தமிழகத்தில் காட்டன், ஒருநம்பர் லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி என விதவிதமான பெயர்களில் லாட்டரி விற்பனை நடக்கின்றது. "இரவு 10 ரூபாய் கட்டினால் விடியற்காலையில் 70 ரூபாய் வாங்கிக்கொண்டு போகலாம்' என ஆசையைத் தூண்டி லாட்டரிக்கு பணம் கட்ட வைக்கிறார்கள்.
திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நம்பர் லாட்டரியும், காட்டனும் கூலித்தொழிலாளர்களிடம் ஆசையைத் தூண்டி பணத்தைப் பறிக்கின்றன. பெட்டிக்கடைகளில்கூட நம்பர் லாட்டரி புக்கிங் நடக்கிறது.
தினமும் காட்டன் லாட்டரி வாங்கும் வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம், ""காட்டன் சூதாட்டம் என்பது பெயர்தானே தவிர, அதுவும் நம்பர் லாட்டரி தான். இன்று நான் 46 என்கிற எண்ணை செலக்ட் செய்து முதலில் 40 ரூபாய் கட்டியுள்ளேன். கூடுதலாக இன்னும் சில எண்களுக்கு பணம் கட்டியுள்ளேன்'' என துண்டுச்சீட்டைக் காட்டினார். அதில் 96, 69, 64, 14, 41, 19, 15 என நம்பர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
""நம்பர்களை எப்படி தேர்வு செய்றீங்க?'' என கேட்டபோது, ""போனமாதம் முழுவதும் எந்தந்த நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் நம்பரை தேர்வு செய்வோம், அதற்கு கடந்தமாத ரிசல்ட் கார்டைத் தருவார்கள். ரெகுலர் கஸ்டமர் என்பதால் என்னிடமே உள்ளது. இதேமாதிரி கேரளா நம்பர் லாட்டரியும் இருக்கு. அது 3 நம்பர். 3 நம்பர்கள் சரியா வந்தா 5 லட்சம்வரை கிடைக்கும். முதல்எண் அல்லது கடைசி இரண்டு எண்கள் சரியா இருந்தால் ஓரளவு தொகை கிடைக்கும். கேரளா நம்பர் லாட்டரி 50 ரூபாய், 100 ரூபாய் வரை டிக்கட் ரேட். அவுங்க வாரத்துக்கு ஒருமுறை குலுக்கல்ல நம்பரை தேர்வு செய்வாங்க. இரண்டு நம்பர் லாட்டரிக்கு தினமும் குலுக்கல் நடத்துவாங்க. தினமும் இரவு 11 மணிவரை புக்கிங் நடைபெறும். மறுநாள் காலை 7 மணி முதல் ரிசல்ட் வர ஆரம்பித்துவிடும். எந்த ஏஜென்ட்டிடம் பணம் கட்டினோமோ அங்குதான் போய் பார்க்க வேண்டும். ஒரு எண்ணுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் வாங்குபவர்கள், கட்டியதை விட 7 மடங்கு பணத்தை திருப்பித் தருவார்கள்'' என்றார்.
