"நக்கீரன்' என்றாலே அதர்மங்களையும், அக்கிரமக்காரர்களையும் அம்பலப்படுத்தும் குரலாகவே நாங்கள் பார்க்கிறோம்.
சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் இரு பக்கங்களையும் அலசி ஆராய்ந்து மக்கள் மேடையில் வைத்த பெருமையும், தீரமும் நக்கீரனுக்கு மட்டுமே உண்டு. வீரப்பனின் சந்தனக்காட்டுச் சம்பவங்கள் அடுத்தடுத்து நக்கீரனில் வந்தபோது பொறையாரில் இருந்து மயிலாடுதுறை வந்து புத்தகத்தை வாங்கிச் சென்று படிக்கத் துவங்கிய ஆர்வம்தான் இன்றுவரை தீவிர வாசகனாக இருக்க வைத்துள்ளது.
எல்லோரும் பயந்து ஒதுங்கிய ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்கையும், பிறகு அவர் இறப்பில் உள்ள துயரங்களையும் நடுநிலையோடு வெளிக்கொண்டுவந்ததும் நக்கீரனே.
சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, ஊடக, பத்திரிகைத் துறைக்கே சட்டரீதியாக உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் நக்கீரன் ஆசிரியர்.
2019, ஜூலை 24-26 இதழ்:
"ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்த சூர்யா' கட்டுரை இளசுகளை சுண்டியிழுத்து, அவர்களுக்கான கருத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. "பேரம் பேசிய எடப்பாடி; ஆடியோ ரிலீசுக்கு ரெடியாகும் டி.டி.வி.' கட்டுரை சிறப்பு. அடுத்த குண்டை டி.டி.வி. போடப்போகிறார் என்பதை முன்கூட்டியே இந்த செய்தி மூலம் உணர வைக்கிறது. "நீயா நானா கர்நாடகா மல்லுக்கட்டு' அற்புதம். உழைப்பால் உருவான சாம்ராஜ்யத்தின் சரவணபவன் அண்ணாச்சி கட்டுரையும் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. "மூன்றாம் வகுப்புக்கு நீட்; ஏழை மாணவர்களுக்கு வேட்டு; அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு!' -இதுதான் புதிய கல்விக் கொள்கை கட்டுரை, புரியாத மக்களுக்கும் புரிய வைத்திருக்கிறது. கலைஞானம் தொடர், மாவலி பதில்கள், ராங்-கால் இவை அனைத்தும் வழக்கம்போல் சிறப்பு. மொத்தத்தில்... இந்த இதழ் கருத்தியல் கலந்த கருவூலம்.
_____________
வாசகர் கடிதங்கள்!
அரசியல் வழிகாட்டி!
பழ.கருப்பையாவின் அரசியல் -சமூகத் தொடரான "அடுத்த கட்டம்' அரசியல் குழந்தைகளுக்கு நல்லதொரு படிப்பினை, சிறந்ததொரு வழிகாட்டி.
-வ.நடராஜன், கூடுவாஞ்சேரி.
இந்தியா ஒளிர்கிறது!
நிலவின் தென்துருவத்தில் நீர் இருப்பை மெய்ப்பிக்க புறப்பட்டுள்ள சந்திராயன்-2 என்பது ஒரு மைல்கல் சாதனை. இப்பயணம்... இந்தியா ஒளிரப்போகிறது என்பதற்கு ஒரு நிலைத்த எடுத்துக்காட்டு.
-ஆர்.கல்பனா, கோவை.