"இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாட்டின் போர்க்கப்பலில் இந்தியாவிற்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்று விரும்பினேன் ஆனால் இப்படியே இறக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. என் ஆசை, விருப்பம் அது'' என்று சொல்லிவிட்டு இறந்து போகிறார் செண்பகராமன். இறந்து போனவருடைய அஸ்தியை, அவருடைய மனைவி லட்சுமிபாய், கையிலே வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு தப்பி வருகிறார். செண்பகராமன் விரும்பியது நடக்க 32 ஆண்டுகள் காத்திருந்தார். நாடு விடுதலை அடைந்தது.
ஒருவருடைய சோகத்தை, வேதனையை வேறு யாராவது உடனே புரிந்து கொள்கிறார்களா? கணவனுடைய வீரத்தை, தியாகத்தை, ஒவ்வொரு வரிடமும் சென்று சொன்னாள், யாருமே கேட்கவில்லை. தெரிந்தவர்களும் கேட்கவில்லை, தெரியாதவர்களும் கேட்கவில்லை. ஆனாலும் அந்த பெண்மணி அந்த கலசத்தோடு காத்துக் கொண்டி ருந்தார். இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக ஆனவுடன் அவருக்கு எப்படியோ அந்த செய்தி வந்து, அதன்மூலமாக அந்த அம்மையார் அவருடைய தியாகத்தை பாராட்டுகின்ற அளவிற்கு ஐ.என்.எஸ். டெல்லி என்கிற கப்பலில், மும்பையி லிருந்து குமரி முனைக்கு... திருவனந்தபுரத்திற்கு அவருடைய அந்த அஸ்தியை அனுப்பி கரமனை ஆற்றிலே கரைக்கும் கடமையை அவர் செய்தார்.
மிகப்பெரிய தியாகிக்கு நீண்ட நெடுங்காலம் கழித்து அங்கீகாரம் கிடைத்தது. இப்போது நான் என் தம்பியை கேட்கிறேன். செண்பகராமனை இவராவது அறிவாரா? அவன் தமிழன், நேதாஜிக்கு முன்னோடி. ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முன்னதாகவே வைத்தவன். அவனுடைய அந்த வீரதீரச் செயல்... எம்டன் கப்பலில் வந்து ஆற்றிய அந்த மிகப்பெரிய செயல்... ஹிட்லரையே மிரட்டி யது, ஹிட்லரிடமே மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிய ஒருவனுடைய பெயர், இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே இல்லை.
அதைத்தான் சொல்கிறேன், வரலாறு மாற்றி எழுதப்பட்டது, மறைத்து எழுதப்பட்டது. மறந்து போகவில்லை, மறைத்து எழுதப்பட்டது. அதை மாற்றி எழுத வேண்டும். இதையெல்லாம் நான் திருத்தி எழுதுங்கள் என்று சொல்லவில்லை. இனியாவது எல்லாவற்றிற்கும் ஒரு சாயத்தை பூசுவது, எல்லாவற்றிற்கும் ஒருவர் உரிமை கொண்டாடுவது என்பதாக இல்லாமல், எனக்கே எல்லாம் என்று சொல்வதற்கு மாறாக, இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணுங்கள். எல்லோரையும் ஒன்றாகக் கருதுங்கள்!
நீங்கள் பேசுகிற தேசியம் உண்மை என்றால், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒன்றென நடத்துங்கள். எல்லோரையும் ஒன்றாக நடத்துங்கள். எல்லா மொழிகளையும் ஒன்றாக நடத்துங்கள். எல்லா இனத்தாருடைய தியாகத்தையும் போற்றுங்கள். நாங்கள் மாநில கட்சி. திராவிடம் பேசுகிறோம் என்று விமர்சிக்கிறீர்களே, ஆம் திராவிடம் தான் பேசுகிறோம். அதுதான் எங்கள் தத்துவம். ஆனால் முதன்முதலாக வ.உ.சி. இழுத்த செக்கு எங்கு இருக்கிறது என்று தேடி, அது கோவை சிறையில் இருக்கிறதென்று கண்டுபிடித்து, அதை சென்னையிலே நினைவுச் சின்னமாக மாற்றியது எங்கள் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான். மருதுபாண்டியருக்கு மணிமண்டபம் அமைத்தது யார்? சிலை வைத்தது யார்?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/22/siva1-2025-12-22-16-36-13.jpg)
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின், மதுரையிலே 150 கோடி ரூபாய் செலவிலே வேலுநாச்சியாருடைய பெயரால் ஒரு மேம்பாலம் அமைத்திருக்கிறார். சொல்லிக்கொண்டே போகலாம். தீரன் சின்னமலை உங்களுக்கு தெரியாது. உங்கள் பகுதியை சார்ந்த மாபெரும் வீரன். தீரன் சின்னமலை கைதாகி சிறையிலே இருந்தான். அவனை தமிழ்நாட்டில் மட்டும்தான் கொண்டாடுகிறோம். என் ஆதங்கம் அதுதான். என் அக்கறையும் கவலையும் அதுதான். தீரன் சின்னமலையை நீங்கள் அறிவீர்கள், நான் அறிவேன், தமிழ்நாடு அறியும். டெல்லி அறியுமா? பாட்னா அறியுமா? அலகாபாத் அறியுமா? அறிய வேண்டும்.
அந்த தீரன் சின்னமலை சிறையில இருந்தபோது அவனுக்கு செருப்பு தைத்துக் கொடுத்தது பொல்லான் என்பவன். எப்படி தப்பிக்க வேண்டும் என்பதற்கான யோசனையை செருப்புக்குள்ளே வைத்து அவருக்கு அனுப்பி, அதன் மூலமாக தீரன் சின்னமலை தப்பிக்க முயற்சி எடுத்தார். (இதைச் சொன்னபோது இடைமறித்து மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியபோது சலசலப்பு ஏற்பட்டது.)
