இந்த வருடம் மிகப்பெரிய ஊழல்கள், பிரச்சினைகள் என்றறியப்பட்ட, சிலைக்கடத்தல் ஊழல், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு ஊழல், நிர்மலாதேவி விவகாரம், ஸ்டெர்லைட் பிரச்சினை, கிறிஸ்டி நிறுவன முட்டை ஊழல், அயனாவரம் சிறுமி பலாத்கார நிகழ்வு உள்ளிட்ட அனைத்தும் தமிழகத்தையே உலுக்கிய நிகழ்வுகள்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் முதன் முதலில் பொதுவெளியில் கொண்டு வந்த நம்பர்.1 புலனாய்வுப் பத்திரிகை நக்கீரனே.
தமிழகத்தில் உள்ள ஊழல் தடுப்பு இயக்குநரகம், நக்கீரன் பத்திரிகையிடம் பாடம் பயின்றால்... தமிழகத்தின் பல இமாலய ஊழல்களை வெளிக்கொணர முடியும்.
புலனாய்வில் மட்டுமல்லாமல், அரசியலில் யார் யாரிடம் கூட்டணி, டெல்லி முதல் சென்னை வரை அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் பத்து நாட்களுக்கு முன்னரே சரியாக கணித்து வாசகர்களுக்கு விருந்து படைப்பது நக்கீரன் மட்டுமே.
2018, டிச.19-21 இதழ்:
கோயில் நகரமான கும்பகோணம் கொலை நகரமாக மாறியது பற்றி பதிவு செய்து காவல்துறையை விழிக்க வைத்தது சிறப்பு.
நெய்வேலியில் கிராமங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட என்.எல்.சி.யின் முகத்திரையைக் கிழித்து கிராம மக்களை காப்பாற்ற முயன்ற நக்கீரனுக்கு பாராட்டுகள்.
கஜா புயல் முடிவடைந்து ஒருமாத காலமாகியும், எங்கோ ஒரு தெருக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் என்று பாராமல் "அனைவரும் நம் தமிழ்நாட்டு மக்கள்' என்றெண்ணி, நிவாரணம் இன்னும் கிடைக்கப் பெறாதவர்களின் நிலையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது சிறப்பு.
என்னைப் பொறுத்தவரை கடந்த 1 வருடமாக நான் நக்கீரனை படித்துவருகிறேன். இனி வரும் காலங்களில் புலனாய்வுத் துறையில் நக்கீரனைத் தவிர வேறெந்த பத்திரிகையையும் படிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
____________________
வாசகர் கடிதங்கள்!
"அட்ஜெஸ்ட்மென்ட்' ரூல்ஸ்!
மதுரை பல்கலைக்கழக பி.எச்.டி. மாணவி யூனிமுத்துவிடம் சில்மிஷ "டச் தெரபி' நடத்தி, தன் பெயருக்கு தானே கேடு சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் கர்ணமகாராஜன். இவர், பல்கலையில் திரைப்படத் துறைக்கும் பொறுப்பாளராக இருப்பதால் சினிமா உலகில் நடக்கும் "அட்ஜெஸ்ட்மென்ட்' ரூல்ஸை இங்கேயும் ஃபாலோ பண்றாரோ?
-ஆ.சிவலிங்கம், ஒரத்தநாடு.
சி.பி.ஐ.க்குப் பயப்படாதவர்கள்!
குட்கா விவகாரத்தில் ஃபெவிகுயிக்கா ஒட்டிக்கொண்டது அ.தி.மு.க. விசாரணையில் சிக்கிக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சி.பி.ஐ.க்குப் பயந்தது மாதிரி தெரியவில்லையே? குற்றவாளிகளாக கருதப்படுகிறவர்கள் சிறைக்கம்பி எண்ணுவார்கள் என்று பார்த்தால், கம்பி அல்ல... பெரிய ராடையே நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
-கே.துரைசாமி, சேலம்.