15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியத்திற்காக வறுமையிலும் முதுமையிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்ட காவல் துறையில் 40 வருடங்களாக தூய்மை பணியாளராக இருந்து வந்த பலராமன்(62), கடந்த 31.01.2019 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தினக்கூலியாக பணியில் சேர்ந்த இவர் தொகுப்பூதிய அடிப்படையிலும், பின்னர் சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையிலும் பணியாற்றி வந்தவர். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவந்த இவருக்கு 2017-ஆம் ஆண்டு நிதித்துறையில் இயற்றப்பட்ட 348 பிரிவின்படி சிறப்பு காலமுறை ஊதியத்திற்காக விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து இருப்பதால் முதியோர்களுக்கான ஓய்வூதியமும் இவருக்கு கிடைக்கவில்லை. மனைவி சண்டை போட்டு பிரிந்து சென்று விட்டதால், தற்போது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். சர்க்கரை நோயாளியான இவர் மருந்து செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் தற்கொ லைக்கு செல் லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பலராமன் பட்டினியால் இறந்துவிடக் கூடாது என்று உதவும் கரங்களைச் சேர்ந்த ஓய்வூதியர் கள் கடந்த 20.05.2020 அன்று கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்தவும் முயன்றனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. அதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில அளவில் போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதுகுறித்து கு.பாலசுப்ரமணியன் நம்மிடம் பேசியபோது, ""பலராமனைப் போல காவல்துறை, வனத்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளில் 4-ஆவது பிரிவு ஊழியர்கள் என சொல்லக்கூடிய கடை நிலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்களாக பணி யாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறப்பு ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்து தங்கள் காலத்தை கவலையுடன் கழிக்கின்றனர். மாநில நிதித்துறையோ "ஓய்வூதிய திட்டம் ரத்து' என்று புரிதலற்ற காரணத்தை சொல்கிறது. ஆனால், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள் சிறப்பு ஓய்வூதியம் பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட 2017ஆம் ஆண்டு 348 பிரிவின்படி சிறப்பு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள். சிறப்பு ஓய்வூதியம் வழங்காவிட்டால், மாநில அளவில் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்'' என்கிறார் உறுதியான குரலில்.
""பலராமன் போன்ற முதியோர்களுக்கு காலாகாலத்தில் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய நிதி கிடைக்காமல் போனால் அவர்களை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறது. நோயிலிருந்து மீள மருத்துவம் கூட பார்க்க இயலாமல் உயிரிழப்பு நேர்ந்தால் அது கொலைக்கு சமமாகிவிடும்'' என்று எச்சரிக்கிறார் உதவும் கரங்கள் தலைவர் கடலூர் சுந்தரமூர்த்தி.
-சுந்தரபாண்டியன்