பிறகு சிவா பேசியபோது... "போரில் பல தந்திரங்கள் உண்டு. செய்திகள் அனுப்புவதில் பல முறைகள் உண்டு. புறாவின் மூல மாக அனுப்புவார்கள், தூதுவனின் மூலமாக அனுப்புவார்கள், உணவுக்குள் ஏதாவது வைத்து அனுப்புவார்கள், அந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும். எங்க ளுக்குத் தெரியும், பைக்குள்ளே எப்படி ஒரு மருத்துவர் சீட்டோடு கொண்டு போய் கொடுத்து வருவார் என்று தெரியும்.
நானும் ஒரு வருட காலம் சிறையில் இருந்தவன் தான். அது மாதிரி ஒரு தந்திரமாக, எல்லாம் தடை செய்யப்பட்ட காலத்தில் தீரன் சின்னமலைக்கு ரகசியக் குறிப்புகளை அனுப்புவதற்கு வழியில்லாமல் செருப்புக்குள்ளே வைத்து அனுப்பிய ஒரு கமாண்டோ தான் மிஸ்டர் பொல்லான். நான் குறைத்துச் சொல்லவே இல்லை. கமாண்டோ பட் பிரைன் அண்ட் டெக்னாலஜி தீரன் சின்னமலை. அவர் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு செய்தி அனுப்புகிறார். எப்படி அனுப்பினால் போய்ச்சேரும் என்கிறபோது, செருப்புக்குள்ள வைத்து அனுப்புகிறார். அவ்வளவு தான். ஏன் நீங்க அதைப்போய் தப்பா எடுத்துக்கறீங்க?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/22/siva2-2025-12-22-16-36-27.jpg)
நான் சொல்வதை எடுத்துக்கிற கோணத்துல தான் இருக்கு. நான் தவறாகப் பேசவில்லை. இவ்வளவு சொன்னேன், எதுவுமே தப்பா பேசல. தம்பி முருகன், நீங்க வெரிஃபை பண்ணிக்கலாம். நான் வரலாற்றை அப்படியே சொல்றேன். மை டியர் பிரதர்ஸ், செண்பகராமன் பற்றி இவ்வளவு வரலாறு சொன்னேன் அல்லவா? அடுத்து நீங்கள் புதிதாக கடலிலே கப்பலை மிதக்க விடும் போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். செண்பகராமன் என்று பெயர் வையுங்கள். நாங்களும் சேர்ந்து பாராட்டுவோம்.
விடுதலைக்காக அங்கு இருக்கிறவர்களை சேர்த்துக் கொண்டு எவ்வளவோ பாடுபட்டு செத்துப்போனான். கடைசியில் போர்க்கப்பலில் வர வேண்டும் என்று விரும்பி செத்த அவனை, 32 வருஷங்களாக அந்த சாம்பலை வைத்துக்கொண்டு காத்திருந்த அந்த பெண்மணி... அவளுடைய தியாகம்... அந்த பொறுமை... இதையெல்லாம் நீங்கள் உண்மையிலேயே பாராட்டுவதென்றால் வெறுமனே பெயராக சொல்லாதீர்கள், நடைமுறையிலே காட்டுங்கள். அடுத்த போர்க்கப்பலுக்கு அவருடைய பெயரை வைத்தால், மாண்புமிகு அமைச்சர் முருகன் அவர்களே, உங்களுக்கு நானும் நன்றி சொல்லுவேன்.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் உங்கள் ஒருவருக்கே உரிமை என்று இல்லை. எங்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. இது யாருக்கும் குறைவில்லாதது. ஆனால் வரலாற்றில் பெருமளவிற்கு அது மறைக்கப்பட்டது. மறக்கப்பட்டது. நான் சொல்கிறேன், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தயவுசெய்து நான் குறிப்பிட்ட இவர்களை எல்லாம் கொண்டு வாருங்கள். வளர்கின்ற தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள். எத்தனை பேர் இந்த நாட்டின் எத்தனை மூலைகளிலே பகத்சிங், உத்தம்சிங்கை பற்றிச் சொல்கிறோம், பெருமையடைகிறோம். எத்தனையோ பேர் எவ்வளவோ செய்தார்களே, அந்த வரிசையில் இப்படியும் சிலபேர் வரலாற்றிலே மறந்து போயிருக்கிறார்கள் அல்லது மறைக்கப்பட்டிருக்கிறார். "அன்சங் ஹீரோஸ் அண்ட் அன்சங் ஹீரோயின்ஸ்'ஐ வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது உங்களுடைய கடமை. எங்களுடைய கடமை.
இது கட்சி வேறுபாடு அல்ல, இது இந்த நாட்டி னுடைய உணர்வு. உண்மையில் நீங்கள் இந்த வந்தே மாதரம் என்கிற பாடலின் 150ஆவது ஆண்டு நாளை கொண் டாடுவதில், அந்த உணர்வோடு நாங்களும் பங்கெடுக்கிற காரணத்தினால்தான் நாங்களும் இதிலே கலந்துகொண்டு பேசுகிறோம். .. உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறோம். அதிலே வைக்கிற வேண்டுகோள், தெற்கே தமிழகத்தில், கர்நாடகத்தில், கேரளாவில் எல்லா பகுதியிலும் வாழ்ந்த தியாகிகளுக்கும் மரியாதை தாருங்கள்; அவர்களுக்கும் அங்கீகாரம் தாருங்கள். வரலாற்றை சரியாக எழுதுவோம், பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தருவோம்!
தொகுப்பு: தாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/siva-2025-12-22-16-36-01.jpg)