பழைய ஓய்வூதிய (பென்சன்) திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், இவர்களின் போராட்டங்களும் வீரியமடைந்துள்ளன.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலவரை யறையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் திட்ட மிட்டபடி நடக்குமா? அல்லது தவிர்க்கப்படுமா? என்கிற குழப்பமும் எழுந்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பென்சன் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. நடைமுறையில் இருந்துவரும் இந்த பென்சன் திட்டத்திற்கு மாறாக, கடந்த 2003-ல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சி.பி.எஸ்.) ஒன்றை கொண்டுவந்தது ஒன்றிய அரசு. அரசு ஊழியர் களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அரசு பிடித்தம் செய்து கொள்ளும்; அதே அளவிலான சதவீதத் தொகையை அரசாங்க மும் செலுத்தும். இந்த இரண்டு தொகைகளையும் டெல்லியிலுள்ள ஓய்வூதிய நிதியத்தில் செலுத்தவேண்டும். அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது, நிதியத்தில் சேர்ந்துள்ள வட்டித் தொகையிலிருந்து பென்சன் கொடுக்கப்படும்.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் சேர்ந்துகொள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது அன்றைக்கு மத்தியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ஆதரித்து முதலில் கையெழுத்திட்டவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதன்பிறகு, ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2003லிலிருந்து தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்ந்த அனைவரும் இந்த திட்டத்தில் இணைக்கப் பட்டனர். ஆனால், இந்த பங்களிப்புப் பென்சன் திட்டத்தில் நிறைய குறைபாடுகள், முரண்பாடுகள், அரசு ஊழியர்களை வஞ்சித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, பழைய பென்சன் திட்டத்தையே தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்; பங்களிப்புப் பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சுமார் 20 ஆண்டுகாலமாகப் போராடி வருகின்றன அரசு ஊழியர் சங்கங்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/jacto-jio1-2026-01-05-18-13-20.jpg)
இந்த சூழலில்தான், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று புதியதாக ஒரு பென்சன் திட்டத்தை அறிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ”உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. நம்பி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் உண்மையாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம். அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசு இது. தமிழகத்தின் நிதி நிலை சீரடைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்''’என்று தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் அறிவித்துள்ள இந்த பென்சன் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, தமிழக அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு வழங்குவதற்கு, பணியாளர்களின் 10% பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதங்க ளுக்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக, அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும். அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வுபெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல் படுத்தப்படுவதற்கு முன்னரே ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் இந்த புதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பெரிதும் வரவேற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித் திருக்கிறார்கள் இந்த அமைப்பின் நிர்வாகிகள். அவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின். மேலும், அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக் கையை நிறைவேற்றியதற் காக, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வும் இந்த கூட்டமைப்பு திட்டமிட்டு வருகிறது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், "தமிழகத்தி லுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திவந்த சமரச மற்ற போராட்டத்தைப் புரிந்துகொண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர். அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்கிறோம். 6-ந்தேதி திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை (ஸ்ட்ரைக்) வாபஸ் பெறு கிறோம்''’என்று கூறுகிறார். ஆனால், பங்களிப்பு ஓய்வூதியம் ஒழிப்பு (சி.பி.எஸ். ஒழிப்பு) இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தி.மு.க. அரசின் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன.
(வரும் இதழில் விரிவாக...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/jacto-jio-2026-01-05-18-13-08.jpg)