1994-ஆம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்த பொழுது நக்கீரனோடு நெருக்கமானேன். அன்று முதல் தொடர்ச்சியாக நக்கீரனை வாசிக்கத் தொடங் கினேன். அரசியல் செய்தி, சினிமா செய்தி, விவசாய செய்தி போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் உண்மையை உடனடியாக வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் நக்கீரன் பாணி. நக்கீரன் ஆசிரியர் பல வழக்குகளை பார்த்தவர், உண்மையின் பக்கம் நிற்பதால் வெற்றியும் பெற்றுவருகிறார். தற்பொழுது கூட ஒரு வழக்கில் அவரை கைது செய்தபோது நீதிமன்றமே "அவரை கைது செய்ய முடியாது' என்று சொல்லியிருந்தது. தவறுகள் எங்கு நடந்தாலும் அதை உடனடியாக சுட்டிக் காட்டக்கூடிய இதழ் நக்கீரன் என்பதில், அதன் வாசகனாக நீடிப்பதில் பெருமைப் படுகிறேன்.
2019 பிப்ரவரி 02-05 இதழ்:
"நித்தி பதுங்கிய நாடு! கண்டுபிடித்த பக்தர்கள்!' என்ற தலைப்பில் நித்யானந்தா சாமியார் நேபாளத்தில் பதுங்கியிருந்து தென்அமெரிக்க நாடான பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்றார் போன்ற செய்தி மூலம் புலனாய்வுப் புலி என்பதை நிரூபித்துள்ளது நக்கீரன்.
ராங்-கால் பகுதியில் "எந்த கட்சி எந்த கூட்டணிக்கு பேசுகின்றது!', "பா.ம.க.வுக்கு என்ன டிமாண்ட்' போன்ற செய்திகள், மக்களுக்கான விஷயங்கள்.
"கேரக்டர்' தொடரில்- ஆச்சி மனோரமாவைப் பற்றி கலை ஞானம் மிகச்சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். "வடஇந்தியர்களுக்கு முக்கியத்துவம் தமிழர்களுக்கு இல்லை', "மோடியின் சதி! அம்பலப்படுத்தும் வேல்முருகன் பதில்கள்', "மாவலி' பதில்கள் மிகஅருமை.
வாசகர் கடிதங்கள்!
வாரிசுகள் வரலாம்!
வாரிசுகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் உலக அதிசயம் அல்ல, மாறாக... அவர்கள் தங்களை களப்பணிக்கு கொண்டு வந்தவர்களைவிட மக்கள் சேவையில் திருப்தியாகச் செயல்படுகிறார்களா என்பது தான் முக்கியம். "தெறி'யில் செய்தி வரிகளாக வந்த வேலூர் வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் மகன் செல்வத்திற்கும் இது பொருந்தும்.
-சி.வடிவழகி, பொள்ளாச்சி.
கருத்துகளில் நியாயம்!
ஜாக்டோ-ஜியோ போராட்டம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இருப்பினும் "சட்டப் பஞ்சாயத்து' செந்தில் ஆறுமுகம், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் அரசுக்கு எதிர்ப்பு -ஆதரவு என தத்தம் கருத்துகளை எவ்வித சமரசமுமின்றி நியாயப்படுத்து கிறார்கள்.
-கே.திரிபாதி, வடலூர்.