தமிழகத்தின் சமூக, அரசியல் களங்களில்... அநியாயங்களை, அநீதிகளை எந்தவித தயக்கமுமின்றி துணிச்சலாகத் தோலுரிக்கும் நக்கீரனின் சேவை அளப்பரியது.
பொதுவாகவே கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது பல்வேறு எதிர்ப்புகளை எதிர்நோக்குகிறார்கள். அந்தச் சமயங்களில் நக்கீரனின் அசாத்தியப் பணி தோழர்களுக்கு துணை நிற்கிறது.
புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கும் மார்க்சிய தத்துவங்களை, மிகவும் எளிமையாக தமிழ்நடையில் தமிழ் மக்களுக்கு எடுத்தியம்பிய நக்கீரனின் பணி மிக மிக போற்றுதலுக்குரியது. அதற்காக ஒரு சல்யூட்.
தமிழ் மண்ணின் கலை, இலக்கிய, கலாச்சாரத்தின் அனுபவங்களில் மூழ்கித்திளைத்து தமிழ் இசையின் அடையாளமாகத் திகழும் இளையராஜா அவர்களையும், அவர் சகோதரர்களின் பணிகளையும் அவர்களின் அனுபவத்தின் வேராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உழைக்கும் மக்களின் மேடைகளைப் பற்றிய ஒரு சிறந்த கலைப்பயண வரலாற்றுத் தொடரையும் நக்கீரன் வழங்கியது.
2018, நவ.21-23 இதழ்:
நெற்களஞ்சியமான டெல்டாவின் மக்களை, அவர்கள் வாழ்வாதாரங்களை இயற்கையும் அரசும் சேர்ந்து வஞ்சித்ததை "கஜா' செய்திக் கட்டுரைகளும் உயிரோட்டமான படங்களும் நெஞ்சம் நெகிழ படம் பிடித்துள்ளன.
சாதீயப் படிநிலைகள், ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமையை உண்டாக்கிவிட்டிருந்தன. சட்டப்படி நீக்கப்பட்டாலும் இன்னும் அந்த ஆணவக் கொடூரங்கள் சில மனிதர்களின் மூளைக்குள் தாண்டவமாடுவதை "சாதி ஆணவத்தின் கொலை வெறி' தோலுரித்துக் காட்டியுள்ளது.
ராஜீவ்காந்தி கொடூரக் கொலைக்கான தண்டனையை அனுபவித்தும், தொடர்ந்து சிறையில் வாடும் 7 தமிழர்களுக்காக தமிழகம் குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் காலத்தில்,அதைப் பற்றிக் கவலைப்படாமல் மூன்று மாணவிகளை எரித்துக்கொன்றவர்களை ஆளுநர் விடுவித்திருப்பதும், தமிழகம் குமுறுவதும் "7 பேர் சிறையில் 3 பேர் வெளியில்' செய்தி ஆய்வு செய்திருக்கிறது.
____________________
வாசகர் கடிதங்கள்!
சுவரேறிய வீராப்பு!
ஓட்டு கேட்டு வரும்போது வீராப்பா வர்றாங்க. ஆனா "கஜா' புயல் மாதிரி மக்களுக்குனு ஓர் ஆபத்து வந்தா சுவரேறிக் குதிச்சு ஓடுறாங்க, நம்ம அமைச்சர் ஓ.எஸ்.மணியனைப் போல.
-ஐ.முனியப்பன், கச்சிராப்பாளையம்
ர.ர.க்களின் கொதிநிலை!
"மந்திரி முன்னிலையில் பட்டுவாடா ஃபைட்' கன ஜோர். கட்சிக்காக உழைச்சவங்கள கண்டுக்காம மாற்றுக் கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிட்டு பதவி கொடுத்தால், ரத்தத்தின் ரத்தம் கொதிக்காதா பின்னே?
-வெ.அழகுதுரை, விழுப்புரம்.