எனது பாட்டி சிவகாமி அனைத்து வார இதழ்களையும் படிப்பார். அவர் படிக்கும்போது, எங்களையும் படிக்கச்சொல்லி ஊக்கப்படுத்துவார். அப்படித்தான் நக்கீரன் எனக்கு அறிமுகமானது. குறிப்பாக, மாநில முதல்வர்களே பயந்த,…காவல்துறையினரையே அச்சுறுத்தி வந்த வீரப்பனை நக்கீரன்கோபால், துணிச்சலோடு சந்தித்ததைப் படித்து வியந்துபோனேன். ஆள்பவர்களின் தவறை சுட்டுவது மட்டுமல்ல, எப்போதும் சாதியத்திற்கு, மதவாதத்திற்கு எதிராகவும் நக்கீரன் சாட்டையைச் சுழற்றத் தவறியதில்லை.
நக்கீரனிடம் மிகவும் பிடித்த விஷயம் என்றால், அதன் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்தான். மற்ற ஊடகங்கள் அரசியல்வாதிகள் கொடுக்கும் அறிக்கைகளையும் ஆர்.டி.ஐ. தகவல்களையும் மட்டுமே புலனாய்வு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, மிகவும் ஆழமாக இறங்கி அரசியல், மருத்துவத்துறை, காவல்துறை என அனைத்து துறைகளிலும் புலனாய்வில் முன்னோடியாய் திகழ்கிறது. மேலும், நக்கீரன் ஊடக சுதந்திரத்திற்காக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம்வரை வாங்கி வைத்துள்ள தீர்ப்புகள் ஊடக சுதந்திரத்தை வரலாறு இருக்கும் வரை காக்கும்.
2019, ஜனவரி 23-25 இதழ்:
"கொடநாடு வில்லங்கம்! "எடப்பாடியோடு சிக்கும் மந்திரிகள்! களமிறங்கி கலக்கும் மேத்யூஸ் டீம்!'’கட்டுரை அக்மார்க் நக்கீரன் துணிச்சல்.
நான் ஒரு அஜித் ரசிகன். "பா.ஜ.க. பாசவலை! அறுத்தெறிந்த அஜித்'’அட்டைப் படத்தில் அஜித் செம்ம ஸ்டைலாகவும் கெத்தாகவும் இருந்தார்.
மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்சரா ரெட்டியின் பேட்டியை பிரசுரித்து திருநங்கைகளுக்கு நக்கீரன் எப்போதும் ஆதரவு என்பதை உணர்த்தி பாலின சமத்துவத்தைப் போற்றியுள்ளது.
_______________
வாசகர் கடிதங்கள்!
அறிவியலே வாழ்வியல்!
இயற்கை வளங்களை வெட்டி எடுப்பதில் எதிர்ப்பை வெளிப்படுத்தும்போது அவற்றை நாமே ஒன்றுகூடி அவமதிப்பது போலாகும். அறிவியல் பயன்பாட்டு வளர்ச்சியை மக்களுக்குப் புரியும்படி மத்திய-மாநில அரசுகள் பக்குவமாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில் செயல்படும்போது, "டங்ஸ்டன்' போன்ற கனிம ஆராய்ச்சிக்கு மக்களிடம் அதிர்ச்சி எழுவதற்கும் சந்தேகம் கிளம்புவதற்கும் வழி இல்லாமல் போகும்.
-ஆர்.எம்.பாஸ்கர், தூத்துக்குடி.
பல்லிளிக்கும் தவறுகள்!
இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழர்களின் எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. ஒரே இடத்தில் புதைத்து குறுகிய தவறை உணர்த்துவதற்குப் பதிலாக பல இடங்களில் புதைத்து தங்களது விசாலமான போர் முறைகேடுகளை அம்பலப்படுத்திவிட்டார்கள். அன்றைய அவசர கோலம், இன்றைக்கு ஆதார மூலம்.
-சி.வினோதினி, சேலம்.