மாணவர்களுக்கு பாடப்புத்தகம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல்தான் அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு நக்கீரன் முக்கியம். எதிரணியினரின் அடாவடிகளையும், தவறுகளையும், குற்றங்களையும் எதிரணியினர் நக்கீரன் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.
தவறு செய்கிற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நக்கீரனின் நெற்றிக்கண் பார்வையில் இருந்து தப்பவே முடியாது. நக்கீரன் இதழின் பிறப்பில் இருந்து இன்று வரை புலனாய்வு என்ற முத்திரையை அதன் ஆசிரியர் சேதாரமின்றி கறைபடாமல் துணிச்சலோடு ஏந்தி வருகிறார். இதனால்தான் நக்கீரனுக்கு அதிகார வர்க்கங்கள் கொடுக்கும் நெருக்கடிகள் ஏராளம். அதையும் மண்டியிடாத மானத்தோடு எதிர்கொள்ளும் நக்கீரனின் துணிச்சல் ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் உருவாக வேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்பதில் கலங்கரை விளக்காக நிமிர்ந்து நிற்கும் ஒரே இதழ் நக்கீரன் என்பதால்தான் அதோடு ஒரு வாசகனாக 22 ஆண்டுகளாக தொடருகிறேன்.
2019, ஜன. 09-11 இதழ்:
இதழைத் திறந்ததும் இடைத்தேர்தல் ரத்து ரகசியம், கொண்டையில் இருந்து ஆணி வேர்வரை அந்த சிதம்பர ரகசியத்தை புரிய வைத்துவிட்டது. எடப்பாடி அரசின் முதல் விக்கெட் ஜெயலலிதாவுக்கு நிகராக பாலகிருஷ்ண ரெட்டியின் விக்கெட் வீழ்ச்சியை பதிவு செய்திருப்பது அருமை.
"நீதி நம்ம பக்கமே' உயர்நீதிமன்றம் உறுதி செய்த அந்த தீர்ப்பு நக்கீரனின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த பல வெற்றிகளின் வரிசையில் இன்னொரு மைல் கல். "அடுத்த கட்டம்' பழ.கருப்பையா தொடர் அசத்தல்.
______________
வாசகர் கடிதங்கள்!
ஞாபகத்தில் பதியமிட!
தொழில் -நுட்ப இலகுவான போக்குவரத்து வசதிகள் இல்லாத 1940களிலேயே காந்தியைப் பற்றி ஏ.கே.செட்டியார் எடுத்த "மகாத்மா காந்தி' ஆவணப்படம் ஆச்சரியம்தான். ஆவணப்படத்திற்காக மூன்று கண்டங்கள், மூன்று ஆண்டுகள் பேருழைப்பு என்பது காந்தி மகான் மீது அவருக்கிருந்த அளவிலா பற்றுதலே என்றால் அது மிகையில்லை. ஏ.கே.செட்டியார், அட்டன்பரோ இருவரின் பட நிகழ்வுகளை இளையதலைமுறையின் ஞாபகத்தில் பதியமிட்ட மாவலியாரை முழுமனதோடு வாழ்த்தலாம்.
-ஆ.சிவநேசன், சிவகாசி.
விதிவிலக்கு!
கவிஞர் அப்துல்ரகுமான் குறித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் "தமிழாற்றுப்படை' சிறப்பாக இருந்தது. ஒரு கவிஞன் சமகாலத்தில் இன்னொரு கவிஞரைப் புகழ்வது இல்லை என்பதற்கு கவிப்பேரரசு ஒரு விதிவிலக்கு.
-து.சீனிவாசன், திருப்பூர்.