நான் என் கல்லூரி நாட்கள் தொடங்கி இன்றுவரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக "நக்கீரன்' செய்திகளின் தீவிர ரசிகன். கல்லூரியில் சேர்ந்தபோதுதான் "நக்கீரன்' முதன் முதலாக எனக்கு அறிமுகமானது. வீரப்பன் விவகாரம் அப்போது பெரியதாக இருந்தது. கல்லூரிப் புத்தகங்களோடு "நக்கீரன்' புத்தகத்தையும் வகுப்புகளுக்கு கொண்டுசெல்வேன். அதனைப் பார்த்துவிட்டு, "நக்கீரன்' இதழை கல்லூரிக்கு கொண்டுவராதே என்ற பேராசிரியர்களின் எச்சரிக்கையும் மீறி நக்கீரன்மீது ஒரு அலாதி காதல். பத்திரிகை தர்மத்தில் தொடர்ந்து உண்மை, துணிவு, உறுதி என்ற தாரக மந்திரத்தோடு இன்றுவரை தடம் மாறாமல் நக்கீரன் மக்கள் மன்றத்தில் நிலைத்து நிற்கிறது. நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களின் வீரம், துணிவு, உறுதி போன்றவையே அதன் வெற்றியின் ரகசியம் என நினைக்கிறேன்.
2019, மே 15-17 இதழ்:
"கமல் பற்ற வைத்த தீவிரவாதம்' தமிழக அரசியலின் அடுத்த தலைமுறை திராவிட அரசியலுக்கு ஒரு வழிகாட்டி; கமல் பா.ஜ.க.வின் "பி டீம்' என்ற பிம்பத்தை உடைத்துவிட்டது. துணிச்சலான பேச்சு.
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளின் உண்மை களநிலவரத்தை அச்சு அசலாக பிரதிபலித்துள்ளீர்.
பொள்ளாச்சி சம்பவத்தை புலனாய்வுத் துறையை மிஞ்சும் வகையில் புலனாய்வு செய்தது நக்கீரன் மட்டுமே. தவறு செய்தவர்கள் அரசியல்வாதிகளாக, உயர் அதிகாரத்தில் இருந்தாலும் பயப்படாமல் சி.பி.ஐ. வந்து விசாரிக்கும் அளவுக்கு கொண்டுசென்ற பெருமை நக்கீரனுக்கே.
"காதலர்களோடு வரும் இளம்பெண்களை குறிவைக்கும் காமுகர்கள்!' என்கிற செய்தி பெண்களுக்கான விழிப்புணர்வுக் கட்டுரை. மாவலி பதில்கள் நெத்தியடியாக உள்ளன.
_____________
வாசகர் கடிதங்கள்!
எச்சில்பட்ட அரசு!
அஸ்ஸாமின் பிள்ளைகளிடமே தாய்ப்பத்திரம் கேட்கிறது மோடி அரசின் என்.ஆர்.சி. நாடு கடந்து ஊடுருவும் தீவிரவாதத்தின் கால்களை முறிக்க யோக்கியதை இல்லை. என்றாலும், அரசியல் ஆதாயத்துக்காக குடியுரிமை ஆவணம் இல்லாத வனமக்கள் உள்ளிட்டவர்களை நாடு கடத்துவது என்பது வானம் பார்த்து எச்சிலைத் துப்புவதைப் போன்றதாகும்.
-எஸ்.பி.விஷ்ணு, முசிறி.
லோன் மோசடி!
அன்ன பூமலர், பிரதமர் லோனுக்காக தவறானவர்களிடம் இழந்த பணத்தை முதலீடு செய்திருந்தாலே தொழிலை பிரமாதப்படுத்தியிருக்கலாம். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் முதல்முறையாக வங்கிக்கு ஓடிய அவர், அந்த ஓட்டத்தை லோனுக்கான அஸ்திவாரத்திலேயே தொடங்கியிருக்க வேண்டாமா?
-மு.பார்வதி, மதுரை.