நான் 2001-ல் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு நக்கீரன் அறிமுகமானது. அறிமுகப்படுத்தியவர் அப்போது நான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர்தான். நக்கீரன் புத்தகத்தை வகுப்பறைக்கே கொண்டுவந்து அதிலுள்ள புலனாய்வுக் கட்டுரைகளைப் படித்துக்காட்டுவார். அதோடு அதில் உள்ள பெண்கள் சம்பந்தமான கட்டுரைகளை வாசித்துக்காட்டுவார். சமுதாயத்தில் பெண்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை நக்கீரனில் வரும் செய்திகளை சுட்டிக்காட்டி நாட்டில் எந்தளவுக்கு பெண்களுக்கு எதிரானவர்கள் உள்ளார்கள் பாருங்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் யார், யார் என்பதை அறிய வேண்டுமானால் தொடர்ச்சியாக நக்கீரனை வாசியுங்கள் என அறிவுறுத்தினார். கடந்த 19 வருடங்களாக நக்கீரன் என் கைகளில் தவழ்கின்றது. நக்கீரன் வாசிப்பின் மூலம், சமுதாயத்தை சுவாசிக்கிறோம். பெண்களுக்கு நக்கீரன் ஒரு தற்காப்பு கவசம்.
2019, ஜூலை 06-09 இதழ்:
அட்டைப் படம் "அடேங்கப்பா செம ஸ்டைல்'. சமீபத்தில் வைரலான நேசமணியை நினைவுபடுத்தியது. 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழக்கம்போல டெல்லிதான் "தி பாஸ்' என புரிந்துவிட்டது. காஞ்சிபுரம் அத்திவரதரை காணச் செல்பவர்கள் படும் கஷ்டத்தைச் சொன்ன கட்டுரை, மக்களின் குரலாகவே நக்கீரன் எதிரொலிக்கிறது.
"அடுத்த கட்டம்' தொடர் அருமை என்னைப்போன்ற இளைய சமுதாயம் வரலாற்றை அறியும் ஓர் ஆவணம். "உதயநிதியின் வருகை சுகமா? சுமையா?' கட்டுரை தி.மு.க.வில் பெரிய வரவேற்பையும் எழுச்சியையும் பெற்றுள்ளதைச் சொல்கிறது. இளைய சமுதாயத்தின் கையிருப்பு தலைவனாக வருவார்; வளர்வார்!
வாசகர் கடிதங்கள்!
நகைப்பு!
மாவலியார் சொன்னதுபோல கட்சியை தோல்வி முகத்திலிருந்து மீட்க வேண்டிய நேரத்தில், அபிநந்தன் மீசைக்கு தேசிய அங்கீகாரம் கேட்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஒருவர். இது, "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை' என்கிற பழமொழியைச் சொல்லி நகைக்கத் தூண்டுகிறது.
-ஆர்.குமரகுரு, விழுப்புரம்.
உந்துதல்!
சமூகத்துக்கான போராட்டம் என்பது பயிற்சி கொடுத்து வருவதில்லை. அது இயல்பான இரத்த ஓட்டம் போல அமையவேண்டும். மதுவிலக்குக்காக தன் திருமணத்தையும் தள்ளி வைத்துவிட்டு சிறை சென்று போராடுகிற நந்தினியின் அதே உணர்வு, அவரது வருங்கால கணவருக்கும் வாய்த்திருப்பது பெருமைக்குரியது மட்டுமல்ல; எல்லோரும் போராட வேண்டும் என்பதற்கான உந்துதலும்கூட.
-மு.ரமேஷ், புதுக்கோட்டை.