"இந்த நம்பர் லாட்டரியை நடத்துவது யார்?' என கேட்டபோது, சிலர் ஆந்திரா -நகரி -புத்தூர் என்றார்கள். சிலர் சென்னை -சிம்சன் பகுதி என்றார்கள். இந்த தொழிலைப் பற்றி நன்கறிந்த விவரமான சிலர், ""நம்பர் லாட்டரியிலும் பல குரூப்கள் உள்ளன. ஒவ்வொரு குரூப்பும் மயில், குயில், பருந்து என பெயர் வைத்துக்கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு ஹெட் உண்டு. இந்த ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொறுப்பாளரை போட்டு வைத்துள்ளது. அந்தப் பொறுப்பாளர் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு ஆளைப்போட்டு வைத்துள்ளனர். அந்த ஏரியா பொறுப்பாளர் தனக்குக்கீழ் 10, 15 பேரை வைத்துள்ளார். அவர்கள்தான் புக்கிங் ஏஜென்ட். இந்த புக்கிங் ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்கள் சொல்லும் நம்பரை குறித்துக்கொண்டு பணத்தை வாங்குவார்கள். தினமும் அப்படி கலெக்ட்டாகும் தொகையில் ஆயிரத்துக்கு 300 ரூபாய் கமிஷன் எடுத்துக்கொண்டு மீதியை ஏரியா பொறுப்பாளரிடம் தந்துவிடுவார் புக்கிங் ஏஜென்ட். ஏரியா பொறுப்பாளர் தன்னிடம் வந்த 700 ரூபாயில் தன் கமிஷன் 50 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதி 650 ரூபாயை மாவட்ட பொறுப்பாளரிடம் தந்துவிடுவார். இந்த மாவட்ட பொறுப்பாளர்தான் ஒவ்வொரு ஏரியா இன்ஸ்பெக்டருக்கு இவ்வளவு, டி.எஸ்.பிக்கு இவ்வளவு, எஸ்.பி. அலுவலகத்துக்கு இவ்வளவு என மாத மாமூலை சரியாக அனுப்பி வைப்பார்கள்'' என்றனர்.
இந்தத் தொழிலின் கோல்மால்களை அறிந்து வைத்திருக்கும் ஒருவர் நம்மிடம், ""இந்தத் தொழிலில் ஒருகாலத்தில் தலையாக சிலர் இருந்தனர். இப்போது, மாவட்ட ஏஜென்ட்கள் இருக்கிறார்களே தவிர அவர்களுக்குமேல் தலையென யாரும் கிடையாது. இருப்பதுபோல் காட்டுகிறார்கள். வேலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாவில் ஆளுக்கொரு ஏரியா ஏஜென்ட், ஏரியா ஏஜென்ட்டுக்கு கீழ் புக்கிங் ஏஜென்ட்கள் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் ஒவ்வொரு நாளும் லட்சங்களில் வருவாய் வருகிறது. உதாரணத்துக்கு இந்த பட்டியலை பாருங்கள். இது ராணிப்பேட்டை பட்டியல். ஒருநாள் புக்கிங் வருவாய் 7,81,584 ரூபாய் என உள்ளதா? இதில் புக்கிங் ஏஜென்ட் கமிஷன் ரூபாய் 2,34,489.20 போக மீதி 5,47,094.30 ரூபாயை கட்டியுள்ளார்கள். இதில் ஏரியா ஏஜென்ட் கமிஷன்போக மீதி பணத்தை வாங்கிக்கொள்வார் மாவட்ட அளவில் உள்ள ஏஜென்ட். பட்டியல் கைக்கு வந்ததும் புக்கிங் நம்பரில் மிகக்குறைவான தொகை, குறைவான நபர்கள் பணம் கட்டிய எண் எதுவென பார்த்து அந்த எண்ணை டிக்ளர் செய்து, சென்னையில் உள்ள நபருக்கு தெரியப்படுத்தி ரிசல்ட் பேப்பரை டிசைன் செய்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் வெளியிடுகிறார்கள்'' எனக்கூறி மலைக்கவைத்தார்.
காட்டன் சூதாட்ட தொழிலில் நேரடியாக, மறைமுகமாக ஆளும்கட்சியான அ.தி.மு.க., தி.மு.க. உட்பட சில முக்கிய கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
பீடித்தொழிலாளர்கள் நிரம்பியுள்ள குடியாத்தம் நகரத்தில் லாட்டரி என்கிற பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டுள்ள தி.மு.க. பிரமுகர் இந்தத் தொழிலை நடத்துகிறார். அவரது ஆட்களே ஆம்பூர், பேரணாம்பட்டில் நடத்துகிறார்கள். வாணியம்பாடியில் கட்சி சாராதவர்கள் நடத்துகிறார்கள். ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், திருவள்ளூர், திருத்தணி, ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர், திருப்பதி பகுதியின் லாட்டரி தொழிலின் டானாக இருப்பது நகரி பேருந்துநிலையம் அருகே அலுவலகம் வைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-து.ராஜா