பொதுநலம்! க.பாலசுப்பிரமணியன்,செய்தி வாசிப்பாளர், ராஜ் நியூஸ்.

மிழில் புலனாய்வு பத்திரிகைகள் பல வந்தாலும், "நக்கீரன்' இதழுக்கு என்று தனி இடம் உண்டு. பிற பத்திரிகைகள் சொல்லத் தயங்குவதை துணிவுடன் சொல்லுவதில் நக்கீரன் என்றும் பின்வாங்கியதில்லை. தி.மு.க. ஆதரவு இதழ் என்று முத்திரை விழுந்தாலும், தி.மு.க.வின் தகிடு தத்தங்களை சுட்டிக்காட்டவும் தவறியதில்லை. தொடர்ந்து நக்கீரனை படிப்பவர்களுக்கு இது புரியும்.

Advertisment

bala

அண்மையில் திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாரிமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இங்கே வேட்பாளரை அறிவித்துவிட்டு, அங்கே மாரிமுத்து மூலம் வழக்கு போட்டது தி.மு.க.தான் என்று நக்கீரன் சொன்னது.

2019, ஜன.19-22 இதழ்:

கொடநாடு மர்மம் தொடர்பாக சாமுவேல் மேத்யூசின் பேட்டி முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி செந்தில்குமார் மட்டுமின்றி தூத்துக்குடி எஸ்.பி. முரளிரம்பாவும் (முன்னாள் நீலகிரி எஸ்.பி) துருவி துருவி விசாரித்தது பற்றிய பின்னணியும் நக்கீரன் தோலுரித்து காட்டியிருக்கிறது.

Advertisment

பொதுநலம் சார்ந்த செய்திகளுக்கு நக்கீரன் முக்கியத்துவம் அளிக்கும் என்பதற்குச் சான்று டப்ஸ்மேஷ், டிக்டோக் காரணமாக சீரழியும் பெண்கள் பற்றிய செய்தியை நக்கீரன் விரிவாக வெளியிட்டிருந்தது. நக்கீரனின் பயணத்தில் என்றைக்கும் பொதுநலமே ஓங்கியிருக்கிறது.

________________

சுளுக்கெடுக்கும் கருத்துகள்!

ராஜாஜி, காமராஜர், கலைஞர் ஆகிய முதுபெரும் தலைவர்களையும் முன்னிலைப்படுத்தியிருந்தார் பழ.கருப்பையா. காமராஜரின் "கே பிளான்' நிகழ்காலத்திற்கேற்ற அரசியல் பாடம். கலைஞர், எதிர்நிலை அரசியலை எங்ஙனம் கையாண்டார், கூட்டணிக்காக பா.ஜ.க. எப்படியெல்லாம் அதிகார மமதை செய்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி, "இது மானங்கெட்ட பிழைப்பு' என அதிரடி கருத்துகளால் சுளுக்கெடுத்திருக்கிறார்.

-எஸ்.வரதராஜன், கோயமுத்தூர்.

டி.ஜி.பி. ரேஸில் முரண்பாடு!

டி.ஜி.பி. ரேஸ்ல தமிழகத்திற்கு மட்டும் திட்டமிட்ட வேகத்தடை போடப்பட்டு வருகிறது. 1988-ஆம் வருட பேட்ஜின் வடதேசத்து இளைய அதிகாரிகளும் டி.ஜி.பி. ஆகிவிட்டார்கள். ஆனால் தமிழகத்தின் 1986-ஆம் வருட பேட்ஜின் மூத்தவர்கள் கோர்ட்டின் தீர்ப்புக்கும் அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி பார்வைக்கும் அல்லல்பட்டு நிற்கிறார்கள். இப்படியான பதவி உயர்வால் அண்ணன்கள் -தம்பிகளாகவும், தம்பிகள் -அண்ணன்களாகவும் முரண்பட்டு தடுமாறுகிறது தமிழக காவல்துறை.

-எம்.வாசுகி, திருச்சி.