியில் போட்டியிட்ட இவரிடம்தான், 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சி.சம்பத் தோல்வியடைந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் -ஜோலார் பேட்டையில் மூன்றாவது முறை போட்டியிட்ட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியும், எதிர்த்துப் போட்டியிட்ட திருப்பத்தூர் தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜும் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளில், எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருந்தும், ஓட்டுக்கு ரூ.2000 தந்தும், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்திருக்கிறார் வீரமணி. தன்னைச் சந்திக்கவரும் பொதுமக்களிடம் மிரட்டும் தொனியிலேயே அமைச்சர் பேசுவது வழக்கம். இவரது போக்கு பிடிக்காத வன்னியர் சாதி தலைக்கட்டு பெரியவர்கள், தி.மு.க. வேட்பாளர் தேவராஜுக்கு ஆதரவளிப்பது என முடிவெடுத்து, கிராமங்களில் பிரச்சாரம் செய்தனர். 906 வாக்குகள் வித்தியாசத்திலேயே, தேவராஜுவிடம் தோற்றுப் போனார் அமைச்சர் கே.சி.வீரமணி.

முதலில் பா.ஜ.க., பிறகு தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க. என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், சுயநலத்தோடு அரசியலில் பயணித்து வருவதால், சர்ச்சைகளில் அடிபடுவது வழக்கம். கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு எனச் சொல்லி, தனது பா.ஜ.க. விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது டெல்லி சென்று, தமிழ் நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்க கையெழுத் திட்டார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு போன்ற தமிழக மக்கள் நலனுக்கு எதிரான பா.ஜ.க. கொள்கையில் பிடிப்புடன் இருப்பதால், நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் இவருக்கு எதிராக, ஆவடி தொகுதியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். அவர்களை பாண்டியராஜனின் ஆட்கள் தாக்கியதும் நடந்தது. அதனால், ஆவடி தொகுதியில் கடுமையாக எதிர்ப்பு வெளிப்பட, தி.மு.க. வேட்பாளர் நாசரிடம் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் மாபா பாண்டியராஜன் தோற்க நேரிட்டது.

ராஜபாளையம் தொகுதியில் ‘நற்பெயர்’ எடுத்திருந்த தங்கபாண்டியன், அத்தனை சமுதாயத் தினரிடமும் ராஜேந்திரபாலாஜி காட்டிய தாராளம் கண்டு மிரண்டுபோனார். ராஜேந்திர பாலாஜியைத் தோற்கடித்தே ஆகவேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் தந்ததும் சுறுசுறுப்பானார். பல தொகுதிகளிலும், தி.மு.க. வேட்பாளர்களின் ‘வாக்காளர் கவனிப்பு’ ரூ.300 ஆக இருக்க, ராஜபாளையத்திலோ ராஜேந்திர பாலாஜிக்கு சரிசமமாக ரூ.500 ஆகத் தந்தனர். அ.தி. மு.க. தரப்போ, "மேலும் தருகிறோம்'’என வாக்காளர்களிடம் டோக்கன் வினியோகித்தது. "அது டுபாக் கூர் டோக்கன்; எதுவும் தரமாட்டார்கள்'’என்ற தகவலை மக்களிடம் சேர்க்கும்விதமாக, அதே டோக்கன் எங்கோ அச்சடிக்கப்பட்டு, மர்ம நபர்களால் வீதிகளில் விசிறியடிக்கப்பட்டது.

"கடுமையாக உழைக்கும் மக்கள் குறைந்த சம்பளத்தில் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். அரசுப் பணி ஒன்றும் அத்தனை சிரமமானது இல்லை. ஊதியமோ அதிகம் வாங்குகிறார்கள்'’ என்று எப்போதோ அரசு ஊழியர்கள் போராட் டம் நடத்தியபோது ராஜேந்திரபாலாஜி விமர்சித்த வீடியோ பரப்பிவிடப்பட்டது. அந்த வாக்குகளும், சிறுபான்மையினர் வாக்குகளும் மொத்தமாக கைவிரித்துவிட, 3,658 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் தங்கபாண்டியனால் தோற் கடிக்கப்பட்டார், தொகுதி மாறி போட்டியிட்டு வாயால் கெட்ட’ராஜேந்திரபாலாஜி.

ஒவ்வொரு அமைச்சரின் தோல்விக்குப் பின்னாலும் ஏதோ ஒரு விவகாரம்’ இருக்கிறது!

-ராம்கி, தாமோதரன் பிரகாஷ், ராஜா

படங்கள் : ஸ்டாலின்