ஒரு மனிதனின் தைரியத்தை அவனது எதிரியின் தைரியத்தையும் வலிமையையும் வைத்தே தீர்மானிக்கிறோம்.
தங்கள் இலக்கை அடைவதற்காக தங்கள் உயிரைக்கூட பணயம் வைக்கத் தயாராக இருந்த தலைவர்கள்கூட ஜெயலலிதா என்ற பெண்மணியிடம் பம்மினார்கள்; பதுங்கினார்கள்; தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டார்கள். புரட்சியாளர்கள் பலர் ஜெ. எதிரில் நிமிர்ந்து உட்கார அஞ்சினார்கள். இருக்கை நுனியில் அமர்ந்து நெளிந்தார்கள். அந்த ஜெயலலிதா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அராஜகத் தர்பார் நடத்தியபோது, அச்சம் துளியுமின்றி "நீ தப்பு செய்கிறாய்' என்று நெஞ்சை நிமிர்த்தி சுட்டிக்காட்டி எழுதி, இதழியல் அறத்தை நிலைநாட்டிய நக்கீரனின் துணிச்சல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.
சில சமயங்களில் "நக்கீரன்' எழுத்திலும் தலைப்புகளிலும் அதிவேகத்தைக் காண முடிகிறது. என்ன செய்ய? 100 கி.மீ. வேகத்தில் செல்பவனைப் பிடித்து தண்டிப்பதற்கு 120 கி.மீ. வேகத்தில் பயணித்தே தீரவேண்டும். "நக்கீரன்' எழுத்தின் வேகத்தை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன்; கணிக்கிறேன்.
2018, டிசம்பர் 12-14 இதழ்:
திண்ணைக் கச்சேரியில் "கருவில் கொலையான 5100 பெண் சிசுக்கள்' செய்தி கொதிப்பை உண்டாக்கிவிட்டது. அந்தக் கொலைகாரிக்கு முதலிரண்டு முறை கைது செய்தபோதே, சரியான தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தால், இப்படி சிசுக்கொலை சாதனை இழைத்திருப்பாளா? யாரால் இது தொடர்ந்தது? போலீசின் அரிப்பும் நாலாந்தர அரசியல்வாதிகளின் சிபாரிசுகளும்தானே இதற்குக் காரணம்?
மருந்து விற்கிற பதஞ்சலி ராம்தேவுக்கும், இந்த "வாழும் கலை' ரவிசங்கருக்கும் பா.ஜ.க.வும், மத்திய அரசும் அளவுக்கு மீறிய அனுமதிகளைக் கொடுக்கின்றன. பெருவுடையார் கோயிலைக் கட்டிய சோழவேந்தன் சிலைக்கு அந்தக் கோயிலுக்குள் இடமில்லை; அனுமதியில்லை. ஆனால், இவனது தொழில் வளர்ச்சிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நல்லவேளை நீதிமன்றம் தடை விதித்தது. இல்லையென்றால் தமிழகத்தில் அத்தனை கோயில்களை தனக்கான "மார்க்கெட்' ஆக்கிக்கொண்டிருப்பான்.
__________________
வாசகர் கடிதங்கள்!
"உரக்குடில்' -சவக்குழி
மக்கும் குப்பைகளை மறுசுழற்சி மூலம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிற "பசுமை உரக்குடில் திட்டம்' வரவேற்புக்குரிய ஒன்றுதான். "தூய்மை இந்தியா' என்று சொல்லிக் கொண்டு துடைப்பக் கட்டை தூக்குகிறவர்கள் நடுவீட்டில், சாரி... முக்கிய பகுதியில் அசுத்தத்தை சேமித்தால் பொங்கி எழாமல் இருப்பார்களா?
-ப.கிருஷ்ணவேணி, அறந்தாங்கி.
"நாற்காலி' கனவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் "பேட்ட'க்கு பிறகான "நாற்காலி' படம்கூட முதல்வர் நாற்காலிக்கான கண்ணோட்டத்துடன்தான் இருக்கும் என நம்பலாம். மக்கள் மன்ற நிலவரம், நிர்வாகிகள் நியமன விவகாரம் இப்படிப் பலவித செய்திகளை விசாரித்திருப்பதில் இரட்டிப்பு "மகிழ்ச்சி.'
-சிவ.மணிவேல், திருப்பூர்.