போலிச் சாமியார்களைப் பற்றியும், அவர்களின் காம லீலைகள் பற்றியும் பல செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந் தாலும், போலிச் சாமியார்களை நம்பி தங்கள் வாழ்க்கையையே இழக்கும் பெண்களுக்குக் குறைவில்லை. சென்னையைச் சேர்ந்த 22 வயதாகும் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை மாநகரக் காவல், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனத் திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு போலிச்சாமியாரின் பாலியல் மோசடி குறித்து குறிப்பிட் டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள போலிச்சாமியார், சென்னை புழல் பத்மாவதி நகரைச் சேர்ந்த, 48 வயதாகும் சங்கரநாராயணன். அவர் அப்பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்திக்கொண்டு, பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி ஏமாற்றிவந்திருக்கிறார். அவரது பேச்சை நம்பி ஏராளமானோர் அங்கு வந்துசெல்வது வழக்கம்.
புகாரளித்துள்ள கீதா, பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தேர்வெழுதச் செல்லும்முன் அந்த சாமியாரிடம் ஆசி பெற வந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆரஞ்சு குளிர் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, போலிச் சாமியார் சங்கரநாராயணன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அப்பெண்ணை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த போலிச்சாமியாரைக் கைதுசெய்து தண்டனை பெற்றுத் தருமாறும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
போலிச்சாமியாரால் பாதிக்கப்பட்ட கீதாவின் புகார் மனுவை உடனடியாக விசாரிக்க மாதவரம் டி.சி. சுத்தரவதனம், புழல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கண்ணகிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்புகார் குறித்து உடனடியாக விசாரணையில் இறங்கினார். பாதிக்கப்பட்ட கீதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது... "2018-ம் ஆண்டு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய பாட்டி "சாயிபாபா கோயிலுக்குப் போகலாம்' என்று என்னை அழைத்துக்கொண்டு புழல், திருமால் நகர் முதல் தெருவில், வீட்டிலேயே சாயிபாபா கோயில் வைத்திருந்த சங்கர நாராயணன் என்ற சாமியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன்.
அதன்பின்னர் அங்கு அடிக்கடி சென்று வந்தேன். எனக்கு +2 ஆண்டுத் தேர்வு நெருங்கியபோது அவரிடம் ஆசீர்வாதமும், சாயிபாபா திருநீறும் வாங்கிவருவதற்காகச் சென்றிருந்தேன். அப்போது சாமியாரின் மனைவி புஷ்பலதா எனக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தார். பின்னர் என்ன ஆனதென்றே எனக்கு தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது சாமியாரின் கட்டில் மெத்தையில் அலங்கோலமாகக் கிடந்தேன். "என்னை என்ன செய்தீர்கள்?' என்று சங்கரநாராயணனிடம் கேட்டேன். அப்போது, "உனக்கு பிடித்திருந்த கருமா, பீடையை வெளியே எடுத்தேன்' என்றார். மேலும், "இதை வெளியே சொன்னால் உனக்கு கடவுளின் சாபம் கிடைக்கும்' என்றும், "உன்னுடைய நிர்வாணப் படத்தை இணைய தளத்தில் போட்டுவிட்டால் உன் உடம்பை ஊரே ரசிக்கும்' என்றும் மிரட்டினார். அதனால் அப்போது வெளியே சொல்லப் பயந்து விட்டேன்.
இந்நிலையில் எனக்கு திருமணம் ஆனது. எனது கணவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட போலிச்சாமியார் சங்கரநாராயணன், மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு, எனது புகைப்படங்களை வெளிநாட்டிலுள்ள கணவருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி வரவழைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துவிட்டான். அதனால் எனக்கு கர்ப்பமாகி குழந்தையே பிறந்துவிட்டது. இந்த விஷயம் என் கணவருக்குத் தெரியவர, என்னை மன்னித்து மீண்டும் வாழ்க்கை கொடுத்தார்.
நல்லபடியாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், என் கணவர் மீண்டும் வேலைக்கு வெளிநாடு சென்றுவிட்டார். இதனைத் தெரிந்துகொண்ட சங்கரநாராயணன், தற்போது புதிதாக புழல் பத்மாவதி நகரில், 'ஷீரடிபுரம் சர்வசக்தி பீடம்' என்ற பெயரில் ஆரம்பித்துள்ள ஆசிரமத்திற்கு என்னை மிரட்டி வரவழைத்து, மீண்டும் பலாத்காரம் செய்துவிட்டான். இனி என்னால் வாழவேமுடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதால், வேறுவழியில்லாமல் கடைசியாக நீதி வேண்டி போலீசில் புகாரளித்துள்ளேன்'' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் கண்ணகி, போலிச்சாமியார் சங்கரநாரா யணனையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி புஷ்பலதா வையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
ஆசீர்வாதம் வாங்க வந்த பெண்ணை குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை போட்டோ எடுத்துவைத்து மிரட்டி, அப்பெண்ணின் திருமண வாழ்க்கையையும் சீரழித்த விவகாரத்தில், போலிச்சாமியார் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிச்சாமியார்களை நம்பி தங்கள் வாழ்க்கையை இழக்கும் பெண்களின் கண்ணீர்க் கதை தொடர் கதையாகிக் கொண்டேயிருக்கிறது. சாமியார் என்ற பெயரில் சிவசங்கர பாபாக்களும், சங்கர நாராயணன்களும் இன்னமும் நாட்டில் நடமாடிக்கொண்டு தான் உள்ளனர். பெண்கள் கடவுளை மட்டும் நம்புவதை விட்டுவிட்டு, குறி சொல்வதாகவும், பரிகார பூஜை செய்வதாகவும் கூறி, தங்கள் காமப்பசிக்கு இளம்பெண்களைச் சீரழிக்கும் ஆசாமிகளை நம்புவதால்தான் இப்படியான பாலியல் குற்றங்கள் நடப்பது தொடர்கிறது.