தமிழ்நாட்டில் மணல் மும்மூர்த்திகளாக வலம் வரும் எஸ்.ராமச்சந்திரன், கரிகாலன், ரத்னம் ஆகியோர் கைகளில் மீண்டும் அரசு உத்தரவு இல்லாத, திருட்டுத்தனமாக அள்ளும் பட்டா மணல் ஒப்பந்தம் இவர்களது குருநாதரான தமிழ்க் கடவுளின் பெயர் கொண்டவர் வழியாக வந்துள்ளது.
கடந்த 12-9-2023 அன்று தமிழ்நாடு முழுவதும் மும்மூர்த்திகளுக்குச் சொந்தமான அனைத்து மணல் குவாரிகளிலும் அவர்களது வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது. அப்போது ஒரு கிலோ தங்கம், 2 கோடி ரொக் கப் பணம் கைப்பற்றப்பட்டது. பிறகு 15-9-2023 அன்று அமலாக்கத்துறை ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் "தமிழ்நாடு முழுவதும் ரெய்டு நடத்தியதில் 34,730 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு. இதில் முக்கிய குற்றவாளி தமிழ்க் கடவுளின் பெயர் கொண்ட மேலிட கணக்கப்பிள்ளை' என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. இந்த மூன்று ஒன்றிய அரசு அமைப்புகளும் இவர்களது மீது வழக்கு பதிந்தன. இந்த மும்மூர்த்திகளின் திருட்டுத் தனத்தால் இவர்கள் மட்டுமல்லாமல், அரசு உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியரும் துறைச் செயலாளர்களும் வழக்கைச் சந்தித்தனர்.
மும்மூர்த்திகளில் ஒருவரான கரிகாலனின் தம்பி கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் திருச்சி மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்த மும்மூர்த்திகளின் தளபதிகள், சிப்பாய்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருக்கு கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் உயிரைக் கொடுத்து வேலைசெய்தனர்.
இதையடுத்து இந்த மும்மூர்த்திகளுக்கு மணல் ஒப்பந்தம் கொடுக்கக்கூடாதென தமிழக அரசு முடிவெடுத்தது. இவர்களால் அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டதன் பெயரில் இவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அந்தக் காலகட்டத்தில் அமைச்சர் துரைமுருகனை இந்த மும்மூர்த்திகளும் அணுக, "ஆற்றுமணல் தொடர்பா என்னிடம் வராதீர்கள். அதனால் தலைமைக்கும் எனக்குமே பிரச்சனையாக இருக்கு. அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட் டேன்'' என முகம் திருப்பிக்கொண்டிருக்கிறார். இதனால் கடந்த ஆறு மாதங்களாக இந்த மும்மூர்த்திகள் தொழிலுக்கு வராமல் இருந்த நிலையில், மீண்டும் தமிழ்க் கடவுளின் பெயர் கொண்டவர் மூலமாக அரசு எந்த அனுமதியும் கொடுக்காமல், திருட்டுத்தனமாக பட்டா இடத்திலிருந்து மணல் அள்ள குவாரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்.
தமிழ்க் கடவுள் பெயர்கொண்டவர் இதில் 4000 கோடி வரை சம்பாதித்துக் கொடுப்பதாக மேலிடத்தில் சத்தியம் செய்துள்ளார். பட்டா மணலுக்கு எந்த அரசு அனுமதியும் கிடையாது. இதனால் அரசிற்கு முறையாக வரும் கிராவல், சவுடு மணலிலிருந்து வரும் வருமானம் கெட்டுப்போகும். அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த மும்மூர்த்திகளோ மாவட்டந்தோறும் இன்சார்ஜ்களை அமர்த்தி அனைத்து பட்டா நிலங்களையும் சர்வே செய்து திருட்டு மணல் அள்ளும் வேலைக்கு ஆயத்தமாய் உள்ளனர்.
மும்மூர்த்திகளின் தலைவரான தமிழ்க் கடவுள் பெயர் கொண்டவர்தான் இதில் முக்கியமானவர். அரசுக்கு முறையாக வரும் வருமானத்தை விரும்பாத தமிழ்க் கடவுள் பெயர் கொண்டவர், கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ஒரு உத்தரவைப் பிறப்பித்து, "இந்த மும்மூர்த்திகள் பட்டா இடத்தில் மணல் திருடுவார்கள். நீங்கள் துறைரீதியாக அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனர்களுக்கு உத்தரவைப் பிறப்பித்துவிடுங்கள்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரும் இந்த உத்தரவை உடனே செயல்படுத்தியுள்ளாராம். இதனால் மும்மூர்த்திகள் மீண்டும் உள்ளே புகுந்து மணலை விழுங்கும் பூதமாக மாறத்தொடங்கியிருக்கிறார்கள்.
இதில் விருப்பமில்லாத அரசு உயரதிகாரிகள் மிகுந்த கோபத்துடன் இருந்துவருகிறார்கள். பல இடங்களில் சிறு சிறு ஒப்பந்தக்காரர்களை அழைத்து 20 கோடி, 30 கோடி என்ற பணத்தை முன்தொகையாகப் பெற்றுக்கொண்டு லாபத்தில் 30% கொடுப்பதாக ஒரு பொய் வாக்குறுதியைக் கொடுத்து வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகவும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை. கணக்கப் பிள்ளையின் விசுவாசம் முதலமைச்சரிடம் இருக்கிறதோ… இல்லையோ… இந்த மும்மூர்த்தி களிடம் நிறையவே உள்ளது.
இந்த மணல் ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக தமிழ்க் கடவுள் பெயர் கொண்ட வர் முன்தொகையாக சில நூறு கோடிகளை மும்மூர்த்திகளிடமிருந்து பெற்றுள்ளார்.. மும்மூர்த்திகளின் மணல் திருட்டினால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுவதோடு, தேர்தலில் மிகவும் பின்னடைவைச் சந்திக்கும். செய்வது மணல் திருட்டாக இருந்தாலும், தமிழ்க் கடவுள் பெயர் கொண்டவரின் ஆசியோடு கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய இடங்களில் பூஜை போட்டு மங்களகரமாக வேலையைத் தொடங்கவுள்ளார்களாம்.
இந்த மணல் மாஃபியாக்களின் தலையீடு களை முதல்வரின் கவனத்துக்கு உயரதிகாரிகள் கொண்டுசென்று, இதற்கு ஆரம்பத்திலேயே தடைபோடவேண்டும். இல்லையெனில் இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக அமைந்து தி.மு.க.வுக்கு இக்கட்டாக அமையும் என முணுமுணுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.