சங்க இலக்கியத்தில் வரும் நக்கீரர்கூட நெற்றிக்கண்ணை திறந்தது கடவுள்தான் என்று தெரிந்தவுடன், அவரிடமே சரணாகதி அடைந்துவிடுவார். ஆனால், நம் சமகால நக்கீரனோ நெற்றிக்கண்ணை மட்டுமல்ல நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையையே வைத்தாலும் குற்றம் குற்றமே என தீரத்தோடு எதிர்த்து நிற்கும். அப்படி நின்றதற்கு சாட்சியாக இன்றும் இருப்பவைதான் நக்கீரன் மீது ஆண்ட/ஆளும் ஆட்சியாளர்கள் தொடந்து நடத்தி வந்த சட்டத்துக்குப் புறம்பான, சட்டரீதியிலான தாக்குதல்கள். அப்படியான தாக்குதல்களை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெற்று, ஊடகத்துறையினருக்கு வழிகாட்டியாக இருக்கிறது "நக்கீரன்.'
வார இதழ்கள் என்றாலே அவை அடுப்படியில் (சமையற் குறிப்புகள்) பிறந்து, வரவேற்பறையில் தவழ்ந்து (கதைகள், கட்டுரைகள், கவிதைகள்), வீட்டு திண்ணையோடு படுத்துவிடும் (வெட்டி அரட்டைகள்) என்ற நிலையிலிருந்து, அரசமரத்தடி அரசியலுக்கு உயர்த்தியதில் நக்கீரனுக்கும் முக்கிய பங்குண்டு.
2019, பிப்.20-22 இதழ்:…
"புலவாமா வெடிகுண்டு தாக்குதல்' சம்பவமும், வைரமுத்து, கபிலன் ஆகியோரின் கவிதைகளும் நெஞ்சைப் பிசைகின்றன. "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி முகிலன் எங்கே?' என்று வேறு எந்த ஊடகங்களும் கேட்டதாக தெரியவில்லை.
"மாவலி' பதில்களில் இடம்பெற்றுள்ள இந்திரா, பிரியங்கா புகைப்படங்கள் இனி கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வீடுகளை அலங்கரிக்கும்.
"நெல்லை எம்.பி. சீட்! மல்லுக்கட்டும் வி.ஐ.பி.கள்!' கட்டுரையின் இறுதியில் "நெல்லை புகழ் அல்வா, யாருக்கு யார் கொடுப்பார்கள்' என்று முடித்திருப்பது இருட்டுக் கடை அல்வா போல் இனிப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
_________
வாசகர் கடிதங்கள்!
அது போதும்!
நாட்டுக்கொரு நல்லவனா கொடி பறக்கவிட்டு பாயும் புலியா வருவீங்கன்னு எதிர்பார்த்தோம் படையப்பா. ஆனா ஒண்ணு பாட்ஷா பாய்... உழைப்பாளி முத்து வியர்வை சிந்தி, பணக்காரன் ஆவதுபோல உங்கள் ரசிகர்கள் அனைவரும் மாற்றுக் கட்சி வாக்காளர்களாக மாறி ஓட்டளிக்கும் முன்பே முடிவெடுங்க, அதுபோதும். தளபதி, நீங்க அரசியலுக்கு எப்ப வருவீங்கனு ஒருதடவை சொன்னா போதும்; அதை நூறு தடவையா ஏற்றுக்கொள்கிறோம்.
-தர்மதுரை, பேட்டவாய்த்தலை.
திராணி ம்கூம்...?
அன்று, சிமெண்ட் விலையை சிண்டிகேட் அமைத்து விலையேற்றியவர்களிடம் சிமெண்ட் உற்பத்தியை தேசியமயமாக்கப் போவதாக எச்சரித்தார் கலைஞர். ஆனால் அவர்போல் செயல்பட இன்றைய அரசுக்கு எங்கிருக்கு திராணி?
-கே.சிவா, தர்மபுரி.