சிவபெருமானின் குற்றத்தைச் சொன்னதால் நெற்றிக்கண்ணால் பொசுக்கப்பட்ட புலவரைத்தான் நக்கீரனாக சினிமாவில் பார்த்திருக்கிறோம். எனது பால்யகாலத்தில் அது மாறியது. "நக்கீரன்' என்றால் பெரிய மீசைவைத்த சாகசக்காரராகவே பார்த்தேன். "நக்கீரன்' ஆசிரியர் நக்கீரன்கோபால் வீரப்பனைச் சந்தித்து பேட்டியெடுத்திருந்த சமயம் அது.
திராவிடப் பாரம்பரியம் கொண்ட எங்கள் தாத்தா குடும்பத்தில் பல ஆண்டு களாக நக்கீரன் இதழை வாங்கிப்படிப்பது வழக்கம். தமிழ்நாட்டின் அரசியலை மிகச்சரியாக, துல்லியமாக காட்டக் கூடியது நக்கீரன்தான் என்பதில் அவர் கள் உறுதியாக இருந்தார்கள். அங்குதான் எனக்கும் நக்கீரனுக்குமான நெருக்கம் உருவானது.
தமிழ்ச்சமூகத்தை உலுக்கிய மிக முக்கியமான பிரச்சனைகளை உலகுக்குச் சொன்னதில் நக்கீரனின் பங்கு முதன்மை யானது. நக்கீரனில் வெளியாகும் செய்திகளில் அரசியல் வேறுபாடு இல்லையென்றாலும், தி.மு.க. சாயலோடு இருப்பதாக விமர்சனம் எனக்கிருக்கிறது.
இதுபோன்ற விமர்சனங்கள் ஒருபுறம் என்றாலும், இன்று வலதுசாரி சிந்தனையோடு வகுப்புவாத சக்திகள் பலமான ஆதிக்கம் செலுத்திவரும் வேளையில், அதற்கெதிராக களமாடக்கூடிய, எளிய மக்கள் கையேந்தும் ஆயுதமாக நக்கீரன் திகழ்கிறது.
2019, செப். 04-06 இதழ்:
முழுவதுமாக ஜெ.வாக மாறியிருக்கிறார் எடப்பாடி என்பதை உணர்த்தும் அட்டைப்படம் ‘நச். எடப்பாடியின் அந்த ஒருநாள் கட்டுரையில், டைம் டூ டைம் அப்டேட், நக்கீரனுக்கே உண்டான ஸ்டைல்.
அரசியல் துணுக்குகளைக் கோர்வையாக சொல்லும் ராங்-கால் பக்கம் அருமை. மர்மங்களுக்குப் பஞ்சமிருக்காத ஈஷா யோக மையத்தில், ஜக்கிக்கு நெருக்கமான ஏகா காணாமல் போன சர்ச்சையை விடாமல் துரத்துகிறது நக்கீரன். உண்மையை நிச்சயம் வெளிக்கொணரும். நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நம்மை, நீட் பயிற்சி மையங்களை எண்ணி புலம்ப வைத்துவிட்டது அரசு. நீட் உள்ளிட்ட சமூக அவலங்களை முன்னின்று கண்டிக்கும் நக்கீரனுக்கு சல்யூட்!
________________
வாசகர் கடிதங்கள்!
தமிழ்ப்பாசம்!
"அணு அணு வாய் சாவதற்கு முடி வெடுத்துவிட்ட பிறகு காதல் சரியான வழிதான்' என தமிழால் காதல் ரசம் செய்தவர், கவிஞர் அறிவுமதி. அவரின் தமிழ்த் தொண்டுக்கு "வாழ்நாள் சாதனை யாளர்' விருது வணக் கத்துக்குரியதுதான். இருந் தாலும்கூட பாவலரின் தமிழ்ப் பாசத்தை விருதுகளால் ஒருபோதும் நிறைப்படுத்திவிட முடியாது.
-அ.காமராசன், பெரம்பலூர்.
உயிர்க்கொல்லி உரையாடல்!
"சல்லி' கொடுத்து காண்ட்ராட் எடுப்பவர் ஒருவர். அதில் தனக்கு "வரும்படி' வரவில்லை என "உயிர்க்கொல்லி' சொற்களால் "கில்லி' ஆடுகிறார் அ.தி.மு.க. எக்ஸ் ஒ.செ. ராஜா. எதிர்த்தரப்பாளரை "எள்ளி' நகையாடும் அவரின் அலைபேசி உரையாடலை வாசிப்பவ ருக்கு நிச்சயம் நமுட்டுச் சிரிப்பு வெடிபோட்டுக் கிளம்பும்.
-ஆர்.சாருலதா, கள்ளக்குறிச்சி.