ல்குவாரியில் "கட்சி நிதி' என்ற வகையில் கப்பம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டது அரசியல் வெப்பத்தை அதிகரித்துவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலிருக்கும் செட்டிக்குளம்-வேலன்புதுக்குளம் சாலையில் தனியார் கல்குவாரி ஒன்று பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. 14 பங்காளிகளைக் கொண்ட இந்த கல்குவாரியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்தப் பகுதியின் முக்கிய புள்ளி ஒருவர் மேஜர் பார்ட்னர். அரசியல் செல்வாக்கினால் விதிகளுக்கு முரணாக அதிக அளவு கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக இந்த குவாரிமீதும் புகார்களுண்டு.

tuty

Advertisment

இந்நிலையில், சாத்தான்குளம் பகுதி ஆனந்தவிளையைச் சேர்ந்த சித்த மருத்துவரும் பா.ஜ.க.வின் மாநில இளைஞரணியைச் சேர்ந்தவரு மான பூபதி பாண்டியன், திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயஆனந்த் இருவரும் இரண்டு கார்களில் மார்ச் 18 அன்று கல்குவாரிக்கு வந்திருக்கிறார்கள். கல்குவாரி அலுவலகத்தில், "முதலாளி எங்கே?'' என்று அதிகார தொனியில் விசாரித்திருக்கிறார்கள். "அவர் வெளியே சென்றிருக்கிறார்'' என்று கல்குவாரி மேலாளர் நவீன் குமார் சொல்ல, அவரிடம், "கட்சி நிதி, மாதாமாதம் நன்கொடை வேண்டும்'' என்று ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டவர்கள், "தரலைன்னா கல்குவாரி ஓடாது!'' என்றும், "திருச்செந்தூர் பகுதியிலும் தருகிறார்கள்'' என்றும் தாட்டியமாகவே கேட்டிருக் கிறார்கள். தொகையை மேலாளர் தர மறுக்கவே, ஆத்திரமான இருவரும் நவீன்குமாரை திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.

இதனால் மிரண்டுபோன நவீன்குமார், விஷயத்தை நிர்வாகத்திடம் கொண்டு போக, அது, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிவரை சென்றது. அப்புறமென்ன, அதிரடி ஆக்சன்தான். பா.ஜ.க. இளைஞ ரணி பிரமுகர்கள்மீது, குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து, நன்கொடை கேட்டு அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, மேலாளர் நவீன்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முக்கிய புள்ளியும் எப்.ஐ.ஆர். போட வேண்டுமென அழுத்தம் கொடுக்க, காவல் நிலைய ஏட்டு ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்திருக்கிறார்.

Advertisment

பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் இருவர் மீதும் வழக்கானதும், பா.ஜ.க. வட்டாரம் பரபரத்திருக்கிறது. அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சிலர் அரக்க பரக்க காவல்நிலையம் வந்து, எப்.ஐ.ஆர். போடவேண்டாம் என்றும், புகாரை வாபஸ் வாங்கும்படியும் நீண்ட பஞ்சாயத்து நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும் குவாரி நிர்வாகம், பா.ஜ.க.வினரின் மீது கேஸ் போட்டே ஆக வேண்டும் என்று ஸ்டெடியாக நின்றுவிட்டதாம். இதற்கிடையே புகாரின்படி இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் சப் இன்ஸ்பெக் டர் சுரேஷ்குமார் இருவரும் விசாரணை நடத்தி, பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செய லாளர் பூபதி பாண்டியன், பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஜெய ஆனந்த் இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

பஞ்சாயத்திற்குப் பின்பு, காரை கல்குவாரியின் முன்பாக மறித்து நின்றுகொண்டு நன்கொடை கேட்டு மிரட்டினார்கள் என்று திருத்தப் பட்ட புகாரின்படி எப்.ஐ.ஆர். போடப்பட்டு கைது செய்யப் பட்ட இருவரும், பின்னர் ஸ்டேஷன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

tuty

சாத்தான்குளம், நகர பா.ஜ.க.வின் அந்தப் புள்ளியிடம் நாம் பேசியபோது, "சாத்தான் குளம் அடங்கிய ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அக்கட்சியினர் இங்கு அரசியலில் ஆக்டிவா இல்ல. அ.தி. மு.க.வின் மா.செ.வான சண்முகநாத னும் அரசியலில் அடங்கிவிட்டார். ஆளுங்கட்சியான தி.மு.க.வின் அரசியலும் இங்கு அவ்வளவு சிறப்பு என்று சொல்லிவிட முடியாது. இதற்கிடையில் தான் பா.ஜ.க.வினர் இப்படி ஒரு அரசியல் பண்ணிக்கொண்டிருக் கின்றனர். வருகிற எம்.பி. தேர்தலுக்குள் ஒரு பெரிய தொகை சேர்த்துவிட வேண்டும் என்பது இவர்களின் டார்கெட். இந்தப் பகுதியின் முதலூரைச் சேர்ந்தவரான பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, தூத்துக் குடி எம்.பி. சீட்டை குறி வைத்திருக்கிறார். எந்த வகையிலாவது சீட் வாங்கிவிடுவார். அவரின் ஆதரவும் இங்குள்ள பா.ஜ.க.வினருக்கு இருக் கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றவுட னேயே சசிகலா புஷ்பாவும் இங்கு வந்துவிடு வார். இவர்கள், மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையையும் தாண்டியவர்கள். இவர்களின் ஆதரவும் சசிகலா புஷ்பாவிற்கு அவசியமாகிறது. அந்த தைரியத்தில்தான் இது போன்று நடக்கிறது'' என்றார் விரிவாக.

tuty

இதனிடையே சாத்தான்குளம் போலீசில் பா.ஜ.க.வின் ஜெயஆனந்தும் புகார் அளித் துள்ளார். இதுகுறித்து நாம் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்துவிடம் பேசியதில், "இரண்டு கார்களையும் குறுக்காக மறிச்சு நிறுத்தி நன்கொடை கேட்டிருக்கிறார்கள். அவதூறாகவும் பேசியிருக்கிறார்கள். எனவே 341, 50(1) மற்றும் அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்'' என்றார். இதுகுறித்து விளக்க மறியும் வகையில் பூபதி பாண்டியனை அவரது நம்பரில் பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் இன்னமும் பெரிய அளவில் வளர்ச்சியடையுமுன்பே ரவுடியிசமாக நிதி வசூலிப்பது, கொலை மிரட்டல் விடுப்பது என்று ரொம்பவே டெரரான கட்சியாக பா.ஜ.க. முகம் வெளிப்படுவது, இப்பகுதி மக்களிடையே முகம்சுழிக்க வைத்திருக் கிறது!