மக்களின் பிரச்சினைகளைப் பொதுக்களத்தில் வைப்பதில் தலைசிறந்து விளங்கிவருகிறது நக்கீரன். எழுத்துரிமைக்கு எதிரான சவால்களை வென்றுவருகிறது நக்கீரன். அரசியல் சார்பற்ற நிலையில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையான தைரியத்துடன், துணிவுடன் என்றும் பிரதிபலிக்கிறது நக்கீரன். ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் பக்கம் நின்று நக்கீரனின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழ்ப் பத்திரிகையாக இருந்தாலும் அண்டை மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் பிரபலமான புலனாய்வுப் பத்திரிகையாக போற்றப்படுகிறது நக்கீரன்.
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரியிலும் கேட்கப்படும் ஆர்டிக்கிலான தனிமனித கருத்துச் சுதந்திரம் பற்றிய விளக்கத்தை ஆட்டோ சங்கரின் வழக்கில் போராடிப் பெற்றவர் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்கள்.
சாமானியனுக்கான அரசியல் போராட்டம் மட்டுமின்றி சட்டப் போராட்டத்திலும் மக்களுக்கு எதிரானதை தைரியமாக வாதாடி நீதியை நிலைநிறுத்தும் நக்கீரனின் பணி தொடரட்டும்!
2019, ஏப்.02-05 இதழ்:
குற்றவாளிகளைக் காப்பாற்ற சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷாவும், எஸ்.பி.ராஜேஸ்வரியும் நக்கீரன் ஆசிரியரிடம் கேட்ட மிரட்டல் கேள்விகள் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் ரகம்.
"செல்போன் யுத்தம்! பா.ஜ.க. பிளான்' என்பது நிகழ்காலத்துக்கேற்ற சூழ்ச்சி. டிஜிட்டல் உலகில் வாக்காளர்களை எப்படியெல்லாம் வசியம் செய்கிறார்கள்.
தி.மு.க.வை குறிவைத்து நடத்தப்பட்ட வேலூர் ரெய்டில் மத்திய-மாநில அரசுகளோடு கூட்டணி போட்டுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் பளிச்சிடுகிறது. ரெய்டு என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?
வலைவீச்சு தேர்தல் நேர உலைக் கொதிப்பு.
______________
வாசகர் கடிதங்கள்!
யாருக்கு சாதகம்!
ம.ம.க. ஜவாஹிருல்லா தி.மு.க.-காங்கிரஸை ஆதரித்து முஸ்லிம் வாக்குகளைச்சுட்டுகிறார். எஸ்.பி.டி.ஐ. தெஹலான் பாகவி, ஜாஃபர்அலி ஆகியோர் முஸ்லிம் செல்வாக்கில் தினகரனை முன்னிலைப்படுத்துகிறார்கள். எனினும் இவர்கள் மூவருமே அ.தி.மு.க.-பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் முஸ்லிம் சமுதாய வாக்குகள் சிதறினால், அது ஆளுந்தரப்புக்கே சாதகம்.
-கே.சிவகுரு, வாழப்பாடி.
ஊர்மிளாவுக்கு மவுசு!
காங்கிரஸில் சேர்ந்த உடனேயே நடிகை ஊர்மிளாவுக்கு சீட் உறுதியாகிவிட்டது. ஆனா கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடிய நடிகை குஷ்புவுக்கு நோ சொல்லிவிட்டார்கள். ம்... நடிகையருக்கான தேர்தல் சீட் மல்லுக்கட்டிலும்கூட வடநாட்டுக்காரர்களுக்குத்தான் மவுசு போல.
-சே.ஹரிகிருஷ்ணன், தர்மபுரி.