கணிதத்துறை மாணவனான எனக்கு, இதழியல் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியதே நக்கீரனின் புலனாய்வுக் கட்டுரைகள்தான். புலனாய்வு பற்றிய செய்திகளுக்கு வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டிவந்த நிலையை மாற்றி வீரப்பன் விவகாரம், ஆட்டோ சங்கரின் பின்னணி, பிரேமானந்தா ஆசிரமம் உள்ளிட்ட சமகால நிகழ்வுச் செய்திகளை மாணவர்களான எங்களுக்கு பேராசிரியராய் மாறி வகுப்பு நடத்தத் தொடங்கியது "நக்கீரனே'!
சாமியார் நித்தியானந்தாவின் மற்றொரு முகத்தை வெளிஉலகுக்கு காட்டியது "நக்கீரன்'தான். அன்று சிவகாசி ஜெயலட்சுமி தொடங்கி இன்று நிர்மலாதேவி விவகாரம்வரை சமூகத்திற்கு எதிரான விஷயங்களை நக்கீரன் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறது. இதனால், நக்கீரன் எதிர்கொள்ளும் அவதூறு வழக்குகளும், சவால்களும் ஏராளம். ஆனாலும், இம்மியளவும் தன் புலனாய்வில் இருந்து விலகியதில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து "நக்கீரன்' எழுப்பிய சந்தேகங்கள் அனைத்தும், சாதாரண மக்களையும் யோசிக்க வைத்தது. அதையேதான் இப்போது, விசாரணை ஆணைய நீதிபதியும் சாட்சிகளிடம் கேட்டு வருகிறார்.
2018, நவ.24-27 இதழ்:
"கஜா' புயல் தொடர்பான ஆளுங்கட்சியின் அலட்சியத்தை எடுத்துரைத்துள்ளது. அதேநேரத்தில், ஓய்வின்றி உழைக்கும் மின் ஊழியர்களின் பங்களிப்பையும் நக்கீரன் பாராட்டத்தவறியதில்லை. "வலைவீச்சு' இரண்டு பக்கமும் சிந்தனையைத் தூண்டும் சிறந்த போட்டோ கார்ட்டூன்கள். நாய் மட்டன் செய்தி, மனதைச் சுரண்டிய பயத்தைப் போக்கியது.
_____________________
வாசகர் கடிதங்கள்!
"மாவலி'யின் காந்தியம்!
ஒன்றிலிருந்து மற்றொன்று என்பதுபோல, ஆங்கிலேயர் இந்தியாவுக்குச் செய்த வளர்ச்சிகளைப் பயன்படுத்தியே "வெள்ளையனே வெளியேறு' போன்ற பல்வேறு அஹிம்சைவழிப் போராட்டங்களை சுதந்திரத்திற்காக முன்னெடுத்திருக்கிறார் காந்திஜி. இப்படியான உட்கருவுடன் பயணப்பட்டிருக்கும் "காந்தி தேசம்', ஒருசார்புக் கொள்கையோடு இயங்காமல் பன்முகப் பரவலுடன் நேர்த்தடி போட்டு நடக்கட்டும்.
-பு.மோகன்தாஸ், மதுரை.
வேண்டுதல் -வேண்டாமை!
மோடிக்கு விருப்பமுள்ள சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவைக் காப்பாற்றப் பார்த்தார்கள். ஆனால், இவர்களுக்கு எதிராளியான இயக்குநர் அலோக் வர்மாவின் ஆதரவாளர் சின்ஹா, பா.ஜ.க. அரசு மீது வழக்குப் போட்டு ஆணிவேருக்கே ஆப்பு வைத்துவிட்டார். பல்லுக்குப் பல்!
-சி.ஜனார்த்தனன், கோவை.