நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எனது தந்தை "கல்கண்டு' இதழ் வாங்கி வந்து படிப்பார். "நக்கீரன்' இதழ் பரபரப்பாக வந்தது, அதையும் தவறாமல் வாங்கி வருவார். நான் கல்லூரிக்கு அடிஎடுத்து வைத்த காலம். அப்பா வாங்கிவரும் நக்கீரனை படிக்கத் தொடங்கினேன். அப்பாவுக்குப் பிறகு நான், எனக்குப் பிறகு எனது பிள்ளை களும் நக்கீரன் வாசகர்களாகத் தொடர்வார்கள். நக்கீரன் வளர... வளர அதற்காக அதன் ஆசிரியர் கோபால் அண்ணன் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், காயங்கள் வேதனைகள் பற்றி வார்த்தைகளால், சொல்ல முடியவில்லை.
மற்ற புலனாய்வு இதழ்கள் செய்திகளைச் சொல்லும்போது வார்த்தையால் பூசி மெழுகும். "நக்கீரன்' மட் டுமே உரக்கச் சொல்லும் வீரத் தின் விளை நிலம். அதன் வாசகன் என்பதை நெஞ் சம் நிமிர்த்தி துணிவோடு சொல்வேன்.
2019, ஜூலை 10-12 இதழ்:
"ராங்கால்' பகுதியில் "அ.தி.மு.க.வில் வெடிக்கும் அதிருப்தி' என்ற செய்தி அருமை. ஆட்சி, அதிகாரம் கைவிட்டுப்போனால் எரிமலையாக வெடித்துச் சிதறும் கட்சி என்பதை நக்கீரன் பலமுறை கூறியுள்ளது.
"முகிலன் கடத்தலா? தலைமறைவா?' என்ற செய்தியில் முகிலன் நெடுவாசல் போராட்டத்தின்போது பாலியல் கொடுமை செய்தார் என ஒரு பெண்மணி புகார் கொடுத்துள்ளார். நெடுவாசலில் தங்கும் வீடுகளே இல்லை என்கிறார் நெல்சன் என்பவர். அப்படியானால் எது உண்மை?
"ஆவினில் பெண்களுக்குத் தொல்லை' -சேர்மன் மீது பாலியல் புகார்!' தமிழகத்தில் கிராமத்து ஏழை பெண்கள் முதல் உயர் அதிகாரியாக உள்ள பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியின் லட்சணம் அப்படி உள்ளது. "ஒரே ஒரு பிரதமர் அது நான் மட்டுமே' என்று மோடி சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். "ஆட்சியர் கோட்டாட்சியர் மோதல்' செய்தி நூற்றுக்கு நூறு சரி. மாவட்டத்தில் அலங்கோலமாக நடக்கிறது நிர்வாகம்.
____________
வாசகர் கடிதங்கள்!
மக்களுக்காக அரசு!
அரசியல்வாதிகள் தனிநபர் சொத்துகளை குறிவைப்பதும் அவற்றை அடைவதற்கான அடாவடி வேலைகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறார்கள். ஓர் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட நூறு கோடி ரூபாய் சொத்துக்காக அ.தி.மு.க. அமைச்சர் சம்பத் போன்றவர்கள் செயல்படுவது அழகல்ல. மக்களுக்காக உழைக்க வேண்டிய அரசு, அமைச்சர்களுக்காக அலைபாய்வதும், காவல்துறையை ஏவுவதுமாக இருந்தால் நாடு விளங்குமா?
-பா.கிருஷ்ணன், கூடலூர்.
வலைவீச்சில் நித்தி!
"சூரியன் உதிப்பதை 40 நிமிடம் நிறுத்தினேன்' என்கிறார் வானசாஸ்திரம் புரியாத நித்தியானந்தா. "வலை வீச்சாளர்'கள் அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
-ஆர்.கே.சிவா, திருவண்ணாமலை.