நான் நல்ல புலனாய்வுப் பத்திரிகை படிக்கத் தொடங்கிய காலத்தில் என் கைகளில் இருந்தது நக்கீரன். எனக்கு அரசியல் பற்றி அறிந்து கொள்ள உதவியது. சமூகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தியதும் நக்கீரன். பின்விளைவுகளைப் பற்றி கவலையில்லாமல் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக மக்களின் பக்கம் பலம்வாய்ந்த ஊடகம் நக்கீரன். அதன் வாசகர் என்பதில் எனக்கு பெருமை உண்டு. சந்தனக் கடத்தல் வீரப்பன் முதல் தற்போது பொள்ளாச்சி சம்பவம் வரை வெளிக்கொண்டு வந்த சமூக அக்கறை கொண்ட துணிச்சலான பத்திரிகையை படிப்பதில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். இடையில் எத்தனையே நிகழ்வுகள் உண்டு. ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்களால் ஒடுக்க நினைப்பதை நீதிமன்றம் மூலமாக உடைத்து, தங்கள் பணியை செய்வதில் நக்கீரனுக்கு தனி இடமுண்டு. அந்த துணிச்சலை ஒவ்வொரு இளம் பத்திரிக்கையாளரும் கற்றுக்கொள்ள வேண்டும். அய்யா சின்னகுத்தூசி, ஞானி போன்றவர்களை அறிந்ததே நக்கீரன் மூலம்தான்.
ஏப்ரல் 27-30 இதழ்
ராஜபக்சேவை வைத்து அமைக்கப்பட்டுள்ள அட்டைப்படமே ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கும் கதை சொல்கிறது. "இளம்பெண் பகீர் வாக்குமூலம்' பகீர் என்றிருந்தது.
கள்ளத்துப்பாக்கிகளும் சந்தைக்கு வந்துவிட்டதை "தம்பியைக் கொன்ற உடன்பிறப்பு!' காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலின் அவசியத்தை கஜா புயலின் தாக்கத்தை வைத்து சொல்லி இருப்பது நன்று. ராங்கால் பகுதியில் அத்தனையும் முக்கிய செய்திகளாக இருந்தது. மக்கள் விரும்பாத எதையும் செய்ய மாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நாடக முகத்தை "மீண்டும் எட்டு வழிச்சாலையா?' கட்டுரை வெளிக்காட்டுகிறது. கடைசி பக்கங்களை முதலில் தேடுவது வாசகர்களின் ஆர்வம். ஆம்... வலைவீச்சு, மொத்த செய்திகளையும் வாசகர்களின் கற்பனை எழுத்துகள் மூலம் கொண்டுவந்து ஒரேஇடத்தில் கொட்டி வைத்திருக்கிறது.
வாசகர் கடிதங்கள்!
வெளுத்தெடுப்பு!
"நல்ல ஆட்சியாளனே மக்களுக்கு உகந்தவன். இதை ஜெ., ஆட்சியால், பணம்... பணத்தால் நச்சுச் சுழற்சி முறையால் சீரழித்துவிட்டார்' என பல்வேறு அரசியல் தரவுகளை முன்னிலைப்படுத்தி... தனக்கே உண்டான நக்கல் நையாண்டிகளுடன் வெளுத்து வாங்கியிருக்கிறார் பழ.கருப்பையா.
-ஆர்.ஜோதிவேல், ஒட்டன்சத்திரம்.
காலம் கடந்தாலும்...!
"கேபிள் கொள்ளை! செல்போன் ரீ-சார்ஜ் வழிப்பறி' குறித்து எந்தப் பத்திரிகையும் எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. இத் திருப்பணியை சற்று காலம் கடந்தாலும் செவ்வனே செய்து, மத்திய அரசின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது நக்கீரன்.
-எஸ்.அருண், ஆத்தூர்.