பதஞ்சலி நிறுவன உரிமையாளர் ராம்தேவை, அவர்களது ஆயுர்வேத மருத்துவ விளம்பரத் துக்காகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான அணுகுமுறைக்காகவும், நீதிமன்றத் தை மதிக்காத போக்குக்காகவும் வெளுத்து வாங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இதுவரை நடந்த தவறுகளுக்காக பாபா ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தபோதும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது.
யோகக் கலை பயிற்சியாளராகப் புகழ்பெற்றவர் பாபா ராம்தேவ். காங்கிரஸ் ஆட்சியின்போது, அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர். அதனாலேயே பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமாக ஆனவர்.
அவரது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து விற்பனையிலும், உணவுப்பொருள் தயாரிப்பிலும் கால் பதித்திருந்தது. இந்நிறுவனம் 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபின் மிக வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இந்நிறுவனத்தில் உற்பத்திப் பொருட்களின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோதும் அதன் வளர்ச்சி தொடர்ந்துவந்தது. பதஞ்சலியின் மருந்து உற்பத்திப் பிரிவான திவ்யா பார்மஸி தொடர்ச்சியாக பல புதிய ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தி வந்தது.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் கொரோனா தொடர்பான கொரோனில், ஸ்வாசரி மருந்துகளை அறிமுகப்படுத்திப் பேசிய ராம்தேவ், "ஆங்கில மருத்துவம் முட்டாள்தனமானது. தோல்வி யடைந்த அறிவியல் முறை. கொரோனா பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜனோ, சிகிச்சையோ கிடைக்காமல் இறந்தவர் களைவிட, அலோபதி மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நபர்கள் இறந்துள்ளனர்''’எனக் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதோடு, இந்திய மருத்துவ சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்தது. எதிர்ப்புகள் வலுப்பதையறிந்த ராம்தேவ், அவசர அவ சரமாக, “தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், தான் பேசியது தனது சொந்தக் கருத்து அல்ல எனவும், வாட்ஸ் அப்பில் வந்த கருத்து எனவும், அதை வெறுமனே, தான் படித்து மட்டும் காட்டியதாகவும் சரணாகதி மோடுக்கு மாறி தனது கருத்தைத் திரும்பப் பெற்றார்.
2020 ஜூன் 23-ஆம் தேதி, "இந்த நாடே கொரோனா மருந் துக்காகக் காத்திருக்க, ஆய்வகத்தில் பரிசோதனை முறையில் தயாரித் துச் சோதிக்கப்பட்ட முதல் ஆயுர் வேத மருந்தை கொரோனா சிகிச் சைக்காக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது பதஞ்சலி ஆய்வு மையம் மற் றும் நிம்ஸ் பல்கலைக்கழகத்தின் கூட்டுத் தயாரிப்பாகும்''’என ஹரித்துவாரில் நடைபெற்ற மருந்து அறிமுகக் கூட்டத்தில் ஊடகத்துறையினரிடம் பெருமித மாக அறிவித்தார் ராம்தேவ்.
“இந்த மருந்து அலோபதி மருந்துகளைவிட பலனளிக்கக்கூடி யது” என்றார். கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்ட நோயாளி களிடையே நடத்திய பரிசோத னையில் இந்த மருந்து நூறு சதவிகிதம் சாதகமான முடிவுகளை அளித்துள்ளதாக ராம்தேவ் பெருமை பேசினார். டெல்லி, அகமதாபாத் மற்றும் பல நகரங்களில் 280 கொரோனா நோய்த் தொற்றாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் நோயாளிகள் 100% குணமாகிய தாகவும் தெரிவித்தார்.
சின்னச் சின்ன தடைகள் எழுந்தாலும் பெரிய இடையூறின்றி சந்தையில் இந்த மருந்து கல்லா கட்டியது. பின் அலோபதி மருத்துவர் கள் இதன் நோய் குணப்படுத்தும் திறனை கேள்விக்கு உட்படுத்தியபின் ஆயுஷ் அமைப்பு இம்மருந்துக்கு அவசரமாகத் தடைவிதித்தது. கொரோனில் மருந்து மட்டும்தான் என்றில்லை பதஞ்சலியின் சர்க்கரை, ரத்த அழுத்த மருந்துகள் அனைத் துமே பெரிய பெரிய வாக்குறுதி களைத் தந்தன. அலோபதி, இந்த நோய்களைக் கட்டுக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும் என்கிறது. பதஞ்சலி மருந்துகள் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் அதன் குணப் படுத்தும் திறன் மருத்துவர்களால் சந்தேகத்துக்குரியதாய்க் கருதப் பட்டது.
அந்த சமயம்தான் குன்னூரைச் சேர்ந்த மருத்துவர் கே.வி. பாபு என்பவர், "ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் திவ்யா பார்மசி மதுக்ரிட், ஐக்ரிட், தைரோக்ரிட், பி.பி. கிரிட், லிப்பிடோம் மாத்திரைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இவை விதிகளை மீறும் வகையிலும், குறிப்பிடும் நோய்களைக் குணப்படுத் தாத வகையிலும் உள்ளது''’என உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த மருந்துகள் சர்க்கரை, கண்ணழுத்த நோய், ரத்தக்கொழுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தவில்லை என்பதை இவ்வமைப்பு கண்டறிந்தது. எனவே இம்மருந்துகளுக்கு தடைவிதித்த துடன், இவற்றின் நோய்தீர்க்கும் தன்மையை நிரூபித்து அனுமதி பெற்றுக்கொள்ளச் சொல்லியும் கடிதம் எழுதியது. இடையில் என்ன நடந்ததோ, மறுக்கப் பட்ட அனுமதியை திரும்ப அளித்து விற்பனைக்குத் தடையில்லை என பதஞ்சலி நிறுவனத்துக்கு சலுகையளித்தது உத்தரகாண்ட் அரசு.
2023, நவம்பரில் பதஞ்சலியின் விளம்பரங் களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகி, நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பதஞ் சலியின் அனைத்து தவறான விளம்பரங்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துவதாக தவறான உரிமை கோரல்களை வெளியிடும் பதஞ்சலியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்''’என்று எச்சரித்தார்.
இதையடுத்து தற்காலிகமாக மன்னிப்புக் கோருவது,…பின்பு சிறிது இடைவெளியில் அதே மாதிரியான விளம்பரங்களை மேற்கொள்வது, மீண்டும் அலோபதியை இழிவுபடுத்தும்விதமாக மேடைகளில் பேசுவது என ராம்தேவ் தொடர்ந்துவந்தார். இதன் உச்சகட்டமாகத்தான் கே.வி. பாபு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபின்பு இதுபோன்ற விளம்பரங்கள் இனி தொடராது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராம்தேவ், பாலகிருஷ்ணன் இருவரும் உறுதி யளித்தனர். ஆனால் விரைவிலேயே, உச்சநீதி மன்றத்துக்கு அளித்த உறுதிமொழியை மீறினர்.
இந்நிலையில் இந்த வழக்கு அதன் இறுதிக் கட்டத்தை எட்டியது, "ஏமாற்று விளம்பரங்களால் தயாரிப்புகளை வாங்கி பாதிப் புக்கு உள் ளாகும் சாமானிய மக்களை பாதுகாப்பதில்தான் நீதிமன்றத்தின் முதன்மையான அக்கறை உள்ளது. சட்டத்தை மீறுவது அனுமதிக்கப் படாது என்ற செய்தியை தெளிவு படுத்துவதே இந்த விவகாரத்தில் எங்களின் நோக்கம்''’என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமாகோலி, அசானுல்லா அமானுதீன் இருவரும் கூற, பதஞ்சலி நிறுவனர்கள் நடந்தவற்றுக் கெல்லாம் பொது மன்னிப்பு கேட்டனர். அவர் கள் முதலில் கேட்ட பொதுமன்னிப்பை நீதிபதி கள் இருவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட னர். ராம்தேவுடன் சேர்த்து, இவரது நிறு வனத்தின் அத்துமீறிய போக்கை தடைசெய்யாத உத்தரகாண்ட் அரசையும், மத்திய அரசையும் தீர்ப்பில் கடுமையாக விமர்சித்தனர்.
பின்னர் அடுத்த அமர்வில் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக, அவர்களது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “வெறுமனே மக்களிடமும் நீதி மன்றத்திடமும் உதட்டளவில் இல்லாமல் உண்மையாகவே” இருவரும் மன்னிப்பு கேட்பதாக வாதிட்டார்.
"உங்களை மன்னிப்பதா வேண்டாமா? என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. நீங்கள் மூன்று முறை உத்தரவுகளை மீறியுள்ளீர்கள். முந்தைய உத்தரவுகள் எங்கள் பரிசீலனையில் உள்ளன. நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாத அளவுக்கு நீங்கள் அப்பாவி இல்லை'' என்று எச்சரித்தனர். அடுத்த விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் எனில், மருத்துவத் துறையில் இத்தகைய விதிமீறல்களுக்கு 100 கோடி, 50 கோடியென அபராதம் விதித்திருப் பார்கள். "உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் களை வெறும் எச்சரிக்கையோடு அனுப்பிவிடப் போகிறதா… இல்லை அபராதம் விதிக்கப் போகிறதா?' பொறுத் திருந்து பார்ப்போம்.