நக்கீரன்' புத்தகத்தை எனக்கு 20 வருடத்திற்கு முன்பே தெரியும். தமிழகத்தின் பரபரப்பு செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக வாங்கி படிக்க ஆரம்பித்த நான், அப்படியே ரெகுலர் வாசகனாக மாறிவிட்டேன். தமிழகத்தில் நிகழும் ஒவ்வொரு அரசியல் மாற்றம், ஆன்மிக முகமூடி கிழிப்பு, சினிமா தகவல்கள் என... எல்லாவற்றிலும் எல்லா நிகழ்வுகளிலும் நக்கீரனின் புலனாய்வு இருக்கிறது. இதை தமிழக வாசகர்களும் அறிவார்கள். "நக்கீரன்' புலனாய்வு மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு "நக்கீரன்' வாசகனும் புலனாய்வுப் புலிகளாகவே மாறியிருக்கிறார்கள்.
2019, ஜூலை 13-16 இதழ்:
தமிழகமே ஆர்வத்தோடு உற்று நோக்கும் நிர்மலாதேவி செய்தியில் நக்கீரன் அட்டைப் படம் ஒன்றே போதும் நக்கீரன் உழைப்பிற்கு உதாரணம். யாரும் எதிர்பார்க்காத நிர்மலாதேவியே எதிர்பார்க்காத படம் வெளியிட்டு உள்ளீர்கள். இந்த புகைப்படத்திற்காக உழைத்த நக்கீரன் தம்பிக்கு வாழ்த்துகள்!
முகிலன் வழக்கில் முதல்முறையாக பாலியல் புகார் கொடுத்த பெண்மணியின் நேரடி பேட்டியும், முகிலன் மனைவியின் பேட்டியும், போலீஸ் எப்படி பயன்படுத்திக்கொண்டது என்பதை பொட்டில் அடித்தது மாதிரி சொல்கிறது கட்டுரைகள்.
வழக்கம்போல் ராங்-கால் பகுதியில் டாப்லெவல் நியூஸ். தமிழகத்தின் கனிமவளம் கொள்ளை அடிப்பதற்கு முக்கோண மோதல் தகவல் அத்தனையும் விறுவிறுப்பான சினிமா போன்று செல்கிறது. வலைவீச்சு வழக்கம்போல் சாட்டையடி, சரவெடி, சிரிப்பு வெடி எல்லாம் கலந்த கலவையாக உள்ளது.
_________
வாசகர் கடிதங்கள்!
"காம்போ பேக்'கில் பட்டம்!
மதுரை காமராஜர் பல்கலையில் பெயரும் புகைப்படமும் லட்ச ரூபாய் பணமும் கொடுத்தால் பாமரனும் பட்டதாரியாகலாம் போல. துணைவேந்தருக்கே தெரியாமல் நிர்வாகக் கோளாறு நடந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்லப்படுகிற ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது ல.ஒ.துறை ஆக்ஷன் எடுக்காது என்பதே நிதர்சனம். எனினும் இப்படிப்பட்டவர்களால்தான் இன்றைய கல்வித்தரம், உணவுச் சந்தையில் நிகழும் "காம்போ பேக்' போல மலிவு விலை சரக்காகி வருகிறது.
-வெ.நவநீதன், திருப்பூர்.
கழுத்தறுக்கும் சாதி!
காதலின் குதூகலக் கண்கள், சாதி பார்க்காது. ஆனால் சாதியின் குரூரக் கண்களோ, ஒரே இனமாக இருந்தாலும் அதன் உட்பிரிவுகள் வேறுபட்டால் கூட சோலைராஜ்-ஜோதி போன்றவர்களை கழுத்தறுத்துவிடும். இப்படிப்பட்ட வன்மப் பித்துக்கு நக்கீரன் வெளியிட்ட "சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்' செய்தியே ஒரு சான்று.
-பி.மணி, ஒரத்தநாடு