பாரதியாருக்கு ஆங்கிலேய அரசு சிறைத்தண்டனை உட்பட பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தது. சுதந்திரத்திற்குப் பின்பு ஜனநாயக அரசுகள் நமது ஆசிரியருக்கு அச்சுறுத்தல், மிரட்டல், வழக்கு, சிறை என நெருக்கடிகள் கொடுத்தன.
இவ்வளவுக்குப் பிறகும் மக்களுக்கான இதழாக புலனாய்வில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது "நக்கீரன்'. நாம் அன்றாடம் தினசரி, வார இதழ்கள் பல படித்தாலும் சில புலனாய்வுச் செய்திகளை நக்கீரனில் படித்தால் மட்டுமே அதன் உண்மைத் தன்மையைப் தெரிந்துகொள்ள முடியும். நக்கீரனைப் படிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. அப்படிப்பட்ட வாசக பெரும்கூட்டம் எப்போதும் உண்டு. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையாக நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வதில் பூரிப்படைகிறேன்.
2018, டிச.5-7 இதழ்:
ராங்-கால் பகுதியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்ட நிகழ்வுகளை அருமையாகப் படம்பிடித்து, செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம் வயிற்றுக்குச் சோறுபோடும் உழவனின் உரிமைக்கு எப்போதும் ஆதரவாக "நக்கீரன்' உள்ளது என்பது பட்டவர்த்தனமாக எப்போதும் வெளிப்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் அவலம் பற்றி மிகஅதிக அளவில் செய்திகளாக்கிய "நக்கீரன்', ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் சிக்கித் தவிக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்திய செய்தி ஆறுதலாக அமைந்திருந்தது.
கலைஞானம், "கேரக்டர்' தொடரில் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் தம்பதி பற்றி இப்போதைய தலைமுறைக்குத் தெரியாத பல தகவல்களைத் தெரியப்படுத்தியுள்ளார். அதை வரவேற்க வேண்டும். கோடி, கோடியாக சம்பாதித்து சொத்து சேர்க்கும் பல நடிகர்களின் மத்தியில்தான் சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்குணம் கொண்ட என்.எஸ்.கே. தம்பதியைப் பற்றி சினிமா துறையில் உள்ளவர்களே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாக அமைந்துள்ளன.
"மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்' என்ற செய்தியில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பேட்டி அருமையிலும் அருமை. "இதிலுமா உங்க அரசியல் த்தூ!' என்ற செய்தியின் மூலம் கஜா புயலினால் கந்தல் கோலத்தில் சிக்கித் தவிக்கும் மக்களின் கோபக்குரலில் அவர்கள் பட்ட ரணங்கள் தெரிகின்றன. அதிலிருந்து மீள எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
________________
வாசகர் கடிதங்கள்!
நற்குணத்தின் நற்செயல்!
"கர்னல்' பாலசுப்ரமணியம், தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவப் பணியில் இருந்தவர். அதனால்தான், "கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டும்' என்கிற அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜாவை பாராட்ட முடிந்திருக்கிறது. நற்குணம் நற்செயலைப் புகழ்கிறது.
-ஆர்.உதயகுமார், துறையூர்.
வலுவிழக்கும் குற்றங்கள்!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் நேர்மையான பணிக்கு உயர்நீதிமன்றம் பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பது, சிலை திருட்டுக் குற்றங்கள் மேலும் வலுவிழப்பதற்கான மறுவாய்ப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது.
-எம்.கோபிநாத், ஜெயங்கொண்டம